Sunday, September 13, 2026

கோலாலம்பூரில் மிலாது நபி ஊர்வலம்!

இன்று ஆகஸ்ட் 29 சனிக்கிழமை காலையில் கோலாலம்பூர் மஸ்ஜித் இந்தியா பகுதியில் நடைபெற்ற மிலாது நபி (Maulidur Rasul) ஊர்வலம் மிகச் சிறப்பாக நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் மார்க்க அறிஞர்கள், இஸ்லாம் அரசுசாரா அமைப்புகளின் பொறுப்பாளர்கள், பெரியோர் சிறியோர் மகளிர், சமயக் கல்வி மாணவர்கள், சுற்றுவட்டார பள்ளிவாசல்- சூராவ்-களின் நிர்வாகிகள் என ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

இந்திய முஸ்லிம் சமூகத்தை ஒன்றி-ணைக்கும் நோக்கில் நடைபெற்ற இந்த ஊர்வலம் மஸ்ஜித் இந்தியாவில் தொடங்கி, ஜாலான் துங்கு அப்துல் ரகுமான், ஜாலான் துன் பேராக், லெபோ அம்பாங் என மஸ்ஜித் இந்தியா பள்ளிவாசலை சுற்றியுள்ள முக்கிய சாலைகளில் 6 கி.மீ. பாதையை கடந்து சென்றது.

இந்த நிகழ்ச்சியில் கோலாலம்பூர் கூட்டுரசுப் பிரதேசம், சிலாங்கூர் மாநிலங்களை தவிர நெகிரி செம்பிலான், மலாக்கா ஜோகூர், பேராக், பினாங்கு, கிளந்தான் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தெல்லாம் முஸ்லிம் சமய அன்பர்கள் ஆர்வத்துடனும் எழுச்சியுடனும் கலந்து கொண்டனர்.

இந்திய முஸ்லிம் சமூகத்தை ஒன்றிணைப்-பதும் நபி முஹம்மது (ஸல்) அவர்களின் வாழ்க்கை மற்றும் போதனைகளை நினைவுகூருதலும் இந்த ஊர்வல நிகழ்ச்சியின் முக்கிய அம்சமாகும்.

நபி முகம்மது (ஸல்) அவர்களின் பிறந்த நாளை நினைவுகூரும் விழா என்பதுடன் இதன் தொடர்பில் நடைபெற்ற ஊர்வலத்தில் சலாவாட் (Salawat) பாடல்களைப் பாடுவது, மலேசிய தேசியக் கொடி-ஜாலூர் கெமி-லாங்கை ஏந்துதல், சமூக ஒற்றுமையை நிலை நாட்டுதல், மற்றும் மதப்பண்பாட்டை வலியுறுத்துதல் என முக்கியமான நிகழ்ச்சிகள் இடம்பெற்றன.

தொடர்ந்து 11 வது ஆண்டாக நடைபெறும் இந்த மீலாது நபி ஊர்வலம் இடையில் இரண்டு ஆண்டுகளில் மட்டும் நிறுத்தப் பட்டது.

கோவிட் பெருந்தொற்று பரவிய ஆண்டிலும் அண்மையில் ஆந்திரப் பிரதேசத்தை சேர்ந்த விஜயலட்சுமி என்னும் பயணி, மஸ்ஜித் இந்தியா கால்நடைப் பகுதியில் நடந்து கொண்டிருந்த பொழுது திடீரென நிலத்தி-னுள் அமிழ்ந்து காணாமல் போன துயர ஆண்டிலும் இந்த விழா நடைபெறவில்லை.

தவிர மற்ற ஆண்டுகளில் தொடர்ந்து இந்த விழா சுற்றுவட்டார முஸ்லிம் சமய அமைப்பு-களின் ஆதரவுடனும் முஸ்லிம் அரசுசாரா அமைப்புகளின் ஒத்துழைப்-போடும் குறிப்பாக சமய அன்பர்களின் ஈடுபாட்டு-டனும் இந்த நிகழ்ச்சி தொய்வின்றி நடைபெறுவதாக ஏற்பாட்டுக் குழுவினர் தெரிவித்தனர்.

மலேசிய இந்திய முஸ்லிம் சமுதாயத்தின் தேசிய அடையாளமாக விளங்குகின்ற கோலாலம்பூர் மஸ்ஜித் இந்தியா பகுதியில் இருந்து புறப்பட்ட ஊர்வலம் புறப்பட்ட இடத்திற்கே வந்தடைந்தபின் இந்த நிகழ்ச்சிக்கு உறுதுணையாக இருந்த கோலாலம்பூர் மாநகர் மன்ற அதிகாரிகள், காவல் படையினர் உள்ளிட்ட தரப்பினருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.

செய்தி சம்பந்தப்பட்ட உங்கள் கருத்தை பதிவு செய்ய "வாட்சாப்" பட்டனை அழுத்துங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

அதிகம் பகிரப்பட்டவை