
மத வெறுப்பு பேச்சாளர் ஸம்ரி வினோத் தொடர்ந்து இந்து சமயத்தை இழிவுப் படுத்தி வருகிறார். இப்பொழுது இந்து மக்களையும் தைப்பூச விழாவையும் சிறுமைப்படுத்தி கருத்து தெரிவித்திருக்கிறார். இது மிகவும் கண்டிக்கத்தக்கது. அவர்மீது சட்டத்துறைத் தலைவரும் காவல்துறையும் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்று மலேசிய முன்னேற்றக் கட்சி- எம்ஏபி உதவித் தலைவர் முனைவர் அ. குமரன் வினாத் தொடுத்துள்ளார்.
சமய வெறுப்புப் பேச்சாளர் ஸம்ரி வினோத் இந்து சமயத்தை மட்டும் சிறுமைப்படுத்தவில்லை; உண்மையில் தேசிய கோட்பாட்டையும் சேர்த்து அவர் சிறுமைப்படுத்தி வருகிறார்.
இப்படிப்பட்ட நபருடன் தனிப்பட்ட முறையில் விவாதம் நடத்துவதால் எந்த தீர்வையும் எட்ட முடியாது.
ஸம்ரி வினோத்மீது காவல்துறை நடவடிக்கை எடுத்தாலே போதும். இதற்கு முன் நூற்றுக்கணக்கில் அவருக்கு எதிராக போலீஸ் புகார் செய்யப்பட்டுள்ளது.
குறிப்பாக பன்னாட்டு மனித உரிமை அமைப்பு சம்மேளனத் தலைவர் சசிகுமார், ஏற்கெனவே காவல்துறையில் புகார் செய்ததுடன் வழக்கும் தொடர்ந்தார்.
இறைவன் மீது நம்பிகை வைத்தல் என்ற நம் நாட்டின் முதன்மை தேசிய கோட்பாட்டை மறந்து மலேசியக் கூட்டு சமுதாயம் ஒருமைப்பாட்டுடன் வாழ்வதைக் கெடுக்கும் விதமாக சமய வெறுப்பு பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறார் ஸம்ரி வினோத்.
எனவே இந்த நபருக்கு எதிராக காவல்துறையும் சட்டத்துறை தலைவர் அட்டர்னி ஜெனரலும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மலேசிய முன்னேற்ற கட்சி- எம்ஏபி வலியுறுத்துகிறது என்று டாக்டர் குமரன் மேலும் தெரிவித்துள்ளார்.


