
இன்றைய தைப்பூச திருநாள் தொடர்பில் மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ டாக்டர் ச.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ள தைப்பூசத் திருநாள் வாழ்த்து:
அருள்வளமும் பொருள்வளமும் ஒருங்கே வாய்க்கப்பெற்ற மலேசியத் திருநாட்டில் வாழ்கின்ற இந்துப் பெருமக்களுக்கும் பொதுவாக இந்தியர்களுக்கும் நல்லருள் வழங்கி பொருள்வளத்தையும் சேர்த்திட அருள் வழங்கும் படி திருமுருக திருக்கடவுளை நினைந்து அவன்தாள் பணிகிறேன் என்று மலேசிய இந்தியர் காங்கிரஸ்-மஇகா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் ச விக்னேஸ்வரன் தன்னுடைய தைப்பூச திருநாள் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
தைப்பூசத் திருவிழா, உலக அளவில் பேசப்படும் ஒரு சமய விழா; இது சமய விழாவாக இருந்தாலும் பக்த அன்பர்களைக் காட்டிலும் உண்மையில் சுற்றுலா பயணியர் பேரளவில் வந்து குமிகின்ற இடமாக பத்து மலை திருத்தலம் விளங்குகிறது
கடந்த இரு வார காலத்திற்கும் மேலாக பக்தர்கள் தங்களின் நேர்த்திக் கடனை நிறைவேற்றி வருகின்றனர்.

இன்றைய நாள், தை மாத பௌர்ணமி நாள் என்பதுடன் தைப்பூச நட்சத்திரமும் கூடி வருகின்ற நன்னாள் என்பதால் பக்த அன்பர்கள் ஏகமாக திரளுகின்றனர்.
அதேவேளை இறை அன்பர்களும் பொது மக்கள் அனைவரும் நம் பாரம்பரிய பண்பாட்டை கட்டிக் காத்து, இறை மாண்பை போற்றும் வகையில் இந்த தைப்பூச திருவிழா உச்சநாளில் திருமுருகனை வழிபட வேண்டும் என்று மலேசிய இந்திய சமுதாயத்தின் தாய்க் கட்சியான மஇகா சார்பில் கேட்டுக் கொள்வதாக விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இந்து சமயத்தில் இடம் பெற்றிருக்கின்ற சைவம், வைணவம், சாக்தம், கணபதியம், கௌமாரம், சௌரம் எனும் ஆறு கொள்கைகளில் கௌமார வழிபாட்டு நாயகனும் தமிழ்க் கடவுளுமாகிய திருமுருகப் பெருமாளை வழிபடுகின்ற இந்துக்கள் அனைவருக்கும் அருள்நலத்துடன் பொருள் வளத்தையும் தாழாது வழங்கி அருள்புரிய வேண்டும் என்று இந்த நன்னாளில் எம்பெருமானாம் திருமுருகனை வணங்கி வேண்டுவதாக டத்தோஸ்ரீ டாக்டர் ச.விக்னேஸ்வரன் வெளியிட்டுள்ள தைப்பூசத் திருநாள் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்

பத்து மலை தைப்பூச திருவிழா தொடர்பில் முன்னதாக ஞாயிற்றுக்கிழமை முன்னிரவில் கோலாலம்பூர் அருள்மிகு மாரியம்மன் ஆலயத்தில் இருந்து தேர் புறப்பட்டது. தேர் பாதையில் நெடுகிலும் பல்லாயிரம் கணக்கான பக்தர்கள் தேருடன் தொடர்ந்து இரவும் பகலுமாக 18 மணி நேரம் பயணித்தனர்
தவிர ஏராளமானவர்கள் பந்தல் அமைத்து திருமுருக கடவுள் வீற்றிருந்த தேருக்கு வழிபாடு செய்தனர். அந்த வகையில் மஇகா சார்பிலும் அதன் தேசியத் தலைவர் டான்ஸ்ரீ விக்னேஸ்வரன், தேசிய துணைத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் சரவணன் மற்றும் கட்சியினர் புடைசூழ தேரில் வீற்றிருந்த முருகக் கடவுளுக்கு வழிபாடு செய்து வணங்கினார்.


