Monday, April 20, 2026

விண்வெளி சுற்றுலா: வர்த்தக உலகின் அடுத்த இலக்கு!

கோலாலம்பூரில் இருந்து மலைவாச தலம் கேமரன் மலை, வரலாற்று நகரம் மலாக்கா போன்ற இடங்களுக்கு தரைவழி பயணமாகவோ அல்லது ஆக்ரா, கன்னியாகுமரி போன்ற சுற்றுலாத் தலங்களுக்கு வான்வழி பயணத்தையோ இன்னும் கும்பமேளா என்றெல்லாம் இறைநேசப் பயணத்தையோ ஏற்பாடு செய்யும் வர்த்தக நிறுவனங்களைப் போல, விண்வெளிச் சுற்றுலா செல்வதற்கான பயண ஏற்பாட்டு நிறுவனங்களும் நாளை உருவாகக்கூடும்; கோலாலம்பூரில்கூட அத்தகைய அலுவலகங்கள்-நிறுவனங்கள் அமையலாம்.

அந்த அளவிற்கு இந்தப் புவி உலகம் மட்டுமல்ல; வானுலகமும் சுறுங்கிவிட்டது.

இதை மெய்ப்பிக்கும் வகையில்தான், ஆறு புதுமைப் பெண்கள் விண்வெளிக்குச் சென்று திரும்பி உள்ளனர். அதுவும், 11 நிமிடங்களில் தங்களின் பயணத்தை நிறைவுசெய்துள்ள விந்தையையும் இவர்கள் நிகழ்த்தி உள்லனர்.

அமெரிக்காவின் மேற்கு டெக்ஸாஸ் நகரில் இருந்து 6 பெண்களை ஏற்றிக்கொண்ட நியூ ஷெப்பர்ட் ஏவுகணை, விண்வெளிச் சுற்றுலாவிற்கான அச்சாரமாக அமைந்துள்ளது.

பாடகி கெட்டி ஃபெர்ரி, லாரன் சான்செஸ், சிபிஎஸ் தொலைகாட்சியின் தொகுப்பாளர் கேல் கிங், நாசாவின் ஏவுகணை ஆராய்ச்சியாளர் ஆயிஷா போவே, மனித உரிமை ஆர்வலர் அமாண்டா இங்குயென், திரைப்பட தயாரிப்பாளர் கேரியன் ஃப்ளின் ஆகிய அறுவரும்தான் விண்வெளிக்குச் சென்று திரும்பியவர்கள்.

11 நிமிடங்களை உள்ளடக்கிய இந்த விண்வெளி பயணத்தைத் திட்டமிட்டது, ஜெஃப் பெசோஸின் ப்ளூ ஆரிஜின் என்னும் நிறுவனம். இந்த விண்கலம், ஆறு பெண்களையும் பூமியின் வளிமண்டலத்துக்கு அப்பால் இருக்கும் கார்மன் எல்லைக் கோடுவரை கொண்டு சென்றது.

கார்மன் எல்லைக் கோட்டுப் பகுதியில் புவிஈர்ப்பு விசை இருக்காது; எடையும் இருக்காது; இந்த அர்ப்புதத்தை உணர்ந்த அவர்கள், விண்வெளியில் இருந்து பூமியின் அரிய காட்சியைக் கண்டு களித்தனர்.

இவர்கள் பயணித்த விண்கலம், பைலட் தேவையின்றி முற்றிலும் தானாகவே இயங்கக் கூடியது. பயணிக்கும் பெண்கள் குழுவினரும் இந்த விண்கலத்தை எந்த வகையிலும் இயக்கத் தேவையில்லை.

பயணம் முடிந்த பின்னர் விண்கலம் பூமியின் வளிமண்டலத்திற்குள் நுழைந்து ‘Soft Landing’ முறையில் பாராசூட் உதவியுடன் தரையிறங்கியது. இந்த விண்கலத்திற்காக பயன்படுத்தப்பட்ட Rocket Booster, ஏவுதளத்திலிருந்து ஏறக்குறைய 2 இ.மீ. தொலைவில் தானாக தரையிறங்கியது.

1963-இல் சோவியத் விண்வெளி வீராங்கனையான வாலன்டினா தெரெஷ்கோவ் தனியாக விண்வெளிக்குச் சென்று வந்தபிறகு, பெண்கள் மட்டுமே விண்வெளிப் பயணம் மேற்கொண்டது இதுவே முதல் முறை.

பூமியின் வளிமண்டலமும் விண்வெளியும் சந்திக்கும் இடமான கார்மன் கோடு வரை சென்றுவிட்டு திரும்பிய இந்தப் பயணம், விண்வெளிப் பயணம் மட்டுமல்ல; மக்களின் மனநிலையை மாற்றவும் இளைய சமுதாயத்தினரைக் கவரவும் ப்ளூ ஆரிஜின் நிறுவனத்தால் திட்டமிடப்பட்ட ஏற்பாடு.

கார்மன் கோடு என்பது ஒரு கற்பனையான எல்லைக்கோடு. இது பூமியின் கடல் மட்டத்தில் இருந்து 100 கி.மீ உயரத்தில் இருப்பதாக வரையறுக்கப்பட்டுள்ளது. இந்த எல்லைக் கோட்டைத் தொட்டாலே, பூமியில் இருந்து விண்வெளியை அடைந்துவிட்டதாகக் கருதப்படுகிறாது.

அதாவது, பூமியின் வளிமண்டலத்தின் முடிவாகவும் விண்வெளியின் தொடக்கமாகவும் இந்தப் புள்ளி(கார்மன் கோடு) கருதப்படுகிறது.
கார்மன் கோடு, விமானவியல் மற்றும் வானியலுக்கு இடையே ஒரு வேறுபாட்டைக் குறிப்பதற்காக, Federation of Aeronautic International என்ற அமைப்பால் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்த இடத்தை எட்டுவெதே, விண்வெளி ஆய்வில் ஒரு குறிப்பிடத்தக்க இலக்காகக் கருதப்படுகிறது.

கார்மன் எல்லைக்கோடு எனத் தீர்மானிக்கப்பட்டு இருக்கும் 100 கி.மீ என்ற உயரத்துக்குக் கீழேதான் 99.9% வரையிலான வளிமண்டலம் உள்ளது. ஆகையால்தான் அதற்கு மேலே இருக்கும் பகுதி விண்வெளி என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த எல்லைக் கோட்டைத் தாண்டிப் பயணிப்பவர்கள் ‘விண்வெளிக்குச் சென்றவர்கள்’ என்ற தகுதியைப் பெறுகின்றனர். அதனால்தான் ப்ளூ ஆரிஜின் நிறுவனத்தின் விண்வெளிப் பயணங்களும் இந்தக் கோட்டுக்கு மேலே சென்று, அதன் பயணிகளுக்கு உண்மையான விண்வெளி அனுபவத்தை வழங்குவதைக் குறிக்கோளாகக் கொண்டுள்ளது.

விண்வெளிச் சுற்றுலாவை இந்த நிறுவனம் பலமுறை மேற்கொண்டுள்ளது. ஆனால், இந்தப் பயணம் குறித்துக் கேள்விப்பட்டதும், சுனிதா வில்லியம்ஸ் சென்றதைப் போன்றதொரு பயணமோ எனக் கருதிவிடக்கூடாது. காரணம்,
சுனிதா வில்லியம்ஸ்ஏறக்குறைய 400 கி.மீ உயரத்தில் இருக்கும் விண்வெளிப் பகுதிக்குச் சென்றிருந்தார். ஆனால், இது அப்படியான பயணமல்ல.

பல்வேறு துறைகளைச் சேர்ந்த மகளிர் மட்டுமே மேற்கொண்ட இந்த விண்வெளிப் பயணம், விண்வெளி தொடங்கும் இடமான கார்மன் எல்லைக் கோட்டுக்குச் சற்று மேலே சென்றுவிட்டு, ஒரு சில நிமிடங்களில் மீண்டும் பூமிக்குத் திரும்பி விடுவார்கள்.

இந்தப் பயணத்தின் மொத்த நேரமே சுமார் 11 நிமிடங்கள்தான். ஏழு நிமிடங்களுக்கு ஏவுகணையில் பயணிப்பார்கள். சுமார் 48 கி.மீ.வரை அதில் பயணித்த பிறகு, அங்கிருந்து ஒரு கல் மேல்நோக்கி வீசப்படுவதைப் போல, ராக்கெட்டில் இருந்து பயணிகள் இருக்கும் விண்கலம் விண்வெளி நோக்கி வீசப்படும்.

ராக்கெட்டில் இருந்து வீசப்படும் விண்கலம், கார்மன் கோட்டுக்குச் சற்று மேலே சென்றுவிட்டு பின்னர் மீண்டும் பூமிக்குத் திரும்பிவிடும். அப்படிப்பட்ட பயணைத்தை மேற்கொண்டவர்களதான் இந்த அறுவரும்!

செய்தி சம்பந்தப்பட்ட உங்கள் கருத்தை பதிவு செய்ய "வாட்சாப்" பட்டனை அழுத்துங்கள்.

RELATED ARTICLES

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

அதிகம் பகிரப்பட்டவை