Wednesday, April 15, 2026

சிங்கப்பூரில் தமிழ்ப் புத்தக திருவிழா!

சிங்கப்பூரில் முதல் முறையாக தமிழ்ப் புத்தகத் திருவிழா நடைபெற்று வருகிறது.

சிங்கப்பூர் தேசிய கலை மன்றம், தமிழ் மொழி வளர்ச்சிக்குழு, ‘வளர்தமிழ்’ இயக்கம், தேசிய நூலக வாரியம் ஆகிய அமைப்புகளுடன் இணைந்து சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகம் இதனை ஏற்பாடு செய்துள்ளது

விக்டோரியா சாலையில் உள்ள தேசிய நூலகக் கட்டடத்தில் நேற்று வெள்ளிக்கிழமை தொடங்கிய இந்த மாபெரும் புத்தகத் திருவிழா, நாளை ஞாயிற்றுக்கிழமை வரை நடைபெறுகிறது.

சிங்கப்பூர் விடுதலை அடைந்து அறுபது ஆண்டு நிறைவை முன்னிட்டு சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகம் இந்த புத்தகத் திருவிழாவிற்கு ஏற்பாடு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

சிங்கப்பூரின் உள்துறை மற்றும் சட்டத்துறை அமைச்சர் கா. சண்முகம் நேற்று காலை 10:00 மணி அளவில் இந்தப் புத்தக த் விழாவை முறைப்படி தொடக்கி வைத்தார்.

இதில் பலதரப்பட்ட வாசகர்களைக் கவரும் வண்ணம் 20 புத்தகக் கூடங்கள் இடம் பெற்றுள்ளன.

இந்தப் புத்தகத் திருவிழாவிற்கு மாலை நேரத்து வருகையாளர்களை இன்புறுத்தும் வகையில் குறு நாடகமும் புதிர் போட்டியும் நேற்றைய முதல் நாள் நிகழ்வில் இடம் பெற்றன.

இன்றைய இரண்டாம் நாள் நிகழ்வில் காலையில் ‘சின்ன குரல்கள் – பெரிய கதைகள்’ அங்கமும் பிற்பகலில் நூல் வெளியீட்டு நிகழ்வும் தொடர்ந்து மாலையில் கவியரங்கமும் இடம்பெறகின்றன.

நாளை நிறைவு நாள் ஞாயிற்றுக்கிழமை பதிப்பாளர்களும் எழுத்தாளர்களும் என்ற தலைப்பில் கலந்துரையாடல் என்னும் அங்கம் இடம்பெற இருக்கிறது.

டிஸ்கவரி புக் பேலஸ், சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ், யாவரும் பதிப்பகம், புத்தகக் கடை டோட் கோம், எதிர் வெளியீடு உள்ளிட்ட தமிழக நூல் வெளியீட்டு நிறுவனங்கள், மலேசியாவில் இருந்து உமா பதிப்பகம், குயில் ஜெயபக்தி நிறுவனம், தமிழ்க்கனி என்டர்பிரைஸ் ஆகிய நூல் நிறுவனங்களுடன் கிரிம்சன் எர்த் பதிப்பகம், ஜீவ ஜோதி பதிப்பகம், சிங்கப்பூர் முஸ்தபா தமிழ் அறக்கட்டளையின் சிராங்கூன் டைம்ஸ், ஆர்யா கிரியேஷன்ஸ் ஆகிய சிங்கப்பூர் நூற்பதிப்பகங்களும் இந்த புத்தகத் திருவிழாவில் முகப்பிடங்களைத் திறந்து உள்ளன.

நாளை ஞாயிற்றுக்கிழமை நிறைவு விழாவின்பொழுது நடைபெறவிருக்கும் கலந்துரையாடல் இலக்கிய அன்பர்களுக்கும் ஆர்வலர்களுக்கும் சிந்தனைக்கு விருந்தாக அமையும் என்று சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர்க் கழக செயலாளர் பிரேமா மகாலிங்கம் தெரிவித்துள்ளார்.

சிங்கப்பூரில் முதல் முறையாக நடைபெற்று வருகின்ற இந்த புத்தகத் திருவிழா மலேசிய – சிங்கப்பூர் தமிழ் ஆர்வலர்கள், எழுத்தாளர்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரிடமும் தமிழியத் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சிங்கப்பூர் தமிழ் இலக்கிய வட்டத்தினருக்கும் ஆர்வலர்களுக்கும் குறிப்பாக இளம் தலைமுறைக்கு புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட இந்த புத்தக திருவிழாவை தொடக்கி வைத்து பேசிய அமைச்சர் கா. சண்முகம்,
சிங்கப்பூரில் தமிழின் முக்கியத்துவத்தையும் இதனை இளையர்களிடம் கொண்டு சேர்க்கும் அவசியத்தையும் பற்றி எடுத்துரைத்தார்.

சிங்கப்பூர் , மலேசியா மற்றும் இந்தியா-தமிழ்நாட்டிலிருந்து சிங்கப்பூர் தமிழ் புத்தக திருவிழாவில் கலந்து கொண்டிருக்கும் பதிப்பகத்தார் அனைவருக்கும் வாழ்த்து தெரிவித்தார்.

செய்தி சம்பந்தப்பட்ட உங்கள் கருத்தை பதிவு செய்ய "வாட்சாப்" பட்டனை அழுத்துங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

அதிகம் பகிரப்பட்டவை