இனி அடுத்த தைப்பூசம்வரை தேங்காய் மொத்த வியாபாரிகளும் தென்னம் பண்ணையாளர்களும் இருக்கும் இடம் தெரியாமல் அமைதி காப்பர்; தேங்காய் விலை 4.00 வெள்ளியில்(Ringgit Malaysia) நிலை கொண்டது; மொத்தத்தில் பயனீட்டாளர்களின் நிலை பரிதாபம்!

2025-ஆம் ஆண்டில் தைப்பூசத் திருவிழா பிப்ரவரி மாதம் இரண்டாவது வாரத்தில் கொண்டாடப்பட இருந்த நிலையில் ஆண்டு துவக்கத்திலிருந்தே தேங்காய் வியாபாரிகள் ஒருபுறம் புலம்ப ஆரம்பித்தனர்.
கடந்தாண்டு தேங்காய் உற்பத்தி ஏகமாக இருந்தது தங்கள் தோட்டத்தில் இத்தனை தென்னை மரங்கள் இருந்தன; இவ்வளவு காய்கள் காய்த்தன; இந்த ஆண்டு அந்த அளவுக்கு தேங்காய் விளைச்சல் இல்லை என்றும்
‘தேங்காய் இல்லாமல் சமையல் இல்லை’ என்ற நிலையில் இருக்கும் குடும்பத் தலைவிகளுக்கு இந்த நிலைமை மிகவும் சிக்கலாக அமைந்துவிடும் என்றெல்லாம் தென்னந்தோப்பு வைத்திருப்பவர்கள் மறுபுறம் சொல்லி வந்தனர்.
இந்தத் தரப்பினர் இல்லத்தரசிகள் மீது அக்கறையும் பரிவும் கொண்டவர்களைப் போல கருத்து தெரிவித்தனர்.
சந்தை வணிகத்தைப் பொறுத்தவரை இடைத்தரகர்களும் மொத்த வியாபாரிகளும்தான் பலனை சிந்தாமல் சிதறாமல் அனுபவிப்பவர்கள்.
உற்பத்தியாளருக்கும் பயனீட்டாளர்களுக்கும் இடைப்பட்ட இவர்கள்தான் அந்த நாள் முதல் இந்த நாள் வரை அலுங்காமல் குலுங்காமல் கொள்ளை இலாபம் அடைபவர்களாக இருக்கின்றனர். இவர்களுக்கு இடையில் தேங்காயை ஓரிடத்தில் இருந்து இன்னோர் இடத்திற்கு அனுப்பும் கனரக வாகனங்களை வைத்திருப்பவர்கள் மறுபுறம்.
தென்னந்தோப்பின் உரிமையாளர்கள் தேங்காய் விளைச்சலுக்காக அரும்பாடு பட்டு தென்னை மரங்களை பராமரித்து பாதுகாத்து வருவார்கள். பயனீட்டாளர்களோ சில்லறை விற்பனையில் என்ன விலைக்கு விற்கப்பட்டாலும் அதை வாங்கித்தீர வேண்டிய இக்கட்டான நிலையில் இருப்பவர்கள்.

ஓரிடத்தில் விளைகின்ற தேங்காய், பயனீட்டாளரை வந்து அடையும் பொழுது பல கட்டங்களைத் தாண்டி வருகிறது.
பொதுவாக, தென்னந்தோப்பு உரிமையாளர்கள் முற்றிய தேங்காயை அடையாளம் கண்டு அவற்றைப் பறித்து மொத்த விற்பனைக்காக தயாராகும் நிலை தொடர்ந்தபடிதான் இருக்கும.
காரணம், தேங்காய் எந்த நாட்டில் விளைந்தாலும் அது பருவ கால பயிர் அல்ல; ஆண்டு முழுவதும் பலன் தரக்கூடிய தாவரங்களில் தென்னையும் ஒன்று.
இத்தகைய சூழ்நிலையில், டிசம்பர், ஜனவரி மாதங்களில் தென்னந்தோப்பு உரிமையாளர்கள் அவ்வளவு எளிதில் தேங்காயை மொத்த வியாபாரிகளுக்கு வழங்க தயார்ப்படுத்த மாட்டார்கள்.
தைப்பூச திருவிழா சமயத்தில் இலட்சக்கணக்கில் தேங்காய்கள் விற்பனையாகும் என்பதால் தேங்காய் விளைச்சல் இல்லை.. முற்றிய தேங்காய்களின் எண்ணிக்கை குறைவாக இருக்கிறது.. என்றெல்லாம் பலவாறானன காரணங்களைச் சொல்லி மொத்த வியாபாரிகளுக்கு எளிதில் தேங்காயை விநியோகம் செய்ய மாட்டார்கள்.
தைப்பூச விழா நெருங்கும் சமயம் பார்த்து மளமளவென்று தேங்காயை மொத்த வியாபாரிகளிடம் விநியோகம் செய்ய முற்படுவார்கள்.
மொத்த வியாபாரிகளும் தென்னந்தோப்பு உரிமையாளர்களுக்கு ஏற்ப நாடகமாடி, சில்லறை விநியோகத்திற்கு போதிய அளவிற்கு தேங்காயை வழங்காமல் செயற்க்கையான தட்டுப்பாட்டை ஏற்படுத்துவார்கள்.

இதன்மூலம், பொதுமக்களும் தைப்பூச விழா தொடர்பான ஆன்மீக வட்டத்தினரும் தேங்காய் விலை ஏற்றத்தை மனதார ஏற்றுக் கொள்வதற்கான சூழ்நிலையை மெல்ல மெல்ல இந்த இரு தரப்பினரும் ஏற்படுத்துவார்கள். இதற்கு ஏற்ப ஊடகங்களிலும் தகவலை வெளியிட்டு வருவார்கள்
தைப்பூச சமயத்தில் சில்லறை தேங்காய் வியாபாரிகளைக் காட்டிலும் வழிபாட்டு தளங்களில் இருந்து தேங்காய்க்கு அதிகமான தேவை எழும்.
தைப்பூச விழா தொடர்பில் முருகக் கடவுளுக்கு தேங்காய் உடைப்பதற்காக பொதுமக்கள், சமய அமைப்பினர் பெரிய ஆலயங்கள் குறிப்பாக திருமுருக வழிபாட்டு தளங்களின் சார்பில் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ தேங்காய் கொள்முதல் செய்யப்படும்.
தவிர தைப்பூச விழா தொடர்பில் சில ஆலயங்களில் தேர் ஊர்வலம் இடம்பெறும். அவ்வாறான தேர்ப்பாதை நெடுகிலும் பொது அமைப்பினரும் தனிப்பட்டவர்களும் வழிபடுவதற்காக நூற்றுக்கணக்கில்.. ஆயிரக்கணக்கில் என தேங்காய்களை வாங்கிக் குவிக்க முற்படுவர்.
இந்த ஆண்டும் அப்படித்தான் நடந்தது.
வேண்டுதலை நிறைவேற்றுபவர்கள் தனிநபராக இருந்தாலும் ஆலய தரப்பினராக இருந்தாலும் பொது அமைப்பினராக இருந்தாலும் விலை ஏற்றத்தைப் பற்றி கவலைப்படாமல் தேங்காய்களை ஆயிரக்கணக்கில் பல்லாயிரக்கணக்கில் வாங்கிக் குவிப்பார்கள்.
இதனால் தேங்காய் தட்டுப்பாடு டிசம்பர் ஜனவரி மாதங்களில் செயற்கையாக ஏற்படுத்தப்பட்டு தைப்பூசம் நெருங்கும் நேரத்தில் காதும் காதும் வைத்தாற்போல் மளமளவென்று தென்னந்தோப்புக்காரர்கள் தேங்காயை விற்பனை செய்யவும் மொத்த வியாபாரிகள் அவற்றை விநியோகம் செய்யவும் முனைப்பு காட்டுவார்கள்.
இந்த நேரம் பார்த்து சில்லறை வியாபாரிகளும் மளிகை கடைக்காரர்களும் தங்கள் பங்கிற்கு தேங்காய் விலையை உயர்த்துவார்கள்.
இப்பொழுது தேங்காயின் சில்லறை விலை நாடு முழுவதும் ஏறக்குறைய நான்கு வெள்ளியில் நிலை கொண்டு விட்டது .
பொங்கல் பண்டிகை சமயத்தில் பொதுமக்களுக்கு ஏறக்குறைய மூன்று வெள்ளி அளவில் விற்கப்பட்ட சிறு ரக தேங்காய், இப்பொழுது நான்கு வெள்ளிக்கு விற்கப்படுகிறது
இதற்கு சில மாதங்களுக்கு முன்பு தேங்காய் வியாபாரிகளின் புலம்பல் வேறு மாதிரியாக இருந்தது. உள்நாட்டில் விளைச்சல் காணும் தேங்காய்களை விற்பனை செய்வதற்கு மிகவும் சிரமமாக இருக்கிறது. காரணம் அரசாங்கம் வெளிநாடுகளில் இருந்து ஏகமாக இறக்குமதி செய்கிறது.
குறிப்பாக இந்தோனேசியாவில் இருந்து அதிக அளவில் தேங்காய் இறக்குமதி செய்யப்படுவதால் சந்தை விலையில் தேங்காயின் மதிப்பு குறைந்துவிட்டது. இதனால் உள்நாட்டு தேங்காய் வியாபாரிகள் மிகவும் அல்லல் படுகின்றனர் என்று செய்தி வந்தது
ஆனால் தைப்பூசம் நெருங்கிய நேரத்தில் காட்சிகள் அடியோடு மாறின.
தைப்பூசத்திற்கு ஒரு சில மாதங்களுக்கு முன்பிருந்தே தேங்காய் உற்பத்தியாளர்கள் தோப்பிலேயே தேங்காயை சேகரித்து வைத்திருக்கும் நிலையில் மொத்த வியாபாரிகளும் தங்கள் பங்கிற்கு தேங்காயை முடிந்தவரை கொள்முதல் செய்து கிடங்கில் சேமித்து வைப்பார்கள்
தைப்பூசம் நெருங்கும் நேரத்தில் தேங்காய் உற்பத்தியாளர்களும் மொத்த வியாபாரிகளும் கைகோத்து காரியமாற்றுவது வருடாந்திர வழக்கம்.
தைப்பூச விழா சமயத்தில் ஒரு சில பொது அமைப்பினரும் குறிப்பிட்ட வர்த்தகப் புள்ளிகளும் நிறுவனங்களும் நன்கொடைகளை திரட்டி அவற்றின் மூலம் லட்சக்கணக்கான தேங்காய்களை வாங்கிக் குவிக்கும்பொழுது, விலை ஏற்றம் அவர்களுக்கு ஒரு பொருட்டாகத் தெரிவதில்லை.
இப்படித்தான் இந்த 2025 ஆம் ஆண்டு தைப்பூச விழா சமயத்திலும் தேங்காய் விலை ஏகமாக ஏறியது. செயற்கையாக உயர்த்தப்பட்ட தேங்காய் விலை இப்பொழுது இறங்காமல் அப்படியே நிலை கொண்டு விட்டது
பொதுமக்களின் பயனீட்டிற்காக கைப்பிடி அளவுள்ள சின்னஞ்சிறு தேங்காய் கூட 3 1/2 வெள்ளி முதல் நான்கு வெள்ளிவரை தற்பொழுது விற்கப்படுகிறது.
இந்த நிலை இனி அப்படியேத் தொடரும். தேங்காய் வியாபாரிகளும் தாங்கள் நினைத்ததை நிறைவேறிவிட்ட மகிழ்ச்சியில் அமைதியாக இருப்பார்கள். இனி டிசம்பர் மாதம் அல்லது அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்தில் இதேப் போல மீண்டும் தேங்காய்க்கான தட்டுப்பாடு செயற்கையாக ஏற்படுத்தப்படும். 2026 தைப்பூச சமயத்தில் தேங்காய் விலை மீண்டும் ஏற்றம் பெறும். அந்த விலை ஏற்றம் அப்படியே சில்லறை விலையிலும் தொடரும்.
மொத்தத்தில், தென்னந்தோப்பினருக்கும் மொத்த வியாபாரிகளுக்கும் தேங்காய் விலையை ஏற்றுவதற்கு தைப்பூசத் திருவிழா ஒரு துருப்புச்சீட்டு;
தைப்பூச விழாவிற்காக லட்சக்கணக்கான தேங்காய்களை அதன் விலை ஏற்றத்தைப் பற்றி கவலைப்படாமல் வாங்கி குவிக்கும் தரப்பினரும் இந்த விலை ஏற்றத்திற்கு மறைமுக காரணமாக உள்ளனர்.
பாதிப்பிற்கு ஆளாவது பொதுமக்களும் பயனீட்டாளர்களும்தான்.


