
மலேசியாவில் அண்மைய சில நாட்களாக தங்கி இருக்கும் நெப்போலியன் நேற்று பெட்டாலிங் ஜெயா தாமரை உணவகத்திற்கு சிறப்பு வருகை மேற்கொண்டார்
கோடம்பாக்கம் வட்டத்தில் நாயக நடிகர், வில்லிவாக்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர், பெரம்பலூர் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர், மன்மோகன் சிங் அமைச்சரவையில் சமூக நீதித்துறை இணை அமைச்சர் என்றெல்லாம் ஒரு காலத்தில் மிகவும் பரபரப்பாக இருந்த நெப்போலியன், அண்மைக்காலமாக அதற்கு நேர்மாறாக அனைத்து தளங்களிலும் இருந்து ஒதுங்கி இருக்கிறார்.
தவிர அமெரிக்காவில் குடியேறி இருக்கிறார்.

தமிழ்நாட்டின் மையப்பகுதி திருச்சி மண்டலத்தை சேர்ந்த குமரேசன் துரைசாமி என்னும் இயற்பெயரைக் கொண்டவர் நெப்போலியன்.
‘புது நெல்லு புது நாத்து’ என்ற தமிழ்ப் படத்தில் அறிமுகமாகி பல வெற்றிப் படங்களில் நடித்திருககிறார்.
சீவலப்பேரி பாண்டி விருமாண்டி, தசாவதாரம், சுயம்வரம், தாயகம், கிழக்கு சீமையிலே, போன்ற படங்கள் இவர் முத்திரை பதித்தவை; ஏறக்குறைய 70 படங்களில் இவர் நடித்திருக்கிறார்.
சென்னையில் உள்ள வில்லிவாக்கம் சட்டமன்ற தொகுதி தமிழ்நாட்டிலேயே மிகப்பெரிய தொகுதி ஆகும். பொது உடைமை சிந்தனையாளர்கள் நிறைந்த கம்யூனிஸ்ட் கட்சியின் கோட்டையாக இருந்த அந்த தொகுதி, பின்னர் அதிமுக கோட்டையானது.

அப்படிப்பட்ட தொகுதியில் திமுக சார்பில் வென்று சாதனை படைத்தவர் நெப்போலியன். இவர் சட்டமன்ற உறுப்பினராக இருந்த காலத்தில் இவரின் வீட்டு அடுப்பு, அணையாத அடுப்பு என்று அந்த நாட்களில் சொல்லப்பட்டது; வீட்டிற்கு வருகின்றவர்கள் எந்த நேரமும் உணவு உண்டு செல்வதற்கு ஏதுவாக அத்தகைய ஏற்பாட்டை நெப்போலியன் செய்து இருந்தாராம்.
தமிழ் ஈழப் போர் உச்சத்தில் இருந்த நேரம் ஏறக்குறைய முள்ளிவாய்க்காலில் தமிழ் ஈழப்போர் நிலைகுத்திய நேரத்தில் இந்தியாவின் 15-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றது. அதில் திமுக சார்பில் பெரம்பலூர் தொகுதியில் களம் கண்டு, வென்று அமைச்சராகவும் உயர்ந்தவர் நெப்போலியன்.
இப்படிப்பட்டவர் அரசியலில் சில தவறான முடிவுகளை எடுத்ததன் விளைவாக தடம் மாறி இப்பொழுது அரசியல் அடையாளமே இல்லாமல் இருக்கிறார்; ஒருவேளை கட்சியில் இவருக்கு நெருக்கடி ஏற்பட்டு அப்படி தடம் மாறினாரா என்பதும் தெரியவில்லை.
முத்தமிழ் அறிஞரும் அரசியல் வல்லாருமான கலைஞர் மு கருணாநிதி காலத்தில், தமிழகத்தின் இன்றைய முதலமைச்சர் மாண்புமிகு மு.க. ஸ்டாலினுக்கும் அவருடைய அண்ணன் மு.க. அழகிரிக்கும் இடையில் அரசியல் ரீதியான முறுகல்நிலை எழுந்த நேரத்தில் நெப்போலியன் பகிரங்கமாக அழகிரியை ஆதரித்தார்.

இதன் விளைவாகவோ என்னவோ இவர் கட்சியிலிருந்து விலகக் கூடிய நெருக்கடி ஏற்பட்டதாகத் தெரிகிறது.
அந்தமட்டில் இவர் அமைதி காத்திருக்கலாம் அல்லது ஒதுங்கி இருந்திருக்கலாம்; இரண்டையும் செய்யாமல் இவர் அரசியலில் தற்கொலைக்கு சமமான முடிவை எடுத்ததார்
திமுகவில் இப்பொழுது வலிமையான தலைவர்களில் ஒருவராக இருக்கும் கே என் நேருவின் உறவுக்காரரான நெப்போலியன், திமுகவில் இருந்து விலகி பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்தார். அதன் பிறகு அவர் அரசியல் அடையாளமே அற்றுப் போனார்.
திரைத் துறையிலும் இருந்து முற்றாக ஒதுங்கி விட்டார்; தொடர்ந்து அவர் அமெரிக்காவில் குடியேறி இருப்பதாக ஊடக தகவல் வந்தது.
இந்த நிலையில் நடிகர் நெப்போலியன் மலேசியாவிற்கு வருகை தந்திருக்கிறார்.
நெப்போலியன் தன் குழுவினருடன் பத்துமாத காலத்திற்கு குறிப்பிட்ட உலக நாடுகளை சுற்றிவரும் பயணத் திட்டத்துடன் அமெரிக்கா, கனடா, ஜப்பான், சீனா, வியட்நாம், சிங்கப்பூர், மலேசியா, தாய்லாந்து, தென்கொரியா ஆகிய நாடுகளுக்கு குடும்பத்தோடு சுற்றுலா மேற்கொள்ளும் திட்டத்தின் ஒரு பகுதியாக கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு மலேசியாவுக்கு வந்த நெப்போலியன் தாமரை உணவக நிர்வாகத்தினரின் அழைப்பின் அடிப்படையில் இங்கு வருகை தந்திருக்கிறார்.
அரசியல், திரைப்படத்துறை இரண்டையும் ஒதுக்கி வைத்துவிட்டு குடும்ப உறுப்பினர்களுடன் நேரத்தை செலவிடும் நோக்கில் திட்டமிட்ட பத்து மாத காலத்தில் ஆறு மாதம் நிறைவடைந்து விட்டதாகவும் இன்னும் நான்கு மாதத்தில் அமெரிக்கா திரும்ப இருப்பதாகவும் தெரிவித்த நெப்போலியன் மலேசியர்களுக்கு தன் வணக்கத்தைத் தெரிவித்தார்.
தாமரை வர்த்தக குழுமத்தின் தலைவர் ரெனா துரைசிங்கம் தனக்கு நன்கு அறிமுகமானவர் என்றும் இதற்கு முன்பும் இங்கு வந்திருப்பதாகவும் தெரிவித்தார் நெப்போலியன்.
தாமரை உணவகத்தில் சுவையான உணவுடன் விருந்தோம்பல் நல்கப்பட்டதாகவும் இதன் தொடர்பில் தாமரை உணவக நிர்வாகத்தினருக்கும் ஊழியர்களுக்கும் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாகவும் கூறினார் நெப்போலியன்.
நெப்போலியன் தன் குடும்ப உறுப்பினர்களின் நலம் கருதி 10 மாத காலத்திற்கு திட்டமிட்டுள்ள உலக சுற்றுப்பயணத்தை இனிதே நிறைவு செய்ய குமரி வாழ்த்துகிறாள்.


