Wednesday, April 15, 2026

ஒவ்வொரு வீடும் ஓர் அறிவாலயம் – உலக புத்தக தினத்தில் பேரறிஞர் அண்ணாவின் கனவு!

பினாங்கு, ஏப்ரல் 23 –

இன்று உலகம் முழுவதும் ஏப்ரல் 23, உலக புத்தக மற்றும் காப்புரிமை தினம் (World Book and Copyright Day) சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.

அறிவின் ஒளியை மக்கள் மனங்களில் விதைக்கும் இந்தப் சிறப்பு நாளில், தமிழர் வரலாற்றின் மாபெரும் சிந்தனையாளர் பேரறிஞர் அண்ணாவின் வாசிப்புப் பற்றிய கனவுகளை மீண்டும் நம் நினைவில் கொண்டு வருவதே இன்றைய பதிவின் நோக்கம்.
“வீட்டிற்கோர் புத்தகச் சாலை வேண்டும்” என அறிவித்த அண்ணாவின் கனவு, இன்று மின்னணு தகவல் தொழில்நுட்பம் வேகமாக வளர்ந்தாலும், தன் சீரும் சிறப்பும் குறையாமல் நம் மனங்களில் பிரதிபலிக்கிறது.

அண்ணா ஆசைப்பட்ட வாசிப்பு புரட்சி, நம் பள்ளிக் கல்விக்கு ஒரு பட்டப்படிப்பு முடிக்கவேண்டும் என்பதற்கோ அல்ல, அது வாழ்நாள் முழுவதும் மனிதனுக்கு புதிய அறிவையும் ஆழ்ந்த சிந்தனையையும் விதைக்கும் உன்னத அனுபவமாக வேண்டும் வாசிக்கும் பழக்கத்தால்.

நாம் இன்று வாழும் டிஜிட்டல் சூழலில், கைபேசிகள், சமூக வலைத்தளங்கள் மற்றும் வீடியோ விளையாட்டுகள் குழந்தைகளிலிருந்து பெரியவர்கள்வரை அனைவரின் கவனத்தையும் கைப்பற்றியுள்ளன. இந்நிலையில் புத்தகம் வாசிப்பது என்பது ஒரு எளிமையானதாயினும், ஆழமானதாயினும் உள்ள புதிய புரட்சி. ஒரு புத்தகம் ஒரு மனிதனை மாற்றும், ஒரு வாசிப்புப் பயணம் ஒரு வாழ்கையைத் திருப்பி எழுதும்.

அச்சுப்புத்தகத்தின் மணமும், பக்கங்கள் புரட்டும் ஒலியும், வாசிக்கும் போதிலே தோன்றும் கதையின் உலகும், வாசிப்பை நேசிப்பவருக்கு தனி சுகமாகவே இருக்கிறது. ஒவ்வொரு வீடும் ஒரு அறிவாலயமாக, வாசிப்பின் நூலகமாக மாற வேண்டியது இன்றைய சமூகத் தேவையாகும்.
இந்நாளில் நாம் ஒருவரையொருவர் புத்தகங்களை பரிசளிக்கலாம். குழந்தைகளுக்கு உற்சாகம் தரும் வாசிப்புப் போட்டிகளை நடத்தலாம். வீட்டின் ஒரு மூலையையாவது வாசிப்பு மேடையாக மாற்றலாம். வாசிப்பின் தீப்பொறியை நாம் ஏற்றினால், அது ஒரு சமுதாயப் புரட்சியாக எழும்.

இன்று நாம் ஒரு புத்தகத்தை எடுத்து படிக்கத் தொடங்குவோம். புத்தகம் என்பது ஒரு அறிவுக்கண், ஒவ்வொரு பக்கமும் ஒளி ஊற்றும் தீபம். அண்ணா கண்ட கனவை நனவாக்குவோம் – ஒவ்வொரு வீட்டிலும் ஒரு புத்தகச் சாலை அமைப்போம்!

செ. குணாளன்

செய்தி சம்பந்தப்பட்ட உங்கள் கருத்தை பதிவு செய்ய "வாட்சாப்" பட்டனை அழுத்துங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

அதிகம் பகிரப்பட்டவை