
மனசான்றுடை மலேசியத் தமிழ்ப் பெண்ணே!!
உன்னிடம் ஒன்று, அல்ல அல்ல; நிறைய கேட்கத் தோன்றுகிறது!
உலக பெண்கள் தினம் கொண்டாடப்படுகின்ற இந்த நேரத்தில் உன் செம்மாந்த வளர்ச்சியைக் கண்டு குமரிக்கு மனம் பூரிக்கத்தான் செய்கிறது.
அடுப்பங்கரையில் கையும் கரண்டியமாக இருந்த நீ, இன்று மண்மீது வாகனத்தில் தனிஉலா வருகிறாய்; வானத்திலும் கலம் செலுத்துகிறாய்.
இதையெல்லாம் காண்பதற்கு ஆன்மீக விவேகி விவேகானந்தர், மாகவி பாரதியார், பெண்ணிய போராளி தந்தை பெரியார் போன்ற பெருமக்கள் இருந்தால் உள்ளந்தான் பூரிப்பர்.
ஆண் துணை இல்லாமல் பெண்ணால் வாழவே முடியாது என்பதை எல்லாம் அடித்து நொறுக்கும் விதமாக உயர்கல்வி, உயர் வேலை வாய்ப்பு, தனி வாகனம், தனி வசிப்பிடம் என்றெல்லாம் செம்மாந்து வலம் வருகின்ற நீ, சமுதாயம் சார்ந்து சிந்திக்க வேண்டிய எத்தனையோ கடமைகளில் இருந்து வழுவி நிற்கிறாயே இது தகுமா உனக்கு?
உன் சக தோழியர் எண்ணிலடங்காதோர் 40 வயதைத் தொட்டு முதிர் கன்னியராக வீதியுலா வருகின்றனரே, அவர்களைப் பற்றி நீ என்றைக்காவது எண்ணி பார்த்ததுண்டா? அல்லது அவர்களின்பால் அக்கறைதான் கொண்டதுண்டா?
இந்நிலை இம்மண்மீதில் வாழும் நம் சமுதாயத்தின் எதிர்காலத்திற்கு ஆபத்து அல்லவா?
முன்பெல்லாம் இல்லந்தோறும் சராசரியாக நண்டும் சிண்டுமென ஐந்தாறு பிள்ளைகள் தவழும்; நடமாடும்; துள்ளித் திரியும்; இப்பொழுது அந்த நிலை எல்லாம் மலையேறி ஒன்றும் இரண்டுமாக சுருங்கிவிட்டன.
அதற்கும் வழி இல்லாமல் தனி மனுசியாகவே வாழமுற்பட்டால் நம் சமுதாயத்தின் எதிர்காலம் என்ன ஆவது?.

அன்புசால் பெண்ணே, நீ ஒன்றை நினைத்துப் பார்த்தாயா? இப்பொழுதெல்லாம் நம்மை எந்த அரசாங்கமும் அல்லது பிற இன கட்சிகளும் அவ்வளவாக பொருட்படுத்துவதில்லை தெரியுமா?
நம் இனத்தின் வாக்குவங்கி ஆண்டுக்கு ஆண்டு சரிந்து வருவதால் அரசியல் களத்தில் கூட நமக்கு முன்பிருந்த மாண்பு இப்பொழுது இல்லை; மற்ற இனங்களை விட நம் இனம் பிறப்பு விகிதத்தில் பல வகையாலும் பின்தங்கி மக்கள் தொகை அடிப்படையில் குறுகி குறுகி அருகி அருகி எண்ணிக்கையில் சிறுத்து வருகிறோம்.
இந்த சமூக வீதியில் நம்மை தவழவிட்டதும் உலவவிட்டதும் ஒரு பெண்தான்; அவள் நம் தாய்தான். அதைப்போல பெண்ணான நாமும் செய்ய வேண்டும் என்ற அக்கறை இல்லாமல் இருப்பவர்களைப் பற்றி நீ எண்ணிப் பார்த்ததுண்டா?
அவர்களுக்கு ஏன் இந்த நிலை? அவர்களுக்கான மாற்றுவழி என்ன என்பது குறித்து சிந்தித்தது உண்டா?
தலைமைத்துவ பயிற்சி, தன் முனைப்பு பயிற்சி, வேலை வாய்ப்பு பயிற்சி, அணிச்சல் செய்யவும் சமையல் கற்கவும் பயிற்சி, ஒப்பனைக்கு தனிப்பயிற்சி என்றெல்லாம் எதற்கெல்லாம் பயிற்சி காண்கின்ற நீ, பெண்கள் தனியாக வாழ்வது சமூகத்திற்கு பாரம்- இழைக்கும் துரோகம்; சமூகத்திற்கு நாம் அளிக்க வேண்டிய பங்களிப்பை ஈடேற்ற வேண்டுமே என்ற எண்ணத்தை நீ சக தோழிகளிடம் ஏற்படுத்தி இருக்கிறாயா?
இல்வாழ்க்கையில் இணைந்த பெண்களில் மிகுதியானோர் குடும்ப பந்தத்தை துறந்து மணவிலக்கு கேட்டு நீதிமன்றப் படிக்கட்டுகளில் ஏறி இறங்குகின்றனரே, அவர்களைப் பற்றியும் நீ அக்கறை பட்டதுண்டா?
ஒருவேளை உயர் கல்வி, தரமான வருவாய் என்றெல்லாம் வாய்த்துவிட்டதால் ஆண்களை அலட்சியம் செய்கிறார்களோ?
கணவனை பிரிந்தோ அல்லது கணவன் இல்லாத நிலையிலோ மாற்று வாழ்க்கையை அமைத்துக் கொள்கின்ற பெண்கள் முந்தைய பந்தத்தின் மூலம் பிறந்த குழந்தைகளை கொடுமைப் படுத்துவதும் உயிர்பிரியும் அளவிற்கு தாக்குவதும் பெண் குலத்திற்கு அழகா? இதுதான் தாய்மைப்பேற்றின் வெளிப்பாடா?
அப்படிப்பட்ட பெண்கள் குறித்த தகவலை அறியும் பொழுது அவர்களை நீ என்றாவது கண்டித்தது உண்டா? தவிர அத்தகைய பெண்கள் தங்களுடைய முந்தைய இல்வாழ்க்கையின் விளைவாக பிறந்த குழந்தைகளை புறக்கணிப்பது என்றால் அப்படிப்பட்ட பிள்ளைகளை எங்களிடம் கொடுத்து விடுங்கள். நாங்கள் மாற்றுவழி தேடுகிறோம் அல்லது பராமரிக்கப் பார்க்கிறோம் என்றெல்லாம் நீ எண்ணியதாகவோ செயல்பட்டதாகவோ தெரியவில்லையே!

அன்னையர் தினம் வந்து விட்டால் போதுமே, மூலைக்கு மூலை அனிச்சல் வெட்டி ஒருவருக்கொருவர் ஊட்டிக்கொண்டு மகிழ்ந்து கொள்கிறீர்களே, பெற்ற தாயே தன் பிள்ளைகளை வதைத்து கொடுமைப்படுத்துவதைக் காணும் பொழுது நீ அப்படியே கடந்து செல்கிறாயே, இதுவெல்லாம் சரியல்ல என்று எடுத்துரைக்க நீ தவறுவது ஏன்?
மற்ற இனத்து பெண்கள் ஏறக்குறைய 25 வயதை எட்டிவிட்டாள் தனியாக இருப்பதில்லை; முனைவர் பட்டம் படித்தால்கூட கணவனோடும் குழந்தையுடன்தான் வாழ்கின்றனர். நம் சமுதாய பெண்கள் அவ்வாறு இல்லையே என்பதை பற்றி நீ என்றைக்காவது கருதியது உண்டா?
பள்ளி கல்லூரிகளிலும் உயர்கல்வி நிலையங்களிலும் தேர்வில் பெறவேண்டிய புள்ளிகளுக்காக பாடநூற்களை படிப்பதுதான் கல்வி என்று வரையறுத்துக் கொள்கிறாயே இது தகுமா? அன்றாட வாழ்வில் கையடக்க கருவி மூலம் காட்சிகளை கண்டுகொண்டே காலம் கடத்துகிறாயே சொந்த தாய் மொழியில் நாள்தோறும் கால் மணி நேரமாவது நூல்களையும் ஏடுகளையும் படிக்க வேண்டும் என்று எண்ணம் அடியோடு அற்றுவிட்டதே இதைப் பற்றி எல்லாம் நீ சிந்திக்கமாட்டாயோ?
மஞ்சளின் மகிமையை அடியோடு மறந்து விட்டாயே, அதனால்தான் நம் பாரம்பரிய பண்டமான அதற்கு மேலைநாட்டுக்காரன் ‘பேட்டன் உரிமம்’ பெற்றிருக்கிறான் என்பது தெரியுமா உனக்கு? இளம் பெண்களின் கைகளில் முடி வளர்ந்திருப்பதும் மீசை அரும்பி இருப்பதும் மஞ்சள் பயன்பாட்டை அடியோடு தவிர்த்து விட்டதால் என்பதை நீ என்றைக்காவது சிறிதளவேனும் எண்ணிப் பார்த்ததுண்டா?
இக்கால பெண்களுக்கு அதிகமாக மார்பகப் புற்றுநோய் வருவதற்கு, தாய்ப்பால் சுரப்பதையும் புகட்டுவதையும் தவிர்த்து விடுவதும் ஒரு காரணம் என்பதை அறிவாயா நீ?
வேலைக்கு செல்வதை சாக்காக வைத்து பெற்ற பிள்ளைக்கு புட்டிப் பாலை ஊட்டிவிட்டு சொந்த பாலுக்கு அணைபோட்டு விடுகிறாயே, கறக்கும் பாலுக்கும் சுரக்கும் பாலுக்கும் வேறுபாடு அறியாமல் விளங்குகிறாயே தகுமா இது?
மொத்தத்தில் மாற்றானுடன் வாழ்வதால் முன்னவனுக்குப் பெற்ற பிள்ளையை வளர்க்க விரும்பாத தாயருககு, மனம் முடிக்காத முதிர்கன்னிருக்கு, மனவிலக்கு கேட்டு நீதிமன்றத்தை நாடும் இல்லத்தரசிருக்கு, உரிய பருவத்தில் இல்லற வாழ்வில் இணைய வேண்டும் என்று இளம் கன்னியருக்கு என்றெல்லாம் பயிற்சி நடத்துவதைப் பற்றி நீ என்றைக்காவது சிந்தித்தது உண்டா
அடுத்த மகளிர் தினத்திற்குள்ளாவது இவற்றைப் பற்றி கொஞ்சம் சிந்தித்துதான் பாரேன்!
சிந்திக்கும் ஆற்றல் வாய்க்கப்பெற்ற நீ உன் சிந்தனைவெளியை அகலப்படுத்துவாய் என்ற எண்ணத்துடன் இத்துடன் நிறைவு செய்கிறேன்
அன்புடன் வான்முற்றத்து குமரி


