
தமிழ் ஆர்வலர்கள், குறிப்பாக கவிதை நாட்டம் கொண்டவர்கள் மரபுக் கவிதையின் பால் அக்கறையும் ஆர்வமும் கொள்ள வேண்டும் என்று மஇகா தேசிய துணைத்தலைவரும் எய்ம்ஸ்ட் பல்கலைக்கழக இணை வேந்தருமான சொல்வேந்தர் டத்தோஸ்ரீ மு. சரவணன் கேட்டுக் கொண்டார்.
மரபுக் கவிதை பயிலரங்க நிறைவு விழா நேற்று ஞாயிற்றுக்கிழமை மஇகா தேசியத் தலைமையக நேதாஜி அரங்கத்தில் நடைபெற்றது.
அதில் கலந்து கொண்டு உரையாற்றிய சரவணன், தமிழ் இலக்கியம், இலக்கணம் ஆகியவற்றின் பெருமையாகவும் மாண்பாகவும் விளங்குவது மரபுக் கவிதை என்பதால் தமிழ் இலக்கிய ஆர்வலர்கள் அனைவரும் மரபுக் கவிதையின்பால் அக்கறை காட்ட வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.

ப. ராமு அறக்கட்டளை ஏற்பாட்டில் மரபுக் கவிதைத் தொகுப்பு-2 என்ற பாநூல் அறிமுகமும் மரபுக் கவிதை பயிலரங்கு நிறைவு விழாவும் ஒருசேர நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் இலக்கிய ஆர்வலர்கள், ஆசிரியர்கள், உயர்க்கல்வி மாணவர்கள், பயிற்சி மாணவர்கள், தமிழ் ஆர்வலர்கள், பொதுமக்கள் என அதிகமானோர் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியில் தமிழ் இலக்கியத்தில் மரபுக் கவிதை என்பது உச்சமானது-உன்னதமானது எனவும் சரவணன் தெரிவித்தார்.
தமிழ் இலக்கியவாதிகளில், குறிப்பாக கவிதை நாட்டம் உடையவர்களை மரபுக் கவிஞர்களாக உருவாக்குவது இந்த நிகழ்ச்சியின் நோக்கமாக இருந்தது;
தவிர மரபுக் கவிதை வளர்ச்சி தொடர்பில் தொடர்ந்து சேவையாற்றி வரும் முனைவர் மனோன்மணி தேவி அண்ணாமலை போன்றவர்கள் பாராட்டுக்குரியவர்கள் என்றும் சரவணன் தன் உரையில் குறிப்பிட்டார்.


