
மலேசிய இந்திய முஸ்லிம் உணவக உரிமையாளர் சங்கமான பிரெஸ்மா-PRESMA, மலேசிய இந்திய உணவக உரிமையாளர் சங்கமான பிரிமாஸ்-PRIMAS ஆகிய இரு உணவக உரிமையாளர் சங்கங்களின் கோரிக்கையை ஏற்பதற்கில்லை என்று பொருளாதார அமைச்சர் டத்தோஸ்ரீ ரஃபிசி ரம்லி ஏறக்குறைய ஒரு மாதத்திற்கு முன்பு(2025, ஜனவரி 23) அதிரடியாக கருத்து தெரிவித்திருந்தார்.
ரஃபிஸி ரம்லியின் இந்தக் கருத்து, ஏறக்குறைய 20 ஆயிர உணவக உரிமையாளர்கள் கால் நூற்றாண்டு காலமாக எதிர்நோக்கி வரும் சிக்கலின் அடிப்படையையும் ஆழத்தையும் அளசி-ஆராயாமல், குறைந்தபட்சம் சீர்தூக்கிப் பார்க்காமல், சொல்லப்பட்ட கருத்தாதத் தெரிகிறது.
2025 ஜனவரி 20-ஆம் நாள், இந்த இரு உணவகத் தொழில்சார் அமைப்புகளின் சார்பில் கோலாலம்பூர் இம்பியானா தங்கும் விடுதியில் ஏற்பாடு செய்யப்பட்ட செய்தியாளர் சந்திப்பில், தொழிலாளர் பற்றாக்குறை சிக்கலால் இந்திய உணவக உரிமையாளர்கள் எதிர்கொள்கின்ற துயரத்தைப் பற்றி எடுத்துரைத்ததுடன் அல்லாமல் GANTIAN எனப்படும் மாற்றுத் தொழிலாளர்களை அமர்த்திக் கொள்வதற்காவது உடனே அனுமதி வழங்கும்படி மதானி ஒற்றுமை அரசாங்கத்தை குறிப்பாக உள்துறை அமைச்சகத்தையும் தனிப்பட்ட முறையில் மனிதவள அமைச்சையும் கேட்டுக் கொண்டனர்.

இதற்கு அரசத் தரப்பில் இருந்து உடனடியாக பதில் வந்தது;
ஆனால் இந்த பதில் பிரதமர் துறை அலுவலகத்தில் இருந்தோ அல்லது உள்துறை அமைச்சகத்திடம் இருந்தோ அல்லது சம்பந்தப்பட்ட மனிதவள அமைச்சரிடமிருந்தோ அல்ல; மாறாக பொருளாதாரத் துறை அமைச்சரிடம் இருந்து அதுவும் பாதகமான பதில் வந்திருப்பதுதான் உணவக உரிமையாளர் சங்கங்களை சற்று அதிர வைத்தது.
மலேசிய வர்த்தக-தொழில் துறை, கட்டுமானத்துறை, தோட்டத் தொழில் துறை, சேவைத் துறை உட்பட அனைத்து தளங்களும் வெளிநாட்டுத்
தொழிலாளர்களை சார்ந்து இருப்பதை கட்டம் கட்டமாக குறைக்க வேண்டும் என்பதுதான் அரசின் எண்ணம். இதை மட்டுப்படுத்துவதில் கடந்த 12 மலேசியத் திட்டங்களும் தோல்வி அடைந்துள்ளன என்று தெரிவித்துள்ள மக்கள் நீதிக் கட்சி-பிகேஆர் துணைத் தலைவருமான ரஃபிசி ரம்லி,

ஒவ்வொரு மலேசியத் திட்டத்தின்போதும் வெளிநாட்டுத் தொழிலாளர் எண்ணிக்கையை மட்டுப்படுத்துவதற்கான இலக்கு நிர்ணயிக்கப்பட்டாலும் அந்த எண்ணிக்கை கூடிக்கொண்டுதான் வந்துள்ளதேத் தவிர குறையவில்லை என்று ஆதங்கப்பட்டிருந்தார்.
மலேசிய மத்தியக் கூட்டரசின் இந்த இலக்கிற்கு, இந்திய உணவக உரிமையாளர்கள் எந்த வகையிலும் குறுக்கே நிற்கவில்லை. மலேசியாவில் இருக்கின்ற இலட்சக் கணக்கான வெளிநாட்டுத் தொழிலாளர்களில் ஏறக்குறைய 18 விழுக்காட்டினர்தான் Service Sector எனப்படும் சேவைத் துறையில் உள்ளனர்.
மற்றவர்கள் தோட்டத் துறை உள்ளிட்ட உற்பத்தித் துறை, கட்டுமானத் துறை, வர்த்தகத் துறை போன்ற பிரிவுகளில் வேலைபார்க்கின்றனர்.
சேவைத் துறையில் உள்ள 18% வெளிநாட்டுத் தொழிலாளர்களில்கூட, இந்தியர் உணவகத் துறையில் இருப்பவர்கள், ஏறக்குறைய 5 விழுக்காட்டினர்தான் என்று புள்ளிவிவரத் தகவல் தெரிவிக்கிறது.

15 ஆயிரம் இந்திய முஸ்லிம் உணவகங்கள், 5 ஆயிர இந்தியர் உணவகங்கள் என ஏறக்குறைய 20 ஆயிர உணவகங்களில் பணிபுரியும் இந்த 5 விழுக்காட்டுத் தொழிலாளர்களில் ஒப்பந்த காலம் முடிந்து, தங்களின் சொந்த நாட்டிற்கு திரும்புபவர்களுக்கான மாற்றுத் தொழிலாளர்களை நியமித்துக் கொள்ளத்தான், பிரெஸ்மாவும் பிரிஸ்மாவும் சளைக்காமல் போராடி வருகின்றன.
இத்தகைய சூழலில், திறனற்ற(Non Skilled) தொழிலாளர்களை கட்டங்கட்டமாக குறைக்க நினைக்கும் அரசாங்கத்தின் இலக்கிற்குகு, இந்த இரு இந்திய உணவக உரிமையாளர் சங்கங்களும் எந்த வகையில் குறுக்கே நிற்கின்றன என்பதை ரஃபிசி ரம்லி சீர்தூக்கிப் பார்க்கவில்லை என்றேத் தெரிகிறது.
பொறியியல், மருத்துவம் உள்ளிட்ட துறைகள் சார்ந்த திறன்மிகு மலேசியர்கள் பேரளவில் வெளிநாடுகளில் பணிபுரிகின்றனர்.

உயர்கல்விக்காக வெளிநாடுகளுக்குச் செல்வோரில் பெரும்பாலானவர்கள் தங்கள் படிப்பை முடித்த பிறகு அங்கேயே பணிபுரிய தொடங்கி விடுகின்றனர். அவர்கள் தாயகத்திற்குத் திரும்புவதற்கு ஏற்ப, பொருத்தமான வேலைவாய்ப்பை உருவாக்குவதில் அரசு முனைப்பு காட்டுகிறது என்றால், அதற்கு பிரெஸ்மா- பிரிமாஸ் அமைப்புகள் எந்த வகையிலும் தடையாக இருப்பதாகத் தெரியவில்லை.
இன்றைய மடானி ஒற்றுமை அரசாங்கம், ஆண்டின் பிற்பகுதியில் அறிவிக்க இருக்கின்ற பதிமூன்றாவது மலேசியத் திட்டத்தில், திறன்சார் வேலைவாய்ப்பை உருவாக்குவதில் முன்னுரிமை அளிக்கிறதென்றால் அது வரவேற்கத்தக்க அம்சம்தான்.
அதற்கும் Gantian எனப்படும் மாற்றுத் தொழிலாளர்களுக்காக அலைமோதும் இந்திய உணவக உரிமையாளர்கள் முன்வைக்கும் கோரிக்கைக்கும் எந்தத் தொடர்பும் இருப்பதாகத் தெரியவில்லை.
கடந்த கால் நூற்றாண்டு காலமாக, இந்த உணவக உரிமையாளர் சங்கங்களின் ஆண்டுக் கூட்ட அறிக்கைகளை கவனித்தால், ஓர் உண்மை வெளிச்சத்திற்கு வரும். உணவகப் பணிகளுக்கு வெளிநாட்டுத் தொழிலாளர்களைத் தருவிக்க அரசு அனுமதிக்க வேண்டும் என்னும் தீர்மானம் ஆண்டுதோறும் கண்டிப்பாக இடம் பெற்று இருக்கும்.
இந்திய முஸ்லிம் உணவகங்கள் மற்றும் இந்திய உணவகங்களுக்கான வெளிநாட்டு தொழிலாளர் சிக்கலுக்கு மலேசிய மத்திய கூட்டுரசுகள் அவ்வப்பொழுது உதவித்தான் வருகின்றன. ஆனால், பிரச்சனை தீர்வதற்குள் அத்தகைய உதவிக்கரம் ‘டக்கென’ மடக்கிக் கொள்ளப்படுகிறது

வங்காள தேசத் தொழிலாளர்களைத் தருவிப்பதற்கான அறிவிப்பை மடானி அரசாங்கம் விரைவில் வெளியிடும் என்றத் தகவல்கூட அண்மையில் வெளியாகி இருந்தது. இந்த நிலையில், இந்திய உணவகங்கள் காலங்காலமாக எதிர்நோக்கும் தொழிலாளர் பற்றாக்குறை சிக்கலை மட்டும் மத்தியில் ஆட்சி புரிகின்ற எந்த அரசாக இருந்தாலும் பாராமுகத்துடனும் கண்டும் காணாமலும் கடந்து செல்வதுதான் விந்தையாக உள்ளது.
காலம் முழுவதும் வெளிநாட்டு தொழிலாளர்களையே சார்ந்திராமல் உள்நாட்டு தொழிலாளர்களையும் பணிக்கு அமர்த்துவதில் உணவக உரிமையாளர்கள் அக்கறை செலுத்த வேண்டும் என்று அரசாங்கம் தொடர்ந்து வலியுறுத்துவதற்கு ஏற்ப தாங்களும் தொடர்ந்து முயற்சி மேற்கொண்டு தான் வருகின்றோம் இந்த இரு அமைப்புகளின் பொறுப்பாளர்கள் தெரிவிக்கின்றனர்.
ஆனாலும் நீண்ட பணிநேரம், அழுக்கான வேலை, சிற்சில வேளைகளில் ஆபத்தான சூழல் உள்ளிட்ட அம்சங்களைக் கண்டு பின்வாங்குகின்றனர். உள்நாட்டு இளைஞர்கள் உணவகங்களில் பணிபுரிய பெரும்பாலும் அக்கறை காட்டுவதில்லை; முன்வருவதில்லை; அப்படி முன்வருகின்ற உள்நாட்டு இளைஞர்களும் தொழிலைக் கற்றுக் கொண்ட பின் அடுத்து சொந்தமாக தொழில் தொடங்க ஆரம்பித்து விடுகின்றனர்; அல்லது சிங்கப்பூருக்கு வேலைக்கு செல்கின்றனர் அங்கு ‘ரொட்டி சானாய்'(இந்தியா, பாகிஸ்தான் போன்ற நாடுகளில் பரோட்டா என்று அழைக்கப்படும் ஓர் சிற்றுண்டி உணவு) போடுகின்ற சமையல்காரருக்குகூட சிங்கப்பூர் நாணயம் 3,000 வெள்ளி ஊதியம் வழங்கப்படுகிறது என்று பிரமாஸ், பிரெஸ்மா அமைப்புகளின் சார்பில் கருத்து தெரிவிக்கப்படுகிறது.
பொதுவாக உணவகங்களில் நீண்ட நேரம் வேலை செய்ய வேண்டி இருப்பது உண்மைதான். அதேவேளை உள்நாட்டு தொழிலாளர்களாக இருந்தால் 8 மணி நேர வேலைக்குப் பிறகு மிகைநேர ஊதியம் கொடுப்பதற்கும் இந்திய உணவக உரிமையாளர்கள் தயாராக இருக்கின்றனர். ஆனாலும் உள்நாட்டு இளைஞர்கள் உணவக வேலைகளில் அக்கறை காட்டுவதே இல்லை;
மலேசியாவில் ஏறக்குறைய ஒன்றரை மில்லியன் வெளிநாட்டு தொழிலாளர்கள் பணி புரிகின்றனர். இவர்களில் உணவகங்களில் வேலை செய்வோர் சில ஆயிரம் பேர்தான்;
தவிர உணவகத் தொழில் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு துணையாக இருப்பது ஒரு பக்கம் இருக்க சுற்றுலாத் துறையை ஊக்குவிக்கும் வகையிலும் இந்த உணவுசார் தொழில் அமைந்துள்ளது.

இப்படிப்பட்ட நிலையில் இந்திய உணவக உரிமையாளர்களின் சிக்கலையை தீர்த்து வைப்பதற்கும் வெளிநாட்டில் பணிபுரிகின்ற திறன்சார் அல்லது உயர்நிலை பணியாளர்களுக்கு ஏற்ற வேலை வாய்ப்புகளை மலேசியாவில் உருவாக்குவதற்கும் என்ன தொடர்பு இருக்கிறது என்று தெரியவில்லை. இதற்கு ரஃபிசி ரம்லிதான் விளக்கமளிக்க வேண்டும்.
2023 நவம்பர் 30ஆம் நாள் என்று நினைக்கிறேன், மலேசிய இந்திய பொற்கொல்லர் சங்க ஆண்டு கூட்டத்தில் பேசிய மலேசிய இந்திய வர்த்தக தொழிற்சங்க சம்மேளனத் தலைவர் டத்தோஸ்ரீ ந. கோபாலகிருஷ்ணன் பேசியபொழுது “இந்திய வர்த்தக- தொழில்துறையினர் எதிர்கொள்ளும் தொழிலாளர் பற்றாக்குறை பிரச்சனையை பேசிப்பேசி அலுத்து விட்டது; ஒருவகையில் வெட்கமாககூட இருக்கிறது” என்று மிகவும் மனம் வெதும்பி பேசினார்.
மொத்தத்தில் இந்திய உணவகத் தொழில் துறை ஒரு சிறிய வட்டம்; அவர்களுக்குத் தேவையான தொழிலாளர்களை அமர்த்திக் கொள்வதற்கான உரிமத்தை வழங்குவதிலோ குறைந்தபட்சம் ஒப்பந்தம் முடிந்து செல்கிறவர்களுக்கான மாற்றுத் தொழிலாளர்களை அமர்த்திக் கொள்வதற்கான அனுமதியை வழங்குவதிலோ புத்ராஜெயாவிற்கு என்ன தயக்கம் என்று தெரியவில்லை.
தொடர்ந்து ஐந்து பிரதமர்களின் தலைமையிலும் இந்த சிக்கல் தீரவே இல்லை.
இதற்கான விடிவுகாலம் எப்போது?


