
ஒரு மன்னன் பிறக்கும்போது அவனுடன் எந்த அதிகாரமோ அல்லது நாடோ உடன் பிறப்பதில்லை;
ஆனால் சில மன்னர்கள் வாழ்ந்து முடிக்கும் போது, அவர்கள் வாழ்ந்த காலமே ஒரு வரலாற்றுக் காலமாக மாறிவிடுகிறது. அப்படிப்பட்ட ஒரு மன்னன்தான் பிரான்சு தேசத்தின் பதினான்காம் லூயி.
உலக வரலாற்றில் மிக நீண்ட காலம் ஆட்சி செய்த மன்னர்களில் முதன்மையானவராகத் திகழும் இவர், ஏறக்குறைய முக்கால் நூற்றாண்டு காலம் சரியாக சொல்ல வேண்டும் என்றால், 72 ஆண்டு காலம் இடைநில்லாமல் பிரான்ஸ் நாட்டை அவர் ஆண்டிருக்கிறார்.
1715ஆம் ஆண்டு செப்டம்பர் 1ஆம் நாள், தன்னுடைய 77-ஆவது வயதில் இவர் மறைந்தார்.
1638ஆம் ஆண்டு செப்டம்பர் 5ஆம் நாள் பிரான்சின் Saint-Germain-en-Laye அரண்மனையில் பிறந்த லூயி, தன் நான்காவது வயதிலேயே பிரான்சின் மன்னராக அரியணை ஏறினார்.
ஒரு குழந்தையின் கைகளில் மன்னராட்சி வந்தபோது, நாட்டின் உண்மையான நிரு-வாகப் பொறுப்பு அவரின் தாயார் ஆஸ்திரி-யாவின் ஆன் மற்றும் கார்டினல் மசாரின் ஆகியோரிடம் இருந்தது.
ஆனால் காலம் அவரை வளர்த்தது; அதிகாரம் அவரை வடிவமைத்தது; இறுதியில் பிரான்சின் ஆட்சியை தனது கைகளில் முழுமையாக எடுத்துக் கொண்டார்.
1661-ஆம் ஆண்டு கார்டினல் மசாரின் மறைந்தபோது, லூயி ஒரு முக்கியமான முடிவை எடுத்தார். இனி தனக்குப் பதிலாக ஆட்சி செய்யும் தலைமை அமைச்சரை நியமிக்காமல், அரண்மனை அதிகாரத்தை தானே ஏற்று நாட்டை வழிநடத்தத் தொடங்கினார். அங்கிருந்துதான் “சூரிய மன்னன்” என்று அழைக்கப்பட்ட லூயி XIV-ன் உண்மையான சகாப்தம் தொடங்கியது.
“L’État, c’est moi” — “நானே அரசு” என்று அவர் கூறியதாகப் பரவலாகச் சொல்லப்படும் வாசகம், அவருடைய மையப்படுத்தப்பட்ட அரச அதிகாரத்தின் அடையாளமாக வரலாற்றில் நிலைத்துவிட்டது.
அந்த வார்த்தைகள் உண்மையில் அவர் சொன்னவையா என்பது குறித்து வரலாற்றாசிரியர்களிடையே விவாதம் இருந்தாலும், அவரின் ஆட்சியின் தன்மையை அது அழகாக பிரதிபலிக்கிறது.
‘பிரான்சை ஒரு வலிமையான ஐரோப்பிய சக்தியாக மாற்றுவது’தான் அவரின் கனவாக இருந்தது.
அதற்காக நிர்வாகத்தைச் சீரமைத்தார்; பொருளாதாரத்தையும் வர்த்தகத்தையும் வளர்க்க முயன்றார்; பிரான்சு ராணுவத்தை வலுப்படுத்தினார். அதே நேரத்தில் கலை, இலக்கியம், இசை, கட்டிடக்கலை ஆகியவற்றுக்கும் மிகப்பெரிய ஆதரவு வழங்கினார்.
மொலியேர், ராசின், லுல்லி போன்ற கலைஞர்களின் காலமாகவும் அவரின் ஆட்சிக் காலம் விளங்கியது.
ஆனால், லூயியின் பெயரை உலக வரலாற்றில் நிரந்தரமாகப் பதித்த மிகப்பெரிய சின்னம் ஒன்று என்றால் அது வெர்சாய்ஸ் அரண்மனைதான்;
ஒரு காலத்தில் சிறிய வேட்டையாடும் மாளிகையாக இருந்த இடத்தை, உலகம் வியக்கும் அளவுக்கு பிரம்மாண்டமான அரண்மனையாக மாற்றினார். ஆயிரக்கணக்கான மனிதர்களின் உழைப்பால் உருவான அந்த அரண்மனை, பிரான்சின் அரச அதிகாரத்தின் மகத்துவத்தையும், மன்னராட்சியின் ஆடம்பரத்தையும் உலகுக்கு வெளிப்படுத்தியது.
1682ஆம் ஆண்டு அரசவையை வெர்சாய்ஸுக்கு மாற்றியதன் மூலம், பிரான்சு அரசியலின் மையமாகவே அதை மாற்றினார்.
அரண்மனை சுவர்களில் அவரின் வெற்றிகள் வரையப்பட்டன; தோட்டங்களில்கூட அவர் அதிகாரத்தின் பெருமை பிரதிபலித்தது; அரசவையில் இருந்த பிரபுக்கள் மன்னரைச் சுற்றியே தங்கள் வாழ்க்கையை அமைத்துக்கொள்ள வேண்டிய சூழல் உருவானது. ஒரு மன்னன் தன் அரண்மனையையே அரசியல் கருவியாக பயன்படுத்தியதற்கு வெர்சாய்ஸ் மிகப்பெரிய எடுத்துக்காட்டாக அமைந்தது.
ஆனால் ஒவ்வொரு பேரரசின் பிரகாசத்திற்குப் பின்னாலும் ஒரு நிழல் இருக்கும். லூயி XIV, பல போர்களில் ஈடுபட்டார். பிரான்சின் எல்லைகளையும் செல்வாக்கையும் விரிவுபடுத்திய இந்தப் போர்கள், நாட்டின் பொருளாதாரத்தின்மீது பெரும் சுமையையும் ஏற்படுத்தின.
1685ஆம் ஆண்டு Nantes ஆணையை
(‘Nantes ஆணை’ (Edict of Nantes) என்பது, 1598-இல் பிரான்சு மன்னர் ஹென்றி IV-நான்காம் ஹென்றி வெளியிட்ட மதச்சார்பற்ற சட்டம்; இது பிரான்சில் புராட்டஸ்டண்ட் ஹியூகனோட்களுக்கு (Huguenots) மத சுதந்திரம் வழங்கியது.)
ரத்து செய்ததும் அவரது ஆட்சியின் மிகவும் சர்ச்சைக்குரிய நடவடிக்கைகளில் ஒன்றாக அமைந்தது. இதனால் பிரான்சின் புராட்டஸ்டன்ட் ஹியூகெனாட்கள் பலர் நாட்டைவிட்டு வெளியேறினர்.
அதிகாரம், ஆடம்பரம், போர், கலை, மதம், அரசியல்—இவை அனைத்தும் கலந்த ஒரு நீண்ட வரலாற்றுப் பயணமாக இருந்தது லூயி XIV-ன் வாழ்க்கை.
72 ஆண்டுகளுக்கும் மேலாக..!
ஒரு மனிதனின் வாழ்க்கை முற்று பெறாத அளவுக்கு நீண்டதாகத் தோன்றும் காலத்தை அவர் ஒரு நாட்டின் அரியணையில் கழித்தார்.
1643ஆம் ஆண்டு தொடங்கிய அவரின் ஆட்சி 1715ஆம் ஆண்டுவரை நீடித்தது. அவர் இறந்தபோது, அவரை அரியணையில் அமர்ந்தபடி பார்த்திருந்த பல தலைமுறைகள் ஏற்கெனவே மறைந்து போயிருந்தன.
இத்தனை நீண்ட காலம் ஆட்சி செய்ததால், பிரான்சில் பிறந்த பலருக்கு அவர்கள் வாழ்நாள் முழுவதும் வேறு ஒரு மன்னரைப் பார்க்கவே வாய்ப்பு இல்லாமல் இருந்தது.
ஆனால் வரலாற்றின் மிகப் பெரிய முரண்பாடு என்ன தெரியுமா?
உலகை வியக்க வைத்த அந்த சூரிய மன்னனின் வாழ்க்கையும் ஒருநாள் சூரிய அஸ்தமனத்தை சந்தித்தது.
1715ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் அவரது உடல்நிலை மோசமடைந்தது. செப்டம்பர் 1ஆம் நாள் வெர்சாய்ஸ் அரண்மனையில் அவரின் நெடிய வாழ்க்கை முடிவுக்கு வந்தது.
தன் 77-ஆவது பிறந்தநாளை எட்டுவதற்கு, அதாவது 78 வயதை தொடுவதற்கு வெறும் நான்கு நாட்களுக்கு முன்பே அவர் மறைந்தார்.

அவர் இறந்தபோது அவருக்குப் பிறகு அரியணை ஏற அவரின் கொள்ளுப் பெயரன் தயாராக இருந்தான்,
அந்த நேரத்தில் ஐந்து வயது குழந்தையாக இருந்த பதினைந்தாம் லூயி, இடைக்கால அரசின் உதவியுடன் அரண்மனையில் பொம்மையைப் போல கொலு கொண்டிருந்த நிலையில் வெகு காலத்திற்கு பின்னர்தான் பிரான்சின் மன்னரானார்.
ஒரு சிறுவன் மன்னராகப் பிறந்தான்; ஒரு முதிய மன்னன் வரலாற்றில் மறைந்தான். அவர்களுக்கு இடையில் 72 ஆண்டுகளுக்கும் மேலான ஒரு ஆட்சி இருந்தது.
பதினான்காம் லூயி மன்னனின் வாழ்க்கையை நாம், ஒரு மன்னனின் வாழ்க்கையாக மட்டும் பார்க்க முடியாது. அது அதிகாரம் எவ்வளவு உயரத்திற்கு செல்ல முடியும் என்பதற்கும், அதே அதிகாரம் ஒரு நாட்டின் மீது எவ்வளவு பெரிய சுமையை ஏற்படுத்த முடியும் என்பதற்கும் ஒரு வரலாற்றுப் பாடம்.
வெர்சாய்ஸ் அரண்மனையைப் பார்க்கும்போது அவரின் பெருமை தெரிகிறது. பிரான்சின் அரசியல் வரலாற்றைப் படிக்கும்போது அவரது அதிகாரம் தெரிகிறது. அவரது போர்களைப் படிக்கும்போது அந்த அதிகாரத்தின் விலை தெரிகிறது. அவர் மறைந்த நாளை நினைக்கும்போது, எவ்வளவு நீண்ட ஆட்சியாக இருந்தாலும் ஒரு மனிதனின் வாழ்க்கைக்கு ஒரு முடிவு உண்டு என்பதும் புரிகிறது.
செப்டம்பர் 1 — சூரிய மன்னன் மறைந்த நாள்.
ஆனால் அவர் மறைந்தாலும், அவர் உருவாக்கிய பிரான்சின் வரலாற்றுச் சகாப்தம் மறையவில்லை. வெர்சாய்ஸின் கண்ணாடி மண்டபத்தில் விழும் ஒவ்வொரு ஒளிக்கதிரும், இன்னும் பல நூற்றாண்டுகளுக்குப் பிறகும், ஒருகாலத்தில் “சூரியன்” என்று தன்னை உலகிற்கு அறிவித்த ஒரு மன்னனின் கதையைச் சொல்லிக்கொண்டிருக்கிறது.
மனிதன் மறைகிறான்…
அதிகாரமும் மறைகிறது…
ஆனால் வரலாறு மட்டும் மறைவதில்லை.
— குமரி வான் முற்றம் 🌹


