
2025 பத்துமலை தைப்பூச திருவிழா தொடர்பில் உண்டியல் பணம், காணிக்கைப் பொருட்களை எண்ணும் பணி பத்துமலை திருத்தளத்தில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
வழக்கமாக கோலாலம்பூர் அருள்மிகு மாரியம்மன் கோவிலில் நடைபெறும் இப்பணி, இந்த ஆண்டு முதல் முறையாக பத்துமலை திருத்தலத்திலேயே நடைபெறுகிறது என்று தேவஸ்தான தலைவர் டான்ஸ்ரீ டத்தோஸ்ரீ ஆர் நடராஜா தெரிவித்தார்.

ஏராளமான தொண்டர்களின் உதவியுடன் பத்துமலைத் திருத்தல வளாகத்தில் அமைந்துள்ள திரௌபதி அம்மன் ஆலயத்தில் இன்று சனிக்கிழமை காலை 10:00 மணி அளவில் உண்டியல் பணத்துடன் காணிக்கை பொருட்களை எண்ணும் பணி தொடங்கியது
மாலை 7:00 மணியை எட்டிய நிலையிலும் உண்டியல் பணம் மற்றும் காணிக்கை எண்ணும் பணி தொண்டர்களால் தொடர்ந்து மேற்கொள்ளப்படுகிறது.
தங்கவேல், வெள்ளி வேல், பணத்தாள்கள் வெள்ளிக் காசுகள் உள்ளிட்டவை தொடர்ந்து தரம் பிரித்து எண்ணப்படுகின்றன.

உண்டியலில் காசு போட வேண்டாம் என்று ஒரு சிலர் பிரச்சாரம் மேற்கொண்டனர். இருந்தபோதிலும் கடந்த ஆண்டுகளைவிட இந்த ஆண்டு அதிகமான அளவில் உண்டியல் பணம் சேர்ந்துள்ளது என்றும் எல்லாவற்றுக்கும் தமிழ்க் கடவுள் திருமுருகனே பெருந்துணை என்றும் இதன் தொடர்பில் கருத்து தெரிவித்துள்ளார் டான்ஸ்ரீ நடராஜா.


