
வழக்கறிஞர் வேலை எதற்கு? மருத்துவ படிப்புதான் எதற்கு? பொறியியல் கல்விதான் ஏன்? பேசாமல் இப்படி கொட்டி கொடுக்கின்ற ஓர் ஆலயத்தில் அர்ச்சகராக பணியில் சேர்ந்து விட்டால் நிறைவான ஊதியமும் மகிழ்வான வாழ்க்கையும் வசமாகி விடுமே!
இத்தகைய பணக்கார ஆலயம் நாட்டின் வடபுலத்தில் சுங்கை பட்டாணி நகரில் அமைந்துள்ளது.
இங்கு கோலக்கெட்டில் சாலை ‘பத்து டுவா'(இரண்டாவது மைல்) என்னும் இடத்தில் அமைந்துள்ள அருள்மிகு மாரியம்மன் தேவஸ்தானத்தின் 32- ஆம் ஆண்டுக் கூட்டம் கடந்த 22-12-2024இல் நடைபெற்றுள்ளது. அப்போது சமர்ப்பிக்கப்பட்ட கணக்கறிக்கையில் விஜி என்னும் குருக்களுக்கு ஒரு லட்சத்து 22,000 630 வெள்ளியை ஆண்டு ஊதியமாக வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் வேடிக்கை என்னவென்றால், வேடிக்கை அல்ல; கொடுமை; கொடுமையிலும் கொடுமை யாதெனில், இந்த ஆலயத்தின் பதிவு தற்பொழுது அரசாங்கத்தால் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இந்த வழிபாட்டுத் தலத்தின் நிர்வாகம் தற்பொழுது அரசாங்க கண்காணிப்பில் இருக்கிறது.
நிதி முறைகேடு, நிர்வாக சீர்கேடு தொடர்பாக இந்த ஆலயத்தின் பதிவு இந்த நிலைக்கு ஆளாகி இருப்பது, சுற்று வட்டார பக்தர்கள் மனதில் பெரும் கேள்வியையும் பதற்றத்தையும் எழுப்பி உள்ளது. இந்த நிலையில் ஒரு குருக்களுக்கு இவ்வளவு சம்பளம் வழங்கியிருப்பதாக கணக்கறிக்கையில் குறிப்பிடப்பட்டிருப்பது எங்கோ இடிக்கிறது!
பக்தர்களே, ஆன்மிக அன்பர்களே, சமய சான்றோரே, மத காவலர்களே, எண்ணிப் பாருங்கள் ஒரு கணம்!


