
இசைஞானி இளையராஜாவின் அரை நூற்றாண்டு திரையிசைப் பயணத்தை சிறப்பிக்கும் வகையில் தமிழக அரசு சார்பில் விழா எடுக்கப்படும் என்று தமிழ்நாட்டு முதலமைச்சர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
திரைப்படங்களுக்கு விளம்பரம் செய்யும்பொழுது அந்தந்த படத்தின் நாயக நடிகரின் பெயர் அல்லது அவர்களுக்கான அடைமொழி அல்லது பட்டப் பெயரைச் சொல்லி ஆள் சேர்ப்பது உண்டு.
இந்த முறை 1977இல் வெளிவந்த அன்னக்கிளி திரைப்படத்திற்குப் பிறகு மாறியது; ‘இசை: இளையராஜா’ என்று அறிவிப்பு செய்து ரசிகர்களை திரட்டும் புதுமுறை உருவானது. அந்த அளவிற்கு திரை இசை ஆளுமையராக உயர்ந்துள்ள இளையராஜா, அண்மையில் சிம்பொனி இசைப் பணி தொடர்பாக லண்டன் மாநகருக்கு சாதனைப் பயணம் மேற்கொண்டிருந்தார்.
அப்போது தமிழ்நாட்டு முதலமைச்சர் இளையராஜாவுக்கு வாழ்த்தும் பாராட்டும் தெரிவித்திருந்தார்.
சிம்பொனி இசைப் பணியை நிறைவு செய்து, தாயகம் திரும்பியதும் தமிழக முதல்வரை சந்தித்து நன்றி தெரிவித்தார் இளையராஜா.
அப்பொழுதுதான் இளையராஜாவின் பொன்விழா ஆண்டு திரையிசைப் பயணத்தை சிறப்பிக்கும் வகையில் அவரின் இசைப் பட்டாளத்தின் ஒத்துழைப்போடு தமிழ்நாட்டு அரசின் சார்பில் விழா எடுக்கப்படும் என்று முதல்வர் மு க ஸ்டாலின் நேற்று அறிவித்தார்.


