Monday, April 20, 2026

நாளையும் நாளை மறுதினமும்: கிள்ளான் இயல் இசை நாடக மன்றத்தின் தமிழிசை விழா

தேனினும் இனிய நம் செந்தமிழ் மொழியானது, இயல், இசை, நாடகம் எனும் முத்தமிழாக விளங்கும் அதேவேளையில், இசைக்கே முன்னுரிமை வழங்கப்பெற்றுள்ளது.

தமிழர்களின் செவ்விய(Classical) இசைமுறை தமிழிசை என அழைக்கப்பெறுகிறது.

தமிழிசைக்கு பல சிறப்புண்டு. மனம், மொழி, மெய் என்னும் கூறுகளையும் தன்வயமாக்கும் திறன் தமிழிசைக்கு உண்டு.

விலங்குகளும் மனிதர்களைப்போல் இசையைக் கேட்டு மயங்குகின்றன. தாவரங்களும் இசைக்கு வசமாகின்றன என்னும் ஆய்வும் உண்டு.

அத்தகைய சிறப்புப் பொருந்திய இசை,
தமிழர் வாழ்வில், தாலாட்டிலிருந்து ஒப்பாரி வரை ஒவ்வொரு சூழலிலும் இயைந்துள்ளது.

சைவ நெறியை தழைக்கச் செய்த
நாயன்மார்களும் ஆழ்வார்களும் தமிழிசை வளர்ச்சிக்குப் பெரும்பங்காற்றினர்.
மாணிக்கவாசகரின் திருவாசகமும் அருணகிரிநாதரின் திருப்புகழும் தமிழிசை வளர்ச்சியில் குறிப்பிடத்தக்கவை.

கி.பி. 13 –16ஆம் நூற்றாண்டு காலப் பகுதியில் தமிழிசை வளர்ச்சி பின்தங்க, கருநாடக இசை மேலோங்கி வளர்ந்தது. ‘மேளகர்த்தா’ எனும் இசைநூலும் இயற்றப்பட்டுப் பழமையான தமிழ்ப் பண்கள் உருமாற்றம் பெற்றன.

முத்துத்தாண்டவர், மாரிமுத்தாப் பிள்ளை, அருணாசலக்கவிராயர் ஆகிய இசை மும்மூர்த்திகளின் படைப்புகள் தமிழிசை வளர்ச்சிக்குப் பெரும் துணை புரிந்தன.

தொடர்ந்து, கி.பி. 19ஆம் நூற்றாண்டில் கோபாலகிருஷ்ண பாரதியார், வேதநாயகம் பிள்ளை, கனம் கிருஷ்ணய்யர், கவிக்குஞ்சர பாரதி, இராமலிங்க அடிகள் போன்றோர் தமிழிசை வளர்ச்சிக்குப் பெருந்தொண்டாற்றி வலுச் சேர்த்தனர்.

இருபதாம் நூற்றாண்டில் தமிழிசை வளர்ச்சிக்கு ஆபிரகாம்பண்டிதர், விபுலானந்தர், அண்ணாமலை அரசர், பாரதி, பாரதிதாசன், கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை போன்றோர் பெரும் பங்காற்றியுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தற்காலத்தில் தமிழிசை
தியாகராஜ சுவாமி, சாமா சாஸ்திரி, தீட்சிதர் அருளிய கீர்த்தனைகளே இன்று மேடைகளில் அதிக அளவில் பாடப்பெற்று வருகின்றன.

இதற்கு நிகரான தமிழ்க் கீர்த்தனைகள் இருந்தபோதும் அவை, ‘துக்கடா'(ஒட்டு அல்லது துண்டு) பாடல்களாகத்தான் பார்க்கப் படுகின்றன என்பது பெருங்குறையாகவே உள்ளது.

உலகிற்கு இசையைத் தந்த தமிழர்களின் தமிழிசை இக்காலத்தில் மீட்சிபெற்று ஆங்காங்கே மேலோங்கி வருகிறது என்பது மகிழத்தக்க செய்தியாகும்.

இந்தச் சூழலில் சிலாங்கூர் மாநிலத்தின் பழைய அரச நகரான கிள்ளானில் இயங்குகின்ற இயல் இசை நாடக மன்றமும் தமிழ் இசை வளர்ச்சிக்காக தன் பங்கை ஆற்றி வருகிறது.

அதன் அடிப்படையில் ‘தமிழிசை விழா-2025’-ஐ தற்பொழுது பாரிய அளவில் ஏற்பாடு செய்துள்ளனர்.

இந்நிகழ்ச்சியை ஆண்டுதோறும் நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.

மலேசியாவில் இயங்கிவரும் ஆலயங்கள் தமிழிசை வளர்ச்சிக்குப் பங்காற்ற முன் வரவேண்டும். ஆலயங்களில் தமிழிசைக்கு ஆதாரமாக இருக்கும் தேவாரம், திருவாசகம், திருப்புகழ், திருவருட்பா போன்ற பக்தி இசைச் செல்வங்களைக் கற்பிக்க வகுப்புகள் நடத்தப்பட வேண்டும். இதுபோன்ற பணிகளைச் சில ஆலயங்கள் செய்து வருவது பாராட்டுக்குறியதாகும்.

அந்த வகையில், இவ்வாண்டு விழா நாளையும் நாளை மறுதினமும் (ஏப்ரல் 19 – 20) நடைபெறவிருக்கிறது.

இதற்கு, கிள்ளான் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி ஆலய நிர்வாகத்தினர் முன்வந்துள்ளது பாராட்டுக்குரியதாகும்.

இவ் விழா, இவ்வாலயத்தை ஒட்டி அமைந்துள்ள நாவலர் மண்டபத்தில் நடைபெறவிருக்கின்றது.

இந்த இருநாள் தமிழிசை விழா, பல சிறப்பு அங்கங்களுடன் நடைபெறவுள்ளது. அருள் நுண்கலைப்பள்ளி மாணவர்கள், செல்வன் அருள்வேந்தன் தலைமையில் திருப்புகழ் இசை அரங்கை படைப்பார்கள். நாடறிந்த இசைக் கலைஞர் இரகுராமன், மலேசிய கவிஞர்களின் தமிழிசைப் பாடல்களைத் தொகுத்து பாடி மகிழ்விப்பார்.

இவர்களுடன் நம் நாட்டுத் திறன்மிக்க பின்னணிக் கலைஞர்கள் பின்னணி இசை வழங்குவார்கள்.
தஞ்சை கமலா இந்திரா நாட்டியப் பள்ளியின் நாட்டிய நாடகம், நாடறிந்த கலைஞர் மா. துருவன் குழுவினர் வில்லுப்பாட்டு எனப் பல மரபிசைப் படைப்புகளும் மக்கள் மனம் கவரும் வண்ணம் படைக்கப்படவுள்ளன.

தமிழிசையின் தொன்மையையும் வளர்ச்சியையும் பற்றி, ஆய்வாளர் இரா. திருமாவளவனின் உரையும் இடம்பெறவுள்ளது..

இவ் வாண்டு தமிழிசை விழாவின் கருப்பொருளாக ‘தமிழோடு இசைப் பாடல் மறந்தறியேன்’ என்ற திருநாவுக்கரசரின் பாடல் வரியை விழாக்குழுத் தேர்வு செய்துள்ளது.

கட்டணம் இன்றி நடைபெறள்ள இவ்விழாவில் இசை பயிலும் மாணவர்கள், தேவாரப் பயிற்சிப்பெறும் மாணவர்கள், இசை ஆசிரியர்கள், தமிழ்ப்பள்ளி ஆசிரியர்கள், ஆலய நிருவாகிகள், தமிழிசை ஆர்வலர்கள் என அனைவரும் கலந்து ப,யன் பெறலாம்.

தமிழிசை பற்றிய முழுமையான தகவலுடன் தமிழில் இருக்கும் கீர்த்தனைகளைத் தெரிந்து கொள்வதற்கும் தமிசைக்குத் தொண்டாற்றிய சான்றோர்களைப் பற்றி அறிந்துகொள்வதற்கும் இவ் விழா ஓர் அருமையான வாய்ப்பு.

ஆர்வமுள்ளோர் தொடர்பு கொண்டு தங்கள் வருகையை உறுதிபடுத்திக்கொள்ளுங்கள். தமிழிசையில் இருக்கும் அருமையான கருவூலங்களை எடுத்துரைக்கும் இவ்விழா மிகப் பெரும் பயனை அளிக்கும் ஓர் அரிய விழாவாகும்.

ஆதரவாளர்கள் முன்வாருங்கள்:

தமிழிசை விழா 2025, பெரும் பொருள் செலவில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஆதரவு நல்க முன்வருவோர் எங்கள் முயற்சிக்குத் துணைநிற்கும் வகையில் எங்களோடு கைகோக்கலாம். உணவு, தொழில்நுட்பக் கருவிகளுக்கான வாடகை, தமிழ்நாட்டுக் கலைஞர்களுக்கான போக்குவரத்து, தங்கும் விடுதி, உணவு உள்ளிட்ட செலவை ஈடுகட்டும் வகையில் உதவலாம் . விழாத் தொடர்பில் சிறப்பு மலரூம் வெளியிடப்படுகிறது.

தொடர்புக்கு: 016 3949265, 019 3619235, 012 3093017 அல்லது வாட்சாப் எண் 019 9959265.

செய்தி சம்பந்தப்பட்ட உங்கள் கருத்தை பதிவு செய்ய "வாட்சாப்" பட்டனை அழுத்துங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

அதிகம் பகிரப்பட்டவை