
அமெரிக்காவின் புதிய அதிபராக கடந்த மாதம் டொனால்ட் டிரம்ப் பதவியேற்றது முதல் உலக அரசியல் அரங்கை பல வகையாலும் குறிப்பாக தன்மூப்பான அரசியல் முடிவுகளால் அதிர வைத்து வருகிறார் என்பது நூற்றுக்கு நூறு உண்மை; ஆனாலும் அவர் தங்க வணிகத்தை தன்னையும் அறியாமல் அலுங்காமல் குலுங்காமல் மேம்படுத்தி வருகிறார். மொத்தத்தில் அவரின் பதவி காலம், தங்க ஆபரணத் தொழிலுக்கு மிக உச்சத்தை தரப்போகும் உன்னத தருணம் என்று மலேசிய பொற்கொல்லர் வணிகர் சங்கத் தலைவர் டத்தோ ரசூல் தெரிவித்துள்ளார்.
டொனால்ட் டிரம்ப் அரசியல் ரீதியாக வலதுசாரி பார்வை கொண்டவர் என்பதை கடந்த முறை அவர் அதிபராக இருந்தபொழுதே உலகம் அறிந்தது. இப்பொழுது மீண்டும் அவர் அதிபரான நிலையில் ஜனநாயக நியதி- உலகளாவிய சமூகப் போக்கு ஆகியவற்றை புறந்தள்ளி இன அடிப்படையிலான அரசியல் நகர்வுகளை மேற்கொள்கிறார்.
இத்தகைய போக்கினால் அவர் பதவி ஏற்பதற்கு முன்பிருந்தே சொந்த நாட்டில் போராட்டம் வெடித்துவிட்டது.
BRICS அமைப்பின் நாடுகளான பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆப்பிரிக்கா, எகிப்து, எத்தியோப்பியா, ஈரான், இந்தோனேசியா, ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட நாடுகள், ஐரோப்பிய ஒன்றியம், அண்டைநாடான மெக்சிகோ உள்ளிட்ட மேலை உலக நாடுகளையும் டிரம்ப் அதிர வைத்து வருகிறார் என்றால் கீழ்த்திசை நாடுகளின் நிலையைப் பற்றி சொல்லத் தேவையில்லை.
பதவியேற்று ஒரு மாதம் கூட ஆகவில்லை; அதற்குள் இப்படியாயென்று என்று உலகம் வியப்படையலாம்; உற்று நோக்கலாம்.
இருந்தபொழுதிலும் அவர் அமெரிக்காவின் நாணயமான டாலரை வலிமைப்படுத்துவதில் மிகமிக உறுதியாக இருக்கிறார். உலக வர்த்தக சந்தை, பன்னாட்டு ஊக வணிகம் உள்ளிட்ட அனைத்திலும் டாலருக்கு முன்பிருந்த செழிப்பான நிலையை மீண்டும் ஏற்படுத்த குடியரசுக் கட்சியைச் சேர்ந்தவருமான டொனால்ட் டிரம்ப் மிகவும் உறுதியாக இருக்கிறார்.

இதன் விளைவாக, அமெரிக்க நாணயமான டாலர் வலிமை பெறும்; அமெரிக்க நாணயம் எந்த அளவுக்கு வலுப்பெறுகிறதோ அந்த அளவிற்கு தங்கத்தின் மதிப்பும் நிலைநிறுத்தப்படும்; மேலும் உயரும்.
இந்த நிலை மஞ்சள் கட்டி எனப்படும் தங்க பாலத்தின் மீதான முதலீடு, வங்கிகளில் தங்க ஆபரண வைப்பீடு, பொன் ஆபரண வர்த்தகம், தங்கம் மற்றும் தங்க ஆபரண கொள்முதலுக்காக கூட்டு சேர்த்தல் என்றெல்லாம் தங்க வணிகமும் தங்கம் சார்ந்த துணை வர்த்தகமும் நேரடியாகவும் மறைமுகமாகவும் உயர்வடையும் என்று டத்தோ ரசூல் நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்.
குறிப்பாக தங்கக் கட்டிக்கும் தங்க ஆபரணத்திற்கும் உலக அளவில் அதிக மதிப்பு ஏற்படும்.
இந்தியாவில்கூட, ஒரு பவுன் தங்கத்தின் விலை தற்பொழுது 70 ஆயிரம் ரூபாயை எட்டி வருகிறது; இந்த நிலை இப்படியே நீடித்தால் கூடிய விரைவில் ஒரு பவுன் தங்கத்தின் விலை ஒரு லட்சத்தைக்கூட எட்டக்னகூடும். ஆனாலும் இந்த நிலை ஊகிக்க முடியாத ஓர் அச்சத்தையும் ஏற்படுத்துகிறது.
காரணம் தங்க வணிகத்தை பொருத்தவரை மூன்று விதமான பயனீட்டாளர்கள் உள்ளனர். இவர்களில் முதல் நிலையில் இருப்பவர்களும் அதிகமான எண்ணிக்கையில் இருப்பவர்களுமான ‘நிதான பயனீட்டாளர்கள்'(Passion Buyers

இவர்கள்தான் எப்பொழுதும் தங்கத்தின்மீது மாறாத பற்று கொண்டவர்கள். பணம் இருக்கிறதோ இல்லையோ தங்கத்தை வாங்க வேண்டும் என்ற ஆர்வம் கொண்டவர்களாக எப்பொழுதும் திகழ்வார்கள். பிள்ளைகளுக்கு கொடுப்பதற்காக அல்லது புதுப்புது மாதிரிகளை கண்டவுடன் அணிந்து பார்க்க வேண்டும் என்ற ஆர்வம் கொண்டவர்களாக இருப்பதால் வறுமை நிலவினால்கூட தங்க கொள்முதலுக்காக சிறுகசிறுக காலமெல்லாம் சேமித்து வருவார்கள். சில வேளைகளில் நட்டப்பட்டாலும் தங்கம் வாங்குவதிலும் அதற்காக சேமிப்பதிலும் நிலையான எண்ணம் கொண்டவர்கள், இத்தகைய தரப்பினர்.
தங்க ஆபரண தொழிலின் ஆதார மையமாகத் திகழும் இவர்கள் பெரும்பாலும் ஏழை எளிய மக்கள். இந்த நிலையில், தங்கத்தின் விலை இப்படி தாறுமாறாக அதிகரிக்கும்பொழுது இவர்கள் நிலைகுலைந்து பின்வாங்கவும் கூடும் அல்லது பொருளாதார அளவில் வாய்ப்பே இல்லாமலும் போகக்கூடும். அதனால் தங்கத்தின் விலை அளவுக்கு அதிகமாக உயர்வது, இத்தகைய தரப்பினரை கருத்தில் கொண்டால் அவ்வளவு நல்லதல்ல என்றே தெரிகிறதென தங்க ஆபரணத் தொழிலில் நீண்ட நெடிய அனுபவம் கொண்டிருக்கும் டத்தோ ரசூல் தெரிவிக்கிறார்.

இரண்டாம் நிலை பயனீட்டாளர்கள் ‘கலைநாட்டம் கொண்டவர்கள்'(Buyers for Art Design in Gold Ornaments)தங்க ஆபரண சந்தையில் காலந்தோறும் புதிதாக வெளிவந்து கொண்டிருக்கும் ஒற்றைக்கல் மூக்குத்தி, வளைய மூக்குத்தி, அலங்கார நகை, தோடு, தொங்கட்டான், ஒட்டியானம், அட்டிகை சங்கிலி போன்றவற்றில் பெரும் விருப்பு கொண்ட இவர்கள் புது மாதிரிகளைக் கண்டவுடன் அவற்றை வாங்கி வைத்து அழகு பார்ப்பதில் மகிழ்ச்சி அடையக் கூடியவர்கள்.
தவிர, கைவசம் இருக்கும் பழைய நகைகளை கொடுத்து, புதியவற்றைப் பெறவும் முனைவார்கள்.
இத்தகையத் தரப்பினரால் தங்க வணிகம் உயிர்ப்பு நிலையில் தொடர்ந்து கொண்டிருக்கும்; ஆனாலும் இப்படிப்பட்டோரின் எண்ணிக்கை குறைவானதுதான்.
தங்கக் கட்டி மற்றும் தங்க ஆபரண வர்த்தகத்தில் முனைப்பு காட்டுவோர் மூன்றாம் நிலை பயனீட்டாளர்கள். அடிப்படையில் இந்தத் தரப்பினர் தங்க முதலீட்டாளர்கள்(Investors in Gold and Golden Ornaments); இவர்கள் தங்கக் கட்டிகளிலும் பொன் ஆபரணத்திலும் முதலீடு செய்பவர்கள்; வங்கிகளில் எப்படி வைப்புத் தொகையை வைக்கிறோமோ அதைப்போல இவர்கள் தங்கத்தின் பெயரால் வைப்பீடு செய்யக்கூடியவர்கள்.
இதற்குமுன் தங்கத்தில் முதலீடு செய்திருப்பவர்கள், அவற்றை விற்று முதலாக்குவதற்கு இது மிகமிக உகந்த நேரம். தங்கத்தின் விலை இன்னும் உயரும் என்பது உண்மைதான் ஏன்றாலும் நாம் எதையும் நூற்றுக்கு நூறு அறுதியிட்டு உறுதிபட சொல்லி விட முடியாது.
தங்க ஆபரணத் தொழில், டொனால்ட் டிரம்ப் அதிபராக நீடிக்கும்வரை ஏறக்குறைய இன்னும் நான்காண்டுகளுக்கு உச்சத்தில் இருக்கும் அல்லது இதேநிலை நீடிக்கலாம்; இந்த நிலையைவிட கீழே இறங்குவதற்கு வாய்ப்பு இல்லை மொத்தத்தில் டொனால்ட் டிரம்ப் அமெரிக்க அதிபராக இருக்கும் காலம் வரை பொன் தொழிலுக்கு பொன்னான காலம் என்று அடித்துச் சொல்கிறார் கோலாலம்பூரில் ஒரு காலத்தில் செட்டித்தெரு என்று அழைக்கப்பட்ட லெபோ அம்பாங்(Lebuh Ampang) வீதி வர்த்தக சங்கத்தின் மேனாள் தலைவருமான டத்தோ ரசூல்.
20-இருபதாம் நூற்றாண்டின் நிறைவுப் பகுதியில் ஒரு பவுன் தங்கத்தின் விலை ஏறக்குறைய 350 வெள்ளியாகும்.
புறநகரப் பகுதிகளிலும் சிற்சிறு பட்டினங்களிலும்கூட சில்லறை விற்பனையில் ஒரு பவுன் தங்கத்தின் விலை அதிகபட்சமாக 400 வெள்ளியாகத்தான் இருந்தது.
ஆனால் இப்பொழுது அந்த விலையில் ஒரு கிராம் கூட வாங்க முடியாது. காரணம் ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை 403 வெள்ளியாக உயர்ந்துள்ளது; அதாவது இன்றைய நிலையில் ஒரு பவுன் ஆபரண தங்கத்தின் விலை, மலேசிய நாணயத்தில் (Ringgit Malaysia) 3,224 வெள்ளியாகும்.

அமெரிக்க அதிபராக டோனால்ட் டிரம்ப் பதவியேற்ற இந்தக் குறுகிய காலத்தில் மலேசியாவில் தங்க ஆபரணத்தின் விலை 4% வரை கிடுகிடுவென உயர்ந்துள்ளது.
டத்தோ ரசூல் மேலும் ஒரு தகவலை சொல்கிறார்; “உலக அளவில் பெரிய அரசியல் மாற்றங்கள் ஏதும் நிகழாமல் அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் நான்கு ஆண்டுகளுக்கு நீடித்தால் தங்க வர்த்தகம் உலகில் முதல் நிலை வர்த்தகமாக இருக்கும்; அதன் அடிப்படையில் பொற்கொல்லரின் தேவையும் அதிகரிக்கும்” என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


