வரலாற்றுப் பெட்டகத்தின் இன்றைய(நவம்பர் 26) ஏட்டில்.. .!

தேசிய முன்னணி, எஃகு அரசியல் கோட்டையாக இருந்தபொழுது, அதன் பெரிய அண்ணன் அம்னோ, அடுத்த நிலை தளபதிகளாக இருந்த மசீச(மலேசிய சீனர் சங்கம்), மஇகா(௳லேசிய இந்தியர் காங்கிரஸ்) ஆகிய மூன்று கட்சிகளின் தலைவர்களுமே தங்களுக்கு அடுத்தத் தலைமையைத் தீர்மானிக்கத் தவறியவர்கள்; விரும்பாதவர்கள்.
அந்த வகையில், இன்றைய பிரதமர் டத்தோஸ்ரீ அன்வாருக்கு மாற்றாக துன் மகாதீரால் அன்று நிறுத்தப்பட்டவர்தான் படாவி; காலப் போக்கில் அதே படாவியை சிறுமைப்படுத்தியவரும் இதே மகாதீர்தான்.
அமைதியான அரசியல் தலைவரான படாவி, 1939-இல் இதே நாளில் பிறந்தவர். அவர் நீடுவாழ, குமரி வாழ்த்துகிறாள்!

புற நானூற்று அத்தியாயத்தை நவீன போர்முனையின் மூலம் புதுப்பித்தவர்; அறமும் மறமும் இயைந்த தமிழர்தம் வீர மரபை உலகிற்கு உணர்த்தியவர். குமரிப் பெருநிலம் ஆழ்கடலில் அமிழ்ந்த பெருஇடைவெளிக்குப்பின் தமிழ மக்கள் மீண்டும் உலகெலாம் பரவும் வகை செய்தவர்.
மறத் தமிழச்சியின் மடியில் தவழ்ந்த இந்த வீரத் திருமகனை எதிர்கொள்ள 13 நாடுகள் இருட்டிலும் வெளிச்சத்திலுமாக அணிதிரண்டன. அவர்தான் மேதகு வே. பிரபாகரன். மாளாத் திருப்புகழுடன் தமிழர்தம் நெஞ்சமெல்லாம் வாழும் அத்தலைவருக்கும் இன்று பிறந்த நாள்!!
குமரி, அவரை நெஞ்சார நினைவுகூர்கிறாள்!

தமிழ் பிராமி எழுத்துக்களையும் தமிழர்தம் நாகரிகத் தொட்டிலான சிந்துசமவெளி எழுத்துக்களையும் ஆய்வுசெய்து தமிழரின் தொல்பெருமைக்கு ஓரளவேணும் கட்டியம் கூறியவரும் தமிழக கல்வெட்டு ஆராய்ச்சியாளருமான ஐராவதம் மகாதேவனுக்கு, இன்று நினைவு நாள்.
இந்த மலைநாட்டின் பாரம்பரிய தலைநகரம் கோலாலம்பூரில், 1966 ஆம் ஆண்டு நடைபெற்ற உலகத் தமிழ் ஆராய்ச்சி முதல் மாநாட்டில் கலந்து கொண்டவர். சிறந்த நிருவாகி, பத்திரிகையாளரான இவரையும் குமரி எண்ணிப் பார்க்கிறாள்.


