Tuesday, February 17, 2026

முகலாய சாம்ராஜ்யத்தின் பொன்விழா ஆட்சியாளர்: ஔரங்கசீப்

இரத்தக்கரையோடு தொடங்கிய அரசியல் வாழ்க்கை வெண்ரோஜாவுடன் நிறைவுற்ற பாங்கு

உலகின் பாரம்பரிய ஏழு அதிசயங்களில் ஒன்றான தாஜ்மகாலின் நாயகமாக அமைக்கப்பட்டுள்ள கோளக் கூம்பிற்கு அடியில் மீளாத் துயில் கொண்டுள்ள பேரழகி மும்தாஜ் பேகத்தின் ஐந்தாவது மகன் ஔரங்கசீப்.

இன்றைய இந்தியத் துணை கண்ட நிலப்பரப்பில் ஏறக்குறைய 90 விழுக்காட்டுப் பகுதியை 49 ஆண்டுகள் எந்த சிக்கலும் இன்றி சிந்தாமல் சிதறாமல் ஆட்சி செய்த வலிமையான ஆட்சியாளர் ஔரங்கசீப்.

பாரம்பரிய மன்னராட்சி காலத்திலும் சரி, புதுமைமிகு இன்றைய ஜனநாயக நடைமுறையிலும் சரி, இந்த சாதனையை மிஞ்சியவர் எவரும் இலர்.

போர் முனையில் வாள்வீச்சுக்கு அஞ்சாத படைத் தளபதியாக விளங்கிய ஔரங்கசீப், முகலாய சாம்ராஜ்ய தென்பகுதியின் தளபதியாகவும் குஜராத் மண்டலத்தின் ஆளுநராகவும் செயல்பட்டவர்.

ஔரங்கசீப்பின் போர் வியூகம் ஒருகாலும் தப்பியதில்லை; அவர் வழிநடத்திய படை தோற்றதே இல்லை.

ஆனாலும் ஷாஜகான் பாதுஷா, தனக்குப் பின் புதுடில்லி கோட்டை கொத்தளத்தை ஆளும் பொறுப்பை மூத்த மகனான தாரா சிக்கோவிடம் வழங்கவே முடிவு எடுத்திருந்தார்.

ஔரங்க சீப்பை முதல் பார்வையிலேயே ஓரக் கண்ணால் மயக்கிய ஹீரா பாய்

தன் உடல் நிலையை அடிப்படையாகக் கொண்டு எதிர்காலத்தை அவதானித்த ஷாஜகான், திடுதிப்பென்று தாராவிடம் ஆட்சியை ஒப்படைத்தார்.

ஆருயிர் மனைவி மும்தாஜ் பேகம் இறந்ததிலிருந்து ஆட்சியிலும் வாழ்க்கையிலும் ஒருவித பிடிப்பற்ற நிலையில் இருந்த ஷாஜகான், தாஜ்மகாலை கட்டி முடிப்பதற்கே தன் ஆற்றலை அதிகமாக செலவிட்டிருந்தார்.

தன் மூத்த அண்ணன் தாரா, இளம் பாதுஷாவாக அறிவிக்கப்பட்டதை அறவே ஏற்றுக்கொள்ளாத ஔரங்கசீப், தான் இருந்த இடத்திலிருந்தே தன்னை தில்லி சுல்தானாக பிரகடனப்படுத்திக் கொண்டார். அவுரங்கசீப் தன் தோள்களை விட உள்ளத்தில் அதிக வலுவை கொண்டிருந்தார். தினவெடுத்த அந்தத் துணிவுதான் இத்தகைய அறிவிப்பை செய்யும்படி தூண்டியது.

இதை சற்றும் எதிர்பாராத ஷாஜகானும் மூத்த மகன் தாராவும் படைநடத்திச் சென்று ஔரங்கசீப்பை மடக்கி, ஒடுக்கி அடக்கவும் முயன்றனர்.

ஆனால் கால மகளின் பார்வை ஔரங்கசீப்பின் பக்கம் இருந்தது. சிவந்த கண்களோடும் கொப்பளித்த உணர்வோடும் ஔரங்கசீப் வாளை ஏந்திவிட்டால் புயலைப் போன்று சீறி முன்னேறுவார்.

அதேவகையில் வெகுண்டு முன்னேறி வந்ததை தாக்குப் பிடிக்க முடியாத தந்தை ஷாஜகானும் அண்ணன் தாராவும் புறமுதுகிட்டு பின் வாங்கினர். ஔரங்கசீப் போர்முனையை எதிர்கொள்ளும் விதத்தை நேரில் கண்ட ஷாஜகான் ஒரு கணம் அதிர்ந்துதான் போனார்.

தந்தையை சிறை வைத்த அவுரங்கசீப், சகோதரர்கள் அத்தனை பேரையும் வஞ்சம் தீர்த்தார். ஒருவரையும் விட்டு வைக்காமல் வேட்டையாடி பழிதீர்த்தார்

ரத்தக்கரை மாறாத கையோடு ஒவ்வொருவரையும் அவர் தீர்த்துக்கட்டிய விதம் இப்பொழுது நினைத்தாலும் குலைநடுங்கும் தன்மையது;

பாரசீக மொழியில் இன்றளவும் ஒரு பழமொழி மிகவும் புகழ் பெற்றது. அடைந்தால் மகாதேவி அல்லது மரணதேவி என்று மகாதேவி திரைப்படத்தில் இடம்பெற்ற வசனம், பி எஸ் வீரப்பாவின் வாய்மொழியைவிட அவரின் உடல் மொழியால் மிகமிக பிரபலம். ஆனாலும் அது காதல் மொழி; இந்தப் பாரசீக வசனமோ வீரம் சார்ந்தது.

அரியணை அல்லது கல்லறை என்பதுதான் அந்த பாரசீக பழமொழி.

முகலாய சாம்ராஜ்யத்தின் அதிகாரமிக்க பாதுஷாவாக தன்னை ஒருவழியாக பிரகடனப்படுத்திக் கொண்ட ஔரங்கசீப், ஒப்பாரும் மிக்காரும் இல்லாத வகையில் ஏறக்குறைய 50 ஆண்டுகள் அந்த பேரரசை வழி நடத்தினார்.

வீர மரபுமிக்க மராத்திய மன்னன் சிவாஜியின் மறைவு ஔரங்கசீப்பிற்கு மடைதிறந்த வெள்ளம்போன்ற நிலையை ஏற்படுத்தியது.

அதனால் தென்புளத்தில் தமிழ்நாட்டு எல்லைவரை அவருடைய பேரரசு பரந்து விரிந்திருந்தது.

ஒருசில வேளைகளில் ஔரங்கசீப் படை வலிமையாலும் உடல் வலிமையாலும் பலவீனப்பட்டு இருந்த நேரத்தில் கூட அவர் ஆட்சியை கைப்பற்றிய காலத்தில் காட்டிய வீரமும் அசுர வேகமும் முகலாய சாம்ராஜ்யம் முழுவதும் பரவி இருந்ததால் அவரின் எதிரிகள் எதிரில் தலைகாட்டவே அஞ்சி ஒதுங்கினர்.

ஆட்சி, நிர்வாகம், அதிகாரம் என்ற வகையில் சீறும் சிறுத்தையாக விளங்கிய ஔரங்கசீப், தனிப்பட்ட வாழ்க்கையில் மிகவும் மாறுபட்டவராக அமைதியின் சின்னமாக அடக்கத்தின் உருவமாக எளிமையின் அடையாளமாக ஆடம்பரமின்றி இஸ்லாமிய நெறி வழுவாமல் எளிய மனிதராகவே வாழ்ந்தார்.

ஔரங்கசீப்பின் நீண்டகால ஆட்சியில், இவர் பெரிய கோட்டை, கொத்தளங்கள், கோபுரங்கள் எதையும் எழுப்பவில்லை. நாட்டைப் பாதுகாப்பதிலும் சீரான நிர்வாகத்தை அளிப்பதிலும் முழு கவனத்தை வெளிப்படுத்தினார்.

ஷாஜகான் மும்தாஜ் மேகம் இணையரின் கடைக்குட்டி பிள்ளையான ஔரங்கசீப், தன் மூத்தோரை எல்லாம் வஞ்சகமாக வீழ்த்தி ஆட்சியை கைப்பற்றிய விதத்தைக் கண்டு மருண்டு ஒதுங்கிய சகோதரி ஜெகனாரா பேகம், ஔரங்கசீப் எதிரில் படுவதையே தவிர்த்துவீட்டு, வீட்டுச்சிறை வைக்கப்பட்டிருந்த தந்தையுடன் ஐக்கியமானார்.

காரணம் இவர் தொடக்கத்தில் மூத்த அண்ணன் தாராவை ஆதரித்தவர். அந்த மூத்த அண்ணன் தாராவின் தலையை வெட்டி தந்தை ஷாஜகானுக்கு பரிசாக அளித்தவர் ஔரங்கசீப்.

அதேவேளை தன் தந்தை ஷாஜகானும் லேசுப்பட்டவர் இல்லை என்பதை ஜகனாரா எண்ணிப் பார்த்தாரா என்பது தெரியவில்லை.

ஷாஜகான் ஆட்சி அதிகாரத்தில் இருந்த பொழுது தன் சகோதரர்களான குஸ்ரோ, ஷஹ்ரியா இருவரையும் கொல்ல ஆணையிட்டவர்; தவிர தான் அரியணை ஏறிய சமயத்தில் தன் இரு மருமகன்களுடன் மற்றவர்களையும் கொன்றுவிட்டுத்தான் மகுடம் சூடினார்.

மொத்தத்தில், அரண்மனை வாசத்தை அடியோடு வெறுத்த ஜகனாரா பேகம், பாரசீக மொழியில் மிகச்சிறந்த கவிஞராகவும் எழுத்தாளராகவும் விளங்கினார்.

அவரின் இலக்கியப் படைப்பு இன்றளவும் பாரசீக மொழியில் போற்றப்படுகிறது.

ஜகனாரா பேகம் ஒருமுறை தன் எண்ணத்தை நெஞ்சில் ஆழப் பதிந்திருந்த பயம் கலந்த அக்கருத்தை அப்படியே வெளிப்படுத்தி இருந்தார்; தானும் ஒருவேளை ஆணாகப் பிறந்திருந்தால் சகோதரர் (தம்பி என்று சொல்வதை அவர் தவிர்த்தார்) ஔரங்கசீப்பின் வாள்வீச்சிற்கு எப்போதோ இறையாகி இருப்பேன்; காலம் என்னை அந்த நிலைக்கு ஆட்படுத்தவில்லை என்று ஆறுதலும் தெரிவித்திருந்தார்.

இஸ்லாமிய நெறியில் இருந்தும் சமயக் கடமையிலும் வழுவாமல் வாழ்ந்த ஔரங்கசீப், போர் முனைத் தருணங்களில்கூட ஐந்து வேலை தொழுகைக்கு ஏதாவது தடை நேர்ந்தால் மிகவும் வருந்துவாராம்.

மாபெரும் நிலத்தை கட்டி ஆண்ட இந்த பாதுஷாவுக்கு ஓய்வு நேரம் என்றால் மிகவும் பிடிக்கும்; காரணம் குல்லா தயாரிப்பதற்கும் அல்குர்ஆனை கையெழுத்து பிரதியாக எழுதுவதற்கும் அவ்வேளையை இன்பமுற பயன்படுத்துவாராம். ஔரங்கசீப் அணியும் ஆடையில் ஆடம்பரம் இருக்காது; அவர் அணிந்த மகுடத்தில்கூட அணிமணிகள் இருக்காது. எந்த நேரமும் வெள்ளாடையை விரும்பும் ஔரங்கசீப் நேரம் கிடைக்கும் பொழுது சிறு வணிகராக மாறுவது வழக்கம்.

தான் தயாரித்து வைத்திருந்த குல்லாக்களையும் அல்குர்ஆன் பிரதிகளையும் அரண்மனைவாசிகள், செல்வந்தர்கள், தன்னைக் காண வரும் வெளிநாட்டுத் தூதர்கள், சந்திக்கவரும் ஆன்மீகப் பெருமக்கள், வர்த்தகப் புள்ளிகள் உள்ளிட்ட அனைவரிடமும் விற்று முதலாக்குவார்.

மிகவும் தீர்க்கதரிசியான அவுரங்கசீப் 50 ஆண்டுகளை ஆட்சி செய்ய எண்ணினார் ஆனால் காலம் அந்த வாய்ப்பை 49 ஆண்டுகளுக்கே வழங்கியது. தன் நிலை, எல்லா வகையாலும் நிறைவுக் கட்டத்தை எட்டிவிட்டதாக உணர்ந்த ஔரங்கசீப் தன்னுடைய 49ஆம் ஆண்டு ஆட்சி தொடக்கத்தில் உயில் எழுதினார்.

அதில், தான் இறந்தபிறகு உடலின் மீது போர்த்துவதற்கான துணியை வாங்கவும் நல்லடக்க செலவிற்கும் அரண்மனைக் கருவூலத்திலிருந்து ஒரு பொற்காசுகூட எடுக்கக்கூடாது என்றும் தான் குல்லா விற்றும் அல்குர்ஆன் பிரதி விற்றும் சேமித்து வைத்திருக்கின்ற பணத்தைக் கொண்டே எல்லாவற்றையும் நிறைவேற்ற வேண்டும் என்றும் அந்த எளிய ஆட்சியாளர் எழுதி வைத்த உயிலில் பதிவிட்டு இருந்தார்.

அவர் உயில்வழி தெரிவித்த விருப்பத்தின் படியே எல்லாமும் நிறைவேறியது. அந்த நாள் இந்த நாள் மார்ச் 3; ஆண்டு 1707.

செய்தி சம்பந்தப்பட்ட உங்கள் கருத்தை பதிவு செய்ய "வாட்சாப்" பட்டனை அழுத்துங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

அதிகம் பகிரப்பட்டவை