
மலேசிய இந்து சமுதாயத்தையும் இந்து சமயத்தையும்பற்றிஅடிக்கடி இழிவான கருத்தைப் பதிவு செய்யும் மதம் மாறிய சமயப் பிரச்சாரகர் ஜம்ரி வினோத்திற்கு மத்திய மடானி அரசு உடனே கடிவாளம் போட வேண்டும் என்று மலேசிய இந்து சங்கத் தலைவர் ‘சிவநெறி செல்வர்’ தங்க கணேசன் மிகவும் வலியுறுத்தி உள்ளார்.
‘ஏரா’ பண்பலை வானொலி நிலையத்தின் அறிவிப்பாளர்கள் சமூகத்திற்கு செய்ய வேண்டிய கடமைகள் ஏராளமாக இருக்கும்பொழுது தேவையில்லாமல் இந்து சமயத்தை சிறுமைப்படுத்தும் வகையில் அண்மையில் கொண்டாடப்பட்ட தைப்பூச திருவிழா தொடர்புடைய காவடி குறித்து பரிகாசம் செய்து காணொளி காட்சி வெளியீடு செய்திருந்தனர்.

இத்தகைய சமய- பண்பாட்டு காலாடித்தனமான நடவடிக்கை மலேசிய இந்துக்களின் மனதை பேரளவில் புண்படுத்திய நிலையில், சமந்தப்பட்டவர்களை காவல்துறை அதிகாரிகள் விசாரணை செய்து கொண்டிருக்கும் இந்த வேளையில் தேவையில்லாமல் சமயப் பிரச்சாரகரும் மதம் மாறிச் சென்றவருமான ஜம்ரி வினோத்தும் இடைபுகுந்து தன் பங்கிற்கு இந்து சமுதாயத்தின் மீதும் இந்து சமயத்தின் மீதும் கல்லெரியும் விதமாக காவடி குறித்து பகடியாக கருத்து தெரிவித்திருக்கிறார்.
மலேசிய மக்கள் இனம் சமயம் பாராது ஒன்றிணைந்து ஒருமித்து வாழ்கின்ற வேளையில் அதற்கு குந்தகம் விளைவிக்கும் விதமாக அடிக்கடி ‘மூன்று ஆர்’ 3-R தொடர்புடைய கருத்தை வெளியிடுவதை ஜம்ரி வினோத் வாடிக்கையாக கொண்டிருக்கிறார்.
இவரை அரசு உரிய முறையில் கண்டிக்காததாலும் காவல்துறை பொருத்தமான நடவடிக்கை எடுக்காததாலும் ஜம்ரி வினோத்திற்கு மிகவும் துளிர்விட்டு உள்ளது.
அதனால், ஒற்றுமை அரசாங்கம் இனியாவது இவரைக் கண்டித்து கடிவாளம் போட வேண்டும் என்று மலேசிய இந்து சங்கம் வலியுறுத்துவதாக இதன் தொடர்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் தங்க கணேசன் மேலும் தெரிவித்துள்ளார்.


