Monday, April 20, 2026

வெளியே தெரிவது ஒரு ஜாகீர் நாயக்!உள்ளே இருக்கும் எண்ணற்ற ஜாகீர் நாய்க்குகளைப் பற்றி ராயருக்கும் கணபதி ராவுக்கும் ஏன் கவலை வரவில்லை?

இந்து சமயத்தை இடித்துரைக்கும்.., இழிவுபடுத்தும் ஒரு ஜாகிர் நாயக் வெளியே இருப்பது உண்மைதான்.

ஆனால் இந்து சமய எல்லைக்குள் எத்தனையோ ஜாகிர் நாயக்குகள் சமயத்தையும் ஆன்மிகத்தையும் சிதைக்கின்றனரே அவர்களைப் பற்றி இந்த இருவருக்கும் ஏன் கடுகளவும் அக்கறையும் கவலையும் எழவில்லை?

சமயத் தெளிவிலும் ஆன்மீக நெறியிலும் இந்துப் பெருமக்கள் திடமாகவும் திண்ணியமாகவும் இருந்தால் எத்துணை ஜாகிர் நாயக்குகள் வந்தாலும் சிறிதும் பொருள்படுத்த வேண்டியது இல்லை;

அதைப்போல நாட்டில் உள்ள ஒவ்வொரு இந்துவும் உறுதியான சமயக் கொள்கையை உள்ளத்தில் பதித்திருந்தால் எவரும் மதம் மாற்றிவிட முடியாது; மதமாற்றம் நடைபெறுகிறது என்ற கூப்பாடும் தேவையற்றதாகிவிடும்; மாறாக, பலவீனமாக இருப்பதால்தான் மற்ற சமயத்தினர் இந்துக்களை எளிதில் மதமாற்றும் முயற்சியில் ஈடுபடுகின்றனர்.

சமயப் பற்றும் உறுதிப்பாடும் ஒவ்வொரு இந்துவிடமும் திடமாக இருந்து விட்டால் மதமாற்றம் என்ற அச்சம் எந்த நேரத்திலும் எந்த இடத்திலும் எழவே எழாது.

பதினைந்தாவது நாடாளுமன்றத்தின் நான்காவது கூட்டத் தொடரின் முதல் அமர்வு தற்பொழுது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது;
சமூக, பொருளாதார, கல்வி தொடர்பான அரசியல் பணியை தீவிரமாக ஆற்றி மலேசிய இந்தியர்களின் பன்முக மீட்சிக்கு பணியாற்ற வேண்டிய இந்த தருணத்தில்கூட எங்கோ ஒதுங்கி இருந்த ஜாகிர் நாயக் இப்பொழுது பொதுவெளியில் தென்படுகிறார் என்பதற்காக அவசர அவசரமாக செய்தியாளர்களை சந்திக்கும் ஜனநாயக செயல் கட்சி(ஜசெக)யைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களான ஆர்எஸ்என் ராயரும் கணபதி ராவும் உள்ளுக்குள் எத்தனையோ ஜாகிர் நாயக்குகள் அட்டூழியம் புரிகின்றனரே, அதைப் பற்றி எல்லாம் ஏன் அக்கறைப் படுவதில்லை?

மதத் தலைவர்களாகவும் உருமாறி உள்ள இந்த அரசியல் தலைவர்கள், மலேசியாவில் இரண்டு முக்கியமான ஆலயங்கள் நாட்டின் மையப்பகுதியில் ஒன்று; நாட்டின் வடபுலத்தில் ஒன்று என இரு ஆலயங்களின் உரிமத்தை பறிகொடுத்து விட்டு, அவற்றை அரசாங்கம் நிர்வகிக்கின்ற அளவுக்கு சமயத்திற்கும் இந்து மக்களுக்கும் சிறுமை ஏற்படுத்தி இருக்கின்றனர்; இவர்களைப் பற்றி இதுவரை நீங்கள் ஏன் வாய் திறக்கவில்லை?

சிலாங்கூர் மாநிலத்தில் பெருமைவாய்ந்த வழிபாட்டு தலங்களில் ஒன்று சுங்கை வே அருள்மிகு சக்தி ஈஸ்வரி ஆலயம்.

அந்த ஆலயம் திவால் நிலைக்கு ஆளாகி அதன் உரிமமும் ரத்து செய்யப்பட்டு தற்பொழுது அரசாங்கத்தின் நேரடி கண்காணிப்பில் இருக்கிறது.

இதற்கு அடிப்படையான காரணம் பதவி சண்டை மட்டுமல்ல; ஏராளமான நிதி மோசடியும் முறையற்ற நிர்வாகமும்தான்.

இது, இந்து சமயத்திற்கு இழுக்கல்லவா?

அந்த ஆலயத்தின் தலைவராக இருந்தவர் அதன் கோபுரத்தில் சினிமா நட்சத்திரங்களின் உருவங்கள் வடிவமைக்கப்பட்டிருந்ததைப் பற்றி கருத்து தெரிவிக்கையில் அவர்களும் மனிதர்கள்தானே; பஞ்ச பாண்டவர்களின் உருவங்கள் ஆலய கோபுரங்களில் இடம்பெறவில்லையா? மதுரை மீனாட்சியம்மன் கோயில் கோபுரத்தில், பூ வியாபாரிகளின் உருவங்கள் வடிக்கப்படவில்லையா? அதனால் ஆலய கோபுரங்களில் எந்த சிலை இருப்பதைப் பற்றியும் கவலை இல்லை; அது, சிற்பிகளின் கை வண்ணம்; இருந்தாலும் அதைப்பற்றி கவலைப்படுவதற்கு ஒன்றுமில்லை என்று சொல்கிறார்.

29 ஆண்டுகள் அந்த ஆலயத்தை வழிநடத்தியவர் தற்பொழுது அதன் உரித்தை பறிகொடுத்து விட்டு ஆலய நிர்வாகத்தையும் திவால் நிலைக்கு தள்ளிவிட்டதை பற்றி கொஞ்சமும் அக்கறைப்படவில்லை; மனம் உறுத்தவில்லை. இந்த நிலை பற்றி இந்த அரசியல் தலைவர்கள் இதுவரை ஏன் வாய் திறக்கவில்லை?

இது சமயப் பயணத்தில் ஒரு பின்னடைவா இல்லையா?

இதைப்போல கெடா மாநிலத்தில் சுங்கை பட்டாணி நகரில் கோலக்கேட்டில் சாலை ‘பத்து டுவா'(இரண்டாவது மைல்) அருள்மிகு மாரியம்மன் ஆலய பதிவும் ரத்து செய்யப்பட்டு அதன் உரிமத்தை அரசு மீட்டுக் கொண்டுள்ளது. நிர்வாகமும் முடக்கப்பட்டுள்ளது

இதற்கு காரணம் அப்பட்டமான நிதி முறைகேடு, பதவிச் சண்டை, சீரற்ற நிர்வாகம் ஆகியவை ஆகும்.

அந்த ஆலயத் தலைவரின் மகனே பொருளாளராகவும் மகள் கணக்குப் பிள்ளையாகவும் மற்ற இரு பிள்ளைகள் ஆலய நிர்வாகக் குழு உறுப்பினராகவும் இருந்திருக்கின்றனர்.

அந்த ஆலய நிர்வாகக் குழுவின் 13 பேரில் 5 பேர் தலைவரின் குடும்பத்தை,ச் சேர்ந்தவர்களாக இருந்திருக்கின்றனர். இது என்ன நிர்வாக குழு? என்ன ஆலயத் தலைமை?

3 ஆண்டுகளாக அந்த ஆலயத்தின் கணக்கு வழக்குகள் சங்க பதிவகத்திடம் முறையாக ஒப்படைக்கப்படவில்லை; கருத்து வேறுபாடும் பதவிச் சண்டையும் நீடித்து வந்த நிலையில் எதிர்த் தரப்பு சங்கப் பதிவகத்தில் புகார் செய்துள்ளது

இந்த நிலையில் சங்க பதிவகத்தில் இருந்து ஆலயச் செயலாளர் பெயருக்கு பதிவு அஞ்சலில் வந்த இரண்டு எச்சரிக்கை கடிதங்களையும் இன்னொரு தரப்பு மறைத்துவிட்டது.

இந்த நிலையில், ஆலய நிர்வாகத் தரப்பூ அலட்சியம் காட்டுவதாக நினைத்த சங்கப் பதிவகம், சினமுற்று, மூன்றாவது கடிதத்திற்கு அவசியம் இன்றி ஆலயத்தின் பதிவை ரத்து செய்து இருக்கிறது.

பொது மக்களுக்கான, குறிப்பாக இந்து சமயத்தினருக்கான ஒரு ஒரு வழிபாட்டுத் தளத்தின் நிர்வாகம் முடக்கப்பட்டு பதிவும் ரத்து செய்யப்பட்டுள்ளதைப் பற்றி இதுவரை அந்த ஆலயத்தை வழி நடத்திவந்த தலைமைத் தரப்புக்கு சிறிதும் மனம் வருந்தவில்லை.

இப்படி, அரசத் தரப்பு நேரடியாக தலையிட்டு ஆலயங்களின் உரிமங்களை ரத்துசெய்து நிர்வாகத்தையும் தங்கள் கையில் எடுத்துக் கொள்ளும் அளவிற்கு சீர்கேடான நிர்வாகத்தை நடத்தியவர்களைப பற்றி மதத் தலைவர்களாக உருமாறியுள்ள அரசியல் தலைவர்களான ராயரும் ராவும் கண்டனம் தெரிவிக்காவிட்டாலும் குறைந்தபட்சம் தங்களின் கருத்தைக்கூட வெளிப்படுத்தவில்லை

இது, ஜாகிர் நாயக் இந்து சமயத்தை வெளியில் இருந்து இழிவு படுத்துவதை விட மோசமான அடியறுப்பு வேலையாகும். சமயத்திற்கும் ஆன்மீக நெறிக்கும் கேடு பயக்கும் செயல் அல்லவா?

தவிர, ஒரு வழிபாட்டு தளத்தின் பெயர் ஸ்ரீ முனீஸ்வரர் அருள்மிகு காளிகாம்பாள் ஆலயம் என்று இருக்கிறது. அப்படி என்றால் அந்த ஆலயத்தின் மூலமூர்த்தி யார்? அம்மனா அல்லது ஐயனா?

இந்து சமயத்தில் இடம் பெற்றிருக்கின்ற சைவம், வைணவம், சாக்தம் கணபதியம், கௌமாரம் சௌரம் என்னும் ஆறு கொள்கையின்படி சிவன், பெருமாள், உமையவள், விநாயகர், முருகன், சூரியன் என்னும் ஆறு வழிபாட்டு நாயகர்களைத் தவிர ஐயனார் போன்ற சிறு தெய்வ வழிபாட்டு முறைகளும் உள்ளன. ஆனால் மூலமூர்த்தி யார் என்று வரைமுறை செய்ய முடியாத அளவிற்கு எண்ணற்ற ஆலயங்களின் பெயர்கள் குழப்பமாக உள்ளன.

இது என்ன ஒழுங்கு? என்ன சமயம்? என்ன வழிபாட்டு முறை? கேட்பாரும் மேய்ப்பாரும் இல்லாத அளவுக்கு தகுதி இல்லாதவர்கள் எல்லாம் தலைவராகி இந்து சமயத்தை பல வகையாலும் சிறுமைப்படுத்துகின்றனர்.

ஆலயங்களை வழிபாட்டுத் தலம் என்பதுடன் சமுதாய மையமாகவும் உருமாற்றி வழிநடத்துகின்ற எத்தனையோ நல்ல தலைவர்களும் இருக்கின்றனர் என்பது உண்மைதான். ஆனாலும் இப்படிப்பட்ட ஆலயங்களின் எண்ணிக்கை சொற்ப அளவில்தான் இருக்கின்றன.

அண்மையில் கூட தலைநகரில் பிரபலமான கௌமார வழிபாட்டுத் தலமான கோலாலம்பூர் செந்தூல் ஜாலான் ஈப்போ அருள்மிகு தண்டாயுதபாணி ஆலயத்தில் குடமுழுக்கு விழா நடைபெற்றது. இதன் தொடர்பில் திருப்பணி மேற்கொண்டவர்கள் நுழைவாயிலின் இரு மருங்கிலும் யானை சிலையை நிறுவியுள்ளனர்

உண்மையில் இந்த ஆலயம், திருமுருகக் கடவுளுக்குரிய வழிபாட்டுத் தலம். அப்படி என்றால் அங்கு மயில் சிலையோ அல்லது வேல்சிலையோ அல்லது சேவற்கொடி சிலையோதான் நிறுவப்பட்டிருக்க வேண்டும். விநாயகர் ஆலயத்தை போல யானை சிலைகளை நிறுவியிருப்பது என்ன நடைமுறை என்று தெரியவில்லை
இதற்கு என்ன ஆன்மீக விளக்கம் தரப்படும் என்றும் தெரியவில்லை.

இந்து சமயத்தில் பக்தி மார்க்கத்தை செம்மைப்படுத்தி சீராக முன்னெடுப்பதை விட்டுவிட்டு ஆளாளுக்கு மனம் போன போக்கில் விருப்பம் போல செயல்படுகின்றனர். எந்த ஒழுங்கும் நியதியும் இல்லை. இதைப் பற்றி எல்லாம் ராயரும் கணபதியும் ஏன் கவலைப்படுவதில்லை?

ஆலயங்களில் சமய நூலகம் நிறுவப்பட வேண்டும்; வெள்ளிதோறும் ஆன்மிக சொற்பொழிவு இடம்பெற வேண்டும்; நிதி ஆதாரத்தை பெருக்க வேண்டும்; நலிந்த குடும்பங்களின் பிள்ளைகளுக்கு கல்விசார் உதவி நல்க வேண்டும்; திருமுறை பயிற்றுவிக்கப்பட வேண்டும்; தேவாரத் திருமுறைகள் இறப்பு வீட்டிற்கு மட்டும் உரியவை அல்ல; மாறாக அவை அன்றாட வாழ்வில் ஒவ்வொரு இந்துவும் குறிப்பாக சைவப் பெருமக்கள் விழித்திருக்கும் வேளைதோறும் பரம்பொருளை நினைத்து திருமுறையை ஓத வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்பதில் எல்லாம் போட்டி இல்லை; முனைப்பு இல்லை.

பதவி சண்டையில் தான் போட்டியும் முனைப்பு காட்டுகின்றனர்.

இத்தகைய செயல்களின் பின் விளைவுதான் ஏறக்குறைய 100 ஆலயங்களுக்கும் மேல் திவால் நிலையை அடைந்து மோசமான நிலையை எட்டி இருக்கின்றன.

பொது நிர்வாகத்தில் குளறுபடி, நிதி நிர்வாகத்தில் இருண்ட பக்கம், தொடர் பதவி சண்டை, ஒரு தரப்பாரை எதிர்த்து இன்னொரு தரப்பினர் காவல் நிலையத்திலும் சங்கப்பதிவகத்திலும் புகார் செய்வது போன்ற காரணங்களால் நாட்டில் ஏராளமான ஆலயங்களின் பதிவும் உரிமமும் முடக்கப்பட்டுள்ளன.

இப்படிப்பட்ட சிறு பெரு ஆலயங்களின் பெயரை மாற்றி வைத்துக்கொண்டு, தற்காலிகமாக 20 அல்லது 30 பேரை உறுப்பினராக சேர்த்துக் கொண்டு வேறு பெயரில் அந்த ஆலயங்களை நடத்தி வருவதும் வெள்ளிடை மலை!

உள்ளபடியே இப்படிப்பட்டவர்கள்தான் இந்து சமய எல்லைக்குள் இருக்கும்- மறைந்திருக்கும் ஜாகிர் நாயக்குகள்.

இவர்களைப் பற்றியும் ஆர்எஸ்என் ராயரும் கணபதி ராவும் குரல் கொடுத்தால் நன்றாக இருக்கும்.

ஆன்மீக மறுமலர்ச்சி ஏற்படும் சமய நெறிமுறையும் காக்கப்படும்.

நாட்டிலுள்ள ஆயிரக்கணக்கான ஆலயங்களை ஒருங்கிணைக்கவும் முறைப்படுத்தவும் வகைப்படுத்தவும் மலேசிய இந்து சங்கத்தால் இயலவில்லை; அந்த அளவிற்கு நாட்டின் மூத்த பாரம்பரிய சமய அமைப்பான இந்து சங்கத்திற்கு வலிமையும் இல்லை.

அங்கீகாரம் இருக்கிறதேத் தவிர வலிமை இல்லாத இந்து சங்கத்தை மேலும் வலுப்படுத்த வேண்டும் என்று இந்த அரசியல் மதத்தலைவர்களுக்கு அக்கறை இருந்தால் சமயத்திற்கும் சமூகத்திற்கும் நன்மை விளையும்!

செய்தி சம்பந்தப்பட்ட உங்கள் கருத்தை பதிவு செய்ய "வாட்சாப்" பட்டனை அழுத்துங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

அதிகம் பகிரப்பட்டவை