
(குமரி வான்முற்றத்தின் பன்னாட்டுப் பார்வை)
இந்த ஆண்டு நிறைவுக் கட்டத்தில் ஐ.நா. மன்றத்தின் புதிய பொதுச் செயலாளர் பதவிக்கான தேர்தல் நடைபெற உள்ளது. இந்த முறையாவது, இந்த பன்னாட்டு அமைப்பிற்கு ஒரு பெண் தலைவராக (பொதுச் செயலராக)ப் பொறுப்பேற்பாரா என்னும் பேராவலும் எதிர்பார்ப்பும் உலக ஜனநாயக சிந்தனையாளர் மட்டத்திலும் பன்னாட்டு ஜனநாயக செயற்பாட்டாளர் வட்டத்திலும் எழுந்துள்ளது.
ஐக்கிய நாடுகள் மன்றம்(ஐநா சபை) என்பது, உலக அமைதியைப் பேணவும் நாடுகளுக்கு இடையே நட்புறவை வளர்க்கவும் உருவாக்-கப்பட்ட ஒரு பன்னாட்டு அமைப்பாகும்.
2-ஆம் உலகப் போருக்குப் பின் உருவான இந்த அமைப்பு, 1945-ஆம் ஆண்டு அக்டோபர் 24-ஆம் நாள் அதிகாரப்பூர்வமாக நடை முறைக்கு வந்தது. இதன் தலைமையகம் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் அமைந்துள்ளது
ஐநா சபையின் பாதுகாப்புக் குழுவில் இடம்பெற்றுள்ள அமெரிக்கா, ரஷ்யா, சீனா, பிரிட்டன், பிரான்சு ஆகிய ஐந்து நாடுகள் இந்த அமைப்பை ஆக்கிரமித்து ஆட்டிப்படைத்தாலும் அமெரிக்காவின் மேலாண்மையில்தான் இந்த அமைப்பு இன்னமும் சிக்குண்டு கிடக்கிறது.
2017 முதல் இந்த அமைப்பின் பொதுச் செயலராக செயல்படும் அந்தோனியோ குத்ரெஸ், போர்த்துக்கல்(போர்ச்சுக்கல்) நாட்டைச் சேர்ந்தவர். இரு தவணைகளாக தொடர்ந்து பத்து ஆண்டு காலம், ஐநா மன்றத்தை வழிநடத்தும் இவரின் பதவிக் காலம் இந்த ஆண்டுடன் முடிவுபெற இருப்பதால், 2027 ஜனவரி முதல் நாள், புதிய பொதுச் செயலாளர் பதவியேற்க உள்ளார்.
ஐநா மன்றத்தின் அடுத்த பொதுச் செயலருக்கான தேர்தல் 2026 டிசம்பர் மாதத்தில் நடைபெற உள்ள நிலையில், இதுவரை ஆறுபேர் களம் இறங்கி உள்ளனர். இவர்களில் நான்கு பேர் பெண்கள் என்பது குறிப்பிடத் தக்கது. இது சற்று ஆறுதலான தகவலும்கூட;
எண்பது ஆண்டுகளை நிறைவு செய்துவிட்ட ஐநா மன்றத்தை இதுவரை 10 பேர் வழிநடத்தினாலும், இதுவரை ஒரு பெண்கூட இந்த மன்றத்தை வழிநடத்த வில்லையென்பது மிகுந்த வருத்தத்திற்கு உரியது; இதுவரை ஆணாதிக்கம் நிறைந்துள்ள ஐநா மன்றத்திதை, அடுத்து வழிநடத்த வருபவராவது பெண்ணாக இருப்பாரா என்ற ஆவல், பன்னாட்டு சமூகத்தில் பரவலாக எழுந்துள்ளது.
இவ்வாண்டு போட்டியில் பெண்கள் முன்னிலை வகிக்கின்றனர். நான்கு பெண்களும் இரண்டு ஆண்களும் களத்தில் உள்ள நிலையில், வரலாற்றில் முதன்முறையாக ஒரு பெண், ஐநா பொதுச் செயலாளர் பொறுப்பிற்கு தேர்ந்தெடுக்கப்படும் வாய்ப்பு மிகுந்திருப்பதாகக் கருதப்படுகிறது.

இந்த அமைப்பு தோற்றம் கண்டபொழுது, இடைக்கால பொதுச் செயலராக(பொறுப்பு) பதவி ஏற்றவர், ஐக்கிய இராச்சியத்தின் (இங்கிலாந்து) க்ளாட்வின் ஜெப்(Gladwyn Jebb) ஆவார்.
1946-இல் புதிய பொதுச் செயலாளராக நோர்வே நாட்டின் டிரிக்வி லீ (Trygve Lie) தேர்ந்தெடுக்கப்படும்வரை ஏறக்குறைய ஓராண்டு காலத்திற்கு இந்த புதிய பன்னாட்டு அமைப்பை மிகவும் கவனமாக வழிநடத்தினார் க்ளாட்வின் ஜெப்.

டிரிக்பி லீ, 1952-வரை ஆறாண்டு காலம் ஐநா மன்றத்தை வழிநடத்தினார்; அவருக்குப் பின் வந்த டெக் ஹாமர்ஷெல்ட் (Dag Hammarskjöld), 1953 முதல் 1961-ஆம் ஆண்டுவரை தலைமை ஏற்றிருந்தார். இவர் சுவீடன் நாட்டைச் சேர்ந்தவர்.

நான்காவது பொதுச் செயலராக வந்தவர் ஆசிய மண்டலத்தைச் சேர்ந்தவர். இவருக்கு மலேசியாவில் சிறப்பு செய்யப்பட்டுள்ளது. தலைநகரில் ஒரு சாலைக்கு இவரின் பெயர்(Jalan U Thant) சூட்டப்பட்டுள்ளது.

அன்றைய பர்மா இன்றைய மியன்மாரைச் சேர்ந்த யூ தாண்ட், ஒரு சிறந்த அரசதந்திரி ஆவார்; 1961 முதல் 1971வரை பத்தாண்டு காலத்திற்கு இந்த உலக அமைப்பை அவர் வழிநடத்தினார். அந்த காலக்கட்டத்தில் குளிர்போர்(Cold War) உச்சத்தில் இருந்தது; குறிப்பாக கியூபா ஏவுகணை நெருக்கடி (1962) மற்றும் வியட்நாம் போர் போன்ற உலகளாவிய சிக்கல்களில் நடுநிலைமை வகித்து, சமரசம் தேடுவதில் முக்கிய பங்கு வகித்தார். அவரின் பங்களிப்பை நினைவு-கூரும் வகையில், மலேசியாவின் பாரம்பரிய தலைநகரான கோலாலம்பூரில் ஒரு முக்கிய சாலைக்கு அவரின் பெயர் சூட்டப்பட்டது

அவருக்குப் பின் ஐந்தாவாது பொதுச் செயலராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஆஸ்திரியா நாட்டின் கர்ட் வால்ட் ஹெய்ம்(Kurt Waldheim); இவரும் இரு தவணைக் காலத்திற்கு(1972-1981) இந்த உலக சமாதான அமைப்பிற்கு தலைமை ஏற்றிருந்தார்.

ஆறாவது பொதுச் செயலர் ஜேவியர் பெரஸ்ஸும்(Javier Pérez de Cuéllar) இரு தவணைக் காலத்திற்கு(1982-1991) இந்த அமைப்பை வழிநடத்தினார்.

ஏழாவது பொதுச் செயலராக வாய்த்த புத்ரோஸ் புத்ரோஸ்-காலி (Boutros Boutros-Ghali), ஒரு தவணைக்கு மட்டும்(1992-1996) பொறுப்பு வகித்தார். எகிப்து நாட்டைச் சேர்ந்த அரசியல் தலைவர் இவர்.
அவருக்குப் பின் ஆப்பிரிக்க மண்டலத்தைச் சேர்ந்த ஒருவர், இரு தவணைக் காலத்திற்கு ஐநா மன்றத்தை வழிநடத்தினார். இவர் பதவி வகித்த காலத்தில் மிகவும் புகழுடன் விளங்கியதைப் போல, இவர் பதவி விலகிய பின்னும் உலக ஊடகத்தில் மிகவும் பேசப்பட்டதற்குக் காரணம் ‘ஊழல்’ என்னும் சிக்கல்; ஐநா மன்றத்தை 20-ஆம் நூற்றாண்டோடும் 21-ஆம் நூற்றாண்டோடும் இணைத்த கோபி அன்னான்தான்(Kofi Annan) அவர். கானா நாட்டைச் சேர்ந்த இவர் 1997 முதல் 2006-ஆம் ஆண்டுவரை ஐநா சபையை வழிநடத்தினார்.

இவர் பொறுப்பு வகித்த காலத்தில், ஒரு குத்தகைப்பணி தொடர்பில், தன் மகனுக்கு சலுகை வழங்கினார் என்ற குற்றச்சாட்டு பெரிதும் பேசப்பட்ட்து.
தென் கொரியாவைச் சேர்ந்த பான் கி மூன்-Ban Ki-moon, ஒன்பதாவது பொது பொதுச் செயலராக விளங்கினார்; இவரும் இரு தவணைக்கு(2007-2016) பொறுப்பேற்றி-ருந்தார். பத்தாவது பொதுச் செயலர்தான் தற்போதைய அந்தோனியோ குத்ரெஸ்.

ஐநா மன்றத்தின் அடுத்த பொதுச் செயலர் பொறுப்பிற்கு இதுவரை அறுவர் களமிறங்கி உள்ளனர்.
இந்த ஆறு பேரில் ஐவர் பெண்கள்:

- மிசேல் பாசிலேட்: இவர், சிலி நாட்டின் முன்னாள் குடியரசுத் தலைவர்; ஐ.நா. மனித உரிமை ஆணையத்தின் உயர் ஆணையராகவும் இவர் செயல்பட்டுள்ளதால் உலக அரங்கில் இவருக்கு மதிப்பு உள்ளது. தவிர, அரசியல் அனுபவம் மிக்கவரும் ஆவார். மனித உரிமைக்காக துணிந்து குரல் கொடுக்கும் இவரை, லத்தீன் அமெரிக்க நாடுகள் குறிப்பாக மெக்சிகோவும் பிரேசிலும் வலுவாக ஆதரிக்கின்றன. இருந்தபோதும், சொந்த நாடான சிலியில் ஜோஸ் அந்தோனியோ காஸ்ட் தலைமையில் அமைந்துள்ள புதிய அரசாங்கம் இவருக்கு அதிகாரப்பூர்வ ஆதரவை வழங்கவில்லை. பாதுகாப்பு மன்றத்தின் நிரந்தர உறுப்பிய நாடுகளான சீனா மற்றும் ரஷ்யாவின் ஆதரவும் உறுதி இல்லையென்பது, இவருக்கு ஒரு பின்னடைவாகக் கருதப்படுகிறது.

- மரியா பெர்னாண்டா எஸ்பினோசா: எக்வடார் நாட்டைச் சேர்ந்த இவர், ஐ.நா. பொதுச் சபைத் தலைவராக செயல்பட்டு உள்ளதால், இவருக்கும் நல்ல அறிமுகம் இருக்கிறது; உலகளாவிய தூதரக அனுபவமும் உள்ள இவர், பெண்கள் முன்னிலை பெற வேண்டும் என்ற வலியுறுத்தலின் சின்னமாக பார்க்கப்படுகிறார். தென் அமெரிக்காவின் வலுவான பிரதிநிதியான இவருக்கு சில சவாலும் உள்ளன; பாதுகாப்பு மன்றத்தின் வலுவான ஆதரவு தேவைப்படும் நிலையில் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் அரசியல் சூழல் இவருக்கு தோதாக இல்லையென கூறப்படுகிறது.

- ரெபெக்கா கிரின்ஸ்பான்:
கோஸ்தா ரிக்கா நாட்டைச் சேர்ந்த இவர், ஐ.நா. வர்த்தக மேம்பாட்டு மாநாட்டின் (UNCTAD) தற்போதைய தலைவராக இருப்பது ஒரு வலிமையாக பார்க்கப்படுகிறது; சமூக மேம்பாடு, வர்த்தகம், பொருளாதாரம் ஆகிய துறைகளில் இவர் வல்லுநர். சிறிய நாடுகளின் குரலை உலகளவில் பிரதிநிதித்துவப் படுத்தும் திறன் கொண்ட இவர், பெண்கள் முன்னிலை பெற வேண்டும் என்ற குரலை தொடர்ந்து முழங்கி வர்கிறார். இருந்தபோதும், பாதுகாப்பு கவுன்சிலின் அரசியல் ஆதரவு இவருக்கு குறைவு என தெரிவிக்கப்படுகிறது. குறிப்பாக, அமெரிக்கா, சீனா, ரஷ்யா ஆகிய நாடுகளின் ஆதரவைப் பெறுவது இவருக்கு சவால் என கூறப்படுகிறது.

- கேரலின் ரொட்ரிக்ஸ்-பிர்கெட்: கயானா நாட்டின் வெளிவிவகார முன்னாள் அமைச்சரான இவர், ஐ.நா. மன்ற தூதராகவும் செயல்பட்டுள்ளார். சிரியா, கரீபிய நாடுகளின் பிரதிநிதி. காலநிலை மாற்றம் மற்றும் சிறிய தீவு நாடுகளின் பிரச்சினைகள் குறித்து வலுவான குரல் எழுப்பும் இவர், பெண்கள் முன்னிலை பெற வேண்டும் என்னும் குரலுக்கும் சொந்தக்காரர். இருந்தபோதும் உலகளவில் குறைந்த அளவு அறிமுகம் இருப்பது இவருக்கு ஒரு பின்னடைவுதான். தவிர, பாதுகாப்பு கவுன்சிலின் வலுவான ஆதரவைப் பெறுவதும் இவருக்கு கடினம் எனத் தெரிகிறது.

- இவோன் பாக்கி: இவரும் ஈக்வடோர் நாட்டைச் சேர்ந்தவர். வர்த்தகத் துறை முன்னாள் அமைச்சரான இவர், பல்வேறு நாடுகளில் தூதரகப் பணியையும் ஆற்றியுள்ளார். குறிப்பாக, நடுகளுக்கிடையேயான வர்த்தக உறவை மேம்படுத்துவதில் வல்லவர் இவர். அமைதிப் பேச்சில் நடுவர், கலாச்சார தூதர் என்றெல்லாம் 40 ஆண்டுகளுக்கும் மேலான பன்னாட்டு செயல்பாட்டாளராக விளங்குபவர். இவரின் முழு பெயர் Ivonne Leila Juez Abuchacra de Baki என்பதாகும். 1951 பிப்ரவரி 23-இல் Guayaquil என்னும் இடத்தில் பிறந்த இவர், லெபனானிய குடியேற்றக் குடும்பத்தைச் சேர்ந்தவர். ஐநா மன்றத்தின் அடுத்த பொதுச் செயலாளர் பதவிக்கான வேட்பு மனுவை கடந்த ஆகஸ்ட் மாதம் 18-ஆம் நாள் தாக்கல் செய்தார். அரச தந்திர உறவிலும் அரசியல் பங்களிப்பிலும் தேர்ந்த இவர், ஆங்கிலம், ஸ்பெய்ன், பிரெஞ்சு, அரபு, ஜெர்மனிய மொழிகளில் தேர்ந்தவர். ஈக்குவடார்-பெரு நாடுகளுக்கிடையேயான அமைதி ஒப்பந்தம் ஏற்பட, இவர் ஆற்றிய பங்கு அளப்பரியது. அமெரிக்கா, பிரான்சு, கத்தார் நாடுகளில் தூதராக செயல்பட்டவர் இவர்.
சுருக்கமாக, மிசேல் பாசிலேட்டைப் பொருத்தவரை மனித உரிமை மற்றும் அரசியல் அனுபவம்; அதைப்போல, மரியா எஸ்பினோசாவிற்கு தூதரக அனுபவம் இருப்பதுடன் ஐநா பொதுச் சபையின் தற்போதைய தலைவர்;
ரெபெக்கா கிரின்ஸ்பான், பொருளாதார மேம்பாட்டில் வல்லுநர்; கேரலின் ரொட்ரிக்ஸ் பிர்கெட், காலநிலை மாற்றம் குறித்த விழிப்புணர்விலும் சிறிய நாடுகளுக்கு குரல் கொடுப்பதிலும் சளைக்காதவர். இவோன் பாக்கியோ அமைதிப் பேச்சிலும் கலாச்சார பரிமாற்றத்திலும் தேர்ந்தவர்.
ஐ.நா. பொதுச் செயலாளர் பதவிக்கான ஐந்து பெண் வேட்பாளர்களின் பன்னாட்டு ஆதரவு நிலை மற்றும் பாதுகாப்பு கவுன்சிலில் அவர்கள் எதிர்கொள்ளும் அரசியல் சவால்கள் வேறுபட்டவையாக இருந்தாலும் மொத்தத்தில், ஐந்து பெண்களுமே வலுவான வேட்பாளர்கள்.

- மேலே குறிப்பிடப்பட்டுள்ள ஐந்து பெண்களுடன் ஓர் ஆணும் ஐநா மன்றத்தின் அடுத்த பொதுச் செயலாளர் பதவிக்கு போட்டி இடுகின்றார். ரஃபேல் க்ரோஸ்சி: இவர், பன்னாட்டு அணு ஆற்றல் முகமையின்(IAEA) இயக்குநராக விளங்குகிறார்; அர்ஜெண்டினா நாட்டைச் சேர்ந்த தலைவர்.
பெண்கள் தேர்வு வாய்ப்பும் வரலாற்று பின்னணியும்:
80 ஆண்டுகளாக ஐ.நா. பொதுச் செயலாளர் பதவியை எந்தப் பெண்ணும் வகித்த தில்லை. தற்போதைய நிலையில் போட்டி யிடும் ஆறு வேட்பாளர்களில் 5 பேர் பெண்கள் என்பதால், பெண்கள் முன்னிலை வகிக்கின்றனர்.
உறுப்புநாடுகளின் ஆதரவு:
ஐநா மன்றத்தில் உறுப்பியம் பெற்றுள்ள 193 நாடுகளில், 112 நாடுகள், இம்முறை ‘பெண் பொதுச் செயலாளர்’ தேர்வு செய்யப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளன.
இருந்தபோதும், இறுதி முடிவு, 15(நிரந்தர & தற்காலிக) உறுப்பினர்களைக் கொண்ட பாதுகாப்பு கவுன்சில் பரிந்துரையின் அடிப்படையில்தான் எடுக்கப்படும். பாதுகாப்புக் குழுவில் இடபெற்றுள்ள ஐந்து நிரந்தர உறுப்பினர்களான அமெரிக்கா, ரஷ்யா, சீனா, பிரான்சு, இங்கிலாந்து ஆகிய நாடுகள், தங்களின் வீட்டோ(ரத்து) அதிகாரத்தின்மூலம் எந்த வேட்பாளரையும் முன்னிலைப்படுத்தவோ நிராகரிக்கவோ முடியும்.
அடுத்தடுத்த மாதங்களில், இந்த நிலையின் அடுத்தக்கட்டம் உலகின் கவனத்திற்குத் தெரியவரும்.
காத்திருப்போம்..!

இந்த ஆறு பெண்களில் ஒருவர் ஐநா மன்றத்தின் அடுத்த பொதுச் செயலாளராக வருவாரா? காலம் தரும் பதிலுக்காக பொறுத்து இருப்போம்!!


