Monday, April 20, 2026

கோலாலம்பூர் செந்தூலில் வீட்டுடைமை சிக்கல்: மேம்பாட்டு நிறுவனம் தண்ணீர் காட்டுகிறது!

ரெயில்வே(கேடிஎம்) துறையின் அந்நாளைய பணியாளர்களின் இந்நாளைய வழித்தோன்றலினர் 150 குடும்பத்தினர் பதாகை ஏந்தி உரிமைக்குரல் முழக்கம்.

மலாயாவின் கட்டுமான மறுமலர்ச்சி, ரயில் தண்டவாளம் அமைப்பதில் தொடங்கியது. அதில் சேர்ந்த பல்லாயிரக் கணக்கான தமிழர்கள், ஊதியத்தைக் கடந்து ஊழியம் புரிந்தவர்கள். இரத்தத்தையும் வியர்வையையும் சிந்தி பாடுபட்டவர்களில், செந்தூல் வட்டாரத்தைச் சேர்ந்தவர்களும் குறிப்பிடத்தக்கவர்கள்.

செந்தூல் கேடிஎம் குடியிருப்பில் வாழ்ந்த மக்களுக்கு 42,000 வெள்ளியில் மாடி வீடு கட்டித் தருவதாக வாக்குறுதி கொடுத்த மேம்பாட்டு நிறுவனம் 12 ஆண்டுகள் ஆகியும் வீடுகளை கட்டித் தரவில்லை என்று பாதிக்கப்பட்ட மக்கள் இன்று உரிமை முழக்கம் எழுப்பினர்.

கடந்த 2013 ஆம் ஆண்டில் கேடிஎம் குடியிருப்பில் வாழ்ந்த மக்களுக்கு 21 மாடிகள் கொண்ட வீடுகளை கட்டித் தருவதாக ஓய்டிஎல்-YTL நிறுவனம் வாக்குறுதி கொடுத்தது.

மூன்று ஆண்டுகளில் அத்தகைய வீடுகள் கட்டிக் கொடுக்கப்படும் என்று அந்த மேம்பாட்டு நிறுவனம் வாக்குறுதி கொடுத்த நிலையில், இன்றுவரை அது நிறைவேற்றப்படவில்லை என்று பாதிக்கப்பட்ட மக்களின் பிரதிநிதி ஈஸ்வரி தெரிவித்தார்.

கடந்த 2016 ஆம் ஆண்டில் வீட்டிற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. ஆனால் வீடுகள் கட்டிக் கொடுக்கப்படும் என்ற அறிவிப்புப் பலகை அப்படியே உள்ளது.

எங்களுக்கு வாக்குறுதி கொடுத்த இடத்தில் வீடுகள் கட்டப்படவில்லை; மாறாக வேறு இடத்தில் வீடுகள் கட்டப்பட்டுள்ளன. இந்த வீடுகளில் குடியேறும்படி மேம்பாட்டு நிறுவனம் கேட்டுக் கொண்டது. அதேவேளை, புதிய வீடுகளை பார்க்க அனுமதி இல்லை.

நிபந்தனை அடிப்படையில் வீடுகளை தருகிறோம் என்று நிறுவனம் கூறுகிறது. தங்கள் பிள்ளைகள் இந்த வட்டாரத்தில் உள்ள பள்ளிகளில் படிக்கும் நிலையில், கொடுத்த வாக்குறுதிக்கு மாறாக, தொலை தூரத்தில் வீடுகட்டிக் கொடுத்தால் எதை எப்படி ஏற்பது என்றும் ஒரு சிலர் வாதிட்டனர்.

இதன் தொடர்பில், பாதிக்கப்பட்ட மக்கள் அளித்த புகார் மனுவை பத்து தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ப. பிரபாகரனிடம் வழங்கினர். அதைப் பெற்றுக் கொண்டபின், இந்தச் சிக்கல் விரைவில் தீர்க்கப்படுவதற்காக அதிகபட்சம் முயற்சி மேற்கொள்வதாக பிரபாகரன் உறுதி அளித்தார்.

செய்தி சம்பந்தப்பட்ட உங்கள் கருத்தை பதிவு செய்ய "வாட்சாப்" பட்டனை அழுத்துங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

அதிகம் பகிரப்பட்டவை