Thursday, April 2, 2026

இந்து ஆலயத்தை உடைத்து மடானி மசூதியா? -பொன். வேதமூர்த்தி கொந்தளிப்பு!!

கோலாலம்பூரில் மஸ்ஜித் இந்தியா வட்டாரத்தில் அமைந்துள்ள 130 ஆண்டுகள் பழைமைவாய்ந்த தேவி அருள்மிகு பத்ரகாளியம்மன் ஆலயத்தை உடைத்துவிட்டு, அந்த இடத்தில் மடானி பள்ளிவாசலைக் கட்டுவதற்கு இந்த அரசு செய்துள்ள முடிவு அடாத செயல்; அக்கிரமம்; இந்த முடிவு இந்து சமூகத்தை அவமதிப்பது மட்டுமல்ல; மலேசியாவின் கலாச்சார மற்றும் சமய பாரம்பரியத்தை வெளிப்படையாக புறக்கணிப்பதுமாகும் என்று மலேசியவாழ் இந்துப் பெருமக்களின் சார்பாக மலேசிய முன்னேற்ற கட்சி- எம்ஏபி தேசியத் தலைவர் பொன்.வேதமூர்த்தி கொந்தளித்துள்ளார்.

இதன் தொடர்பில் பிரதமருக்கு அனுப்பியுள்ள அவசரக் கடிதத்தில், “இந்த நூற்றாண்டு தொடக்கத்தில் வரிசையாக இந்து வழிபாட்டுத்தளங்கள் உடைக்கப்பட்டதன் விளைவாக மலேசிய இந்து சமுதாயத்தில் எழுந்த பேரதிர்ச்சியும் கொந்தளிப்பும் 2008 மார்ச்-8 தேர்தல் முடிவில் கொப்பளித்த-தையும் தேசிய முன்னணி ஐந்து மாநிலங்களில் ஆட்சியை இழந்ததையும் நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையை இழந்ததையும் பிரதமர் அன்வார் மறந்து விட்டார்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் புதிதாக பள்ளிவாசல் எழுப்பப்படுவதில் எங்களுக்கு எந்த ஆட்சேபமும் கிடையாது. ஆனால் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் எழுப்பப்பட்ட இந்து வழிபாட்டுத் தலத்தை உடைத்துவிட்டு, அந்த இடத்தில்தான் மடானி பள்ளிவாசலை எழுப்ப வேண்டும் என்றால் இது என்ன நியாயம் என்று நாட்டின் சரித்திர சாதனை இயக்கம் ஹிண்ட்ராஃப்-இன் தலைவருமான பொன்.வேதமூர்த்தி கேள்வி எழுப்பி உள்ளார்.

“அப்படி ஒரு முடிவு எடுக்கப்பட்டிருந்தால் அதை மாற்றிக் கொள்ளும்படியும் அத்தகைய திட்டத்தையும் மீட்டுக்கொள்ளும்படியும் இந்த மடாணி அரசிடமும் கோலாலம்பூர் மாநகர் மன்றத்திடமும் வேண்டுகோளாகவும் எச்சரிக்கையாகவும் முன்வைக்க விரும்புகிறேன்”.

கடந்த 2005-2007 காலகட்டத்தில் இதே பிரச்சனைக்காக தானும் ஹிண்ட்ராஃப் குழுவினரும் குரல் எழுப்பியபொழுது அதை அடியோடு அலட்சியம் செய்த தேசிய முன்னணி அரசின்வீழ்ச்சி 2008-ஆம் ஆண்டு தொடக்கத்தில் ஏற்பட்டது. அதிலிருந்து, தேசிய முன்னணியும் அதன் உறுப்புக் கட்சிகளும் இன்றுவரை மீளவில்லை என்பதை பிரதமர் அன்வாருக்கு நினைவூட்டுவதாகவும் அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால் பிரதமர் இன்று பதவியில் இருப்பதற்கும், நாட்டின் நடுநாயகமான சிலாங்கூர் மாநிலத்தில் கடந்த நான்கு தவணைகளாக பிரதமர் தலைமையிலான பிகேஆர்-மக்கள் நீதிக் கட்சி ஆட்சியில் இருப்பதற்கும் தாங்கள் முன்னெடுத்த எழுச்சிப் போராட்டம்தான் காரணம் என்பதை இந்த வேளையில் நினைவூட்ட விரும்புகிறேன்.

இந்த வரலாற்று உண்மை, இந்து மக்களின் எழுச்சி ஆகியவற்றை பிரதமர் அன்வாரும் மடாணி அரசும் மறந்துவிட்டு, மீண்டும் இந்து ஆலயத்தை உடைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். தவிர, மடானி முழக்கத்தின் மூலம் அன்வார் முன்மொழியும் நீதி-சமத்துவம்-அனைவருக்குமான உள்ளடக்கம் ஆகியவற்றை அவரே மீறுவதாகவும் உள்ளது.

நாட்டின் பாரம்பரிய தலைநகரமான கோலாலம்பூரின் இதயம் போன்ற பகுதியில் அமைந்துள்ள வழிபாட்டுத் தலத்தை உடைக்கும் எண்ணத்தை மாற்றிக்கொண்டு இந்த ஆலயம் அப்படியே நிலைபெற வழிவிட வேண்டும் என்று வலியுறுத்துவதாகவும் இல்லாவிட்டால் இதற்கான அரசியல் பின்விளைவை பிரதமர் அன்வார் எதிர்கொண்டே ஆக வேண்டும் என்றும் முன்னாள் அமைச்சருமான பொன்.வேதமூர்த்தி அந்தக் கடிதத்தில் எச்சரிக்கைத் தெரிவித்துள்ளார்.

செய்தி சம்பந்தப்பட்ட உங்கள் கருத்தை பதிவு செய்ய "வாட்சாப்" பட்டனை அழுத்துங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

அதிகம் பகிரப்பட்டவை