
நாளை டான்ஸ்ரீ சோமா அரங்கில் நடைபெறுகிறது
சைவ ஆன்மீக எல்லையில் பயணிக்கும் அதேவேளை, தமிழியத்தை முன்னெடுக்கும் மலேசிய சைவ நற்பணி கழகம் ஏற்பாடு செய்துள்ள தமிழர் திருநாள் விழாவும் தமிழ்ப் புத்தாண்டு விழாவும் நாளை பிப்ரவரி 23ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை காலையில் தலைநகரத்து டான்ஸ்ரீ கே ஆர் சோமா அரங்கில் ஒருங்கே நடைபெற இருக்கிறது.
தமிழர்தம் சிந்தனைக்கும் செயலுக்கும் புத்துணர்ச்சி அளிப்பதை நோக்கமாகக் கொண்ட இந்நிகழ்ச்சியில் தாப்பா நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோஸ்ரீ சரவணன் சிறப்பு வருகையாளராக கலந்து கொள்ள இருக்கிறார்.
மலேசியத் தமிழ் நெறிக் கழகத் தலைவர் ‘சொல்லாய்வு அறிஞர்’ இரா. திருமாவளவனும் உரையாற்ற இருக்கும் இந்த நிகழ்ச்சியில் தமிழ் மொழி, தமிழ்ச் சான்றோர், தமிழிசை, தமிழ் உணர்வு சார்ந்த சொற்பொழிவுகளும் தமிழ் மரபுக் கவிதை, தமிழ் புதுக்கவிதை, தமிழ் நாட்டுப் பாடல், தமிழ் நாட்டுப்புற இசை, ரங்கநாதன் நடனப் பள்ளியின் தமிழ் கிராமிய நடனம், இடைநிலைப் பள்ளி மாணவர்களின் படைப்புகள் என்று பல்வேறு அங்கங்கள் இந்த நிகழ்ச்சிக்கு அணி சேர்க்க இருக்கின்றன.
மலேசியவாழ் தமிழர்களிடையே தமிழ் உணர்வையும் தமிழிய பண்பாட்டு சிறப்பினையும் தமிழர் இனமான உணர்வினையும் மேம்படுத்தும் வகையிலும் தமிழர் தன் தனித்தன்மையை வெளிக்கொணரும் வகையிலும் முற்றிலும் இளவயமாக நடத்தப்படும் இந்நிகழ்ச்சியில் வருகையாளர்களுக்கு மதிய உணவு வழங்கப்படும் என்று நிகழ்ச்சி ஏற்பாட்டுக் குழு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் ஆர்வலர்களும் பற்றாளர்களும் இந்நிகழ்ச்சியில் குடும்பத்தோடு தமிழர்தம் பாரம்பரிய உடையில் வந்து, கலந்து சிறப்பிக்கும்படி அன்போடு அழைக்கப்படுகின்றனர்.
இந்த நிகழ்ச்சி தொடர்பான மேல் விவரத்திற்கு 012-3277061, 012-2340480 ஆகிய எண்களின் தொடர்பு கொள்ளலாம்.


