இன்று ஆகஸ்ட் 30 — பன்னாட்டு காணாமல் போனோர் நாள்!

கோலாலம்பூர், ஆகஸ்ட் 30:
இதே நாளில், நேபாளம்–திபெத்திய எல்லைப் பகுதியில் ஏற்பட்ட பேரழிவில் 55 மலேசியர்கள் உட்பட ஆயிரத்திற்கும் மேற்-பட்டோர் காணாமல் போயிருப்பது இந்த நாளின் வலியை இன்னும் ஆழமாக்குகிறது.
இமயமலை அடிவாரத்து கைலாச மலைப் பகுதிக்கு ஆன்மீக சுற்றுப்பயணம் மேற் கொண்ட 55 மலேசியர்களுக்காக காத்திருக்கும் குடும்பங்கள்!

கைலாச மலைக்கு ஆன்மீக பயணம் மேற்கொண்டு காணாமல் போனோரின் குடும்பத்தினர் நேற்று பத்துமலையில் அணி திரண்டனர்; உள்ளத்தில் தேங்கிய சோகத்தை முகத்தில் வெளிப்படுத்திய வண்ணம் அமர்ந்திருந்த குடும்பத்தி-னரைக் காண துயரம் இன்னும் மேலிட்டது…
உலகம் முழுவதும் காணாமல் போனவர்-களின் நிலை குறித்து கவனம் செலுத்தும் சர்வதேச காணாமல் போனோர் நாள் இன்று அனுசரிக்கப்படும் நிலையில், நேப்பாளத்-தில் ஏற்பட்ட பேரழிவுக்குப் பின்னர் மலேசியாவைச் சேர்ந்த 55 பேர் தொடர்பு இல்லாமல் இருப்பது பெரும் கவலையையும் வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது.
இமயமலையின் புனிதப் பகுதிகளில் ஒன்றான கைலாச மலைக்கு ஆன்மீகப் பயணம் மேற்கொண்ட மலேசியர்கள் உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த யாத்திரிகர்கள், கடந்த புதன்கிழமை நேபாளம்–திபெத் எல்லைப் பகுதியில் ஏற்பட்ட திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கியுள்ளனர்.

குறிப்பாக, கைலாச யாத்திரைக்குச் சென்ற 17 மலேசியர்கள் இந்தப் பேரழிவுக்குப் பின்னர் தொடர்பு கொள்ள முடியாத நிலையில் இருப்பதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்த முதற்கட்ட தகவல் அதற்கு மேல் எந்த முன்னேற்றமும் இன்றி தொடர்கிறது; இந்த துயர நிலை 100 மணி நேரத்தை எட்டு இருக்கிறது.
அவர்களில் ஒரேக் குடும்பத்தைச் சேர்ந்த-வர்களும் இருப்பதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

மலேசிய வெளியுறவு அமைச்சகத்திடம் கிடைத்த தகவலின்படி, நேப்பாளத்தில் மொத்தம் 55 மலேசியர்கள் தொடர்பு இல்லாதவர்களாக பதிவு செய்யப்பட்டு உள்ளனர். ஆனால், அவர்களில் யாரும் உயிரிழந்ததாக இதுவரை அதிகாரப் பூர்வமாக உறுதிப்படுத்தப்பட வில்லை என்பது, சம்பந்தப்பட்ட குடும்பங்களின் மனதில் நம்பிக்கையை உயிர்ப்புடன் வைத்திருக்கிறது.
ஒரு பக்கம், இமயமலைப் பாதைகளில் மீட்புப் பணிகள் தொடர்கின்றன. மறுபக்கம், மலேசியாவில் உள்ள குடும்பங்கள் ஒவ்வொரு தொலைபேசி அழைப்பையும், ஒவ்வொரு செய்தியையும், ஒவ்வொரு சமூக ஊடகத் தகவலையும் எதிர்பார்த்து கண்கலங்கிக் காத்திருக்கின்றன.

“அவர்கள் எங்கே இருக்கிறார்கள்? உயிருடன் இருக்கிறார்களா?” என்னும் இரண்டு கேள்விகளே இப்போது அந்தக் குடும்பங்களின் ஒவ்வொரு நொடியையும் ஆக்கிரமித்துள்ளன.
இந்தப் பேரழிவு சாதாரண வெள்ளம் அல்ல. பனிப்பாறைச் சரிவு; அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட பெருவெள்ளம் நேபாளம் மற்றும் திபெத்திய பகுதிகளில் பெரும் அழிவை ஏற்படுத்தியுள்ளது.
சாலைகள், பாலங்கள் உள்ளிட்ட முக்கிய-மான கட்டமைப்புகள் சேதமடைந்ததால் தொலைதூரப் பகுதிகளுக்குச் சென்று மீட்புப் பணிகளை மேற்கொள்வதும் பெரும் சவாலாகியுள்ளது.
கைலாச மலை என்பது வெறும் ஒரு மலை அல்ல. இந்து, புத்த, ஜைன மற்றும் திபெத்-திய பான் ஆன்மீக மரபுகளைப் பின்பற்று-வோருக்கு அது ஆழமான ஆன்மீகப் புனிதத்தைக் கொண்ட இடமாகும்.

இதே காசு யாத்திரைக்கு சென்னையில் இருந்து புறப்பட்டவர்கள்.. .
அந்தப் புனிதப் பயணத்தை மேற்கொண்ட-வர்களின் பாதையில் இயற்கையின் பேரழிவு குறுக்கிட்டிருப்பது, இந்தச் சம்பவத்தை இன்னும் சோகமானதாக மாற்றியுள்ளது.
காணாமல் போனோர் நாள் சொல்லும் கண்ணீர் செய்தி ஒவ்வோர் ஆண்டும் ஆகஸ்ட் 30ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது .
பன்னாட்டு காணாமல் போனோர் நாள், தங்கள் அன்புக்குரியவர்கள் எங்கே இருக்கி-றார்கள் என்பது தெரியாமல் வாழும் குடும்பங்களின் துயரத்தை உலகின் கவனத்திற்கு கொண்டு வரும் நாளாகும்.
போர், இயற்கைப் பேரழிவு, விபத்து, வன்முறை, இடம்பெயர்வு என பல்வேறு காரணங்களால் ஒருவர் காணாமல் போகலாம். ஆனால் அவரைக் காண முடியாத ஒவ்வொரு நாளும், சம்பந்தப்பட்டவருடைய குடும்பத்தினருக்கு முடிவில்லாத ஒரு காத்திருப்பாகவே மாறிவிடுகிறது.
இன்று உலகம் காணாமல் போனவர்களை நினைவுகூரும் நாள். அதே நாளில், மலேசி-யாவின் 55 குடும்பங்கள், தங்கள் அன்புக்கு-உரியவர்களின் செய்திக்காகக் காத்திருக்-கின்றன.

நேப்பாள-திபெத்திய எல்லையில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி ஒருவழியாக மீண்டு கடந்த வெள்ளிக்கிழமை சென்னைக்கு திரும்பியவர்கள்; இவர்களைப் போல மலேசிய ஆன்மீகப் பயணியரும் தாயகம் திரும்பி வரவேண்டும் என்று குமரி நல்லாள் எதிர்பார்க்கிறாள்.!
அவர்களுக்கு இன்று ஒரு நாள் மட்டுமல்ல…
ஒவ்வொரு நிமிடமும் ஒரு பிரார்த்தனை.
ஒவ்வொரு தொலைபேசி அழைப்பும் ஒரு நம்பிக்கை.
ஒவ்வொரு கதவு தட்டுதலும் — “அவர்கள் திரும்பி வந்துவிட்டார்களா?” என்ற எதிர் பார்ப்பு.
இமயமலையின் பனிமலைகளுக்கு அப்பால், வெள்ளத்தால் துண்டிக்கப்பட்ட அந்தப் பாதைகளில் மீட்புப் படையினர் தேடிக் கொண்டிருக்கிறார்கள். இங்கே மலேசியாவில், அவர்களின் குடும்பத்தினர் இறைவனை நோக்கி கைகளை உயர்த்திக் கொண்டிருக்கிறார்கள்.
“காணாமல் போனவர்கள்… காணாமல் போய்விடவில்லை. அவர்களை எதிர்பார்த்து காத்திருக்கும் இதயங்கள் இருக்கும் வரை, அவர்களின் இருப்பும் நம்பிக்கையும் உயிரோடு இருக்கும்.”
இந்த சர்வதேச காணாமல் போனோர் நாளில், கைலாசப் பயணத்தில் தொடர்பை இழந்த 55 மலேசியர்களும் பாதுகாப்பாக மீட்கப்பட்டு, தங்கள் குடும்பங்களிடம் மீண்டும் சேர வேண்டும் என்பதே இன்று மலேசிய மக்களின் ஒருமித்த பிரார்த்தனையாக இருக்கட்டும். 🙏
— குமரி வான் முற்ற சிறப்புச் செய்தி


