
எய்ம்ஸ்ட் பல்கலைக்கழகத்தில் அண்மைய ஆண்டுகளாக மே மாதத்தில் நடைபெற்றுவந்த பட்டமளிப்பு விழா இவ்வாண்டு ஏறக்குறைய ஒரு மாதம் தள்ளி, ஜூன் 21ஆம் நாள் நடைபெற இருக்கிறது.
பன்னாட்டு தரத்திலான உயர்கல்வி நிறுவனமாக உருமாற்றம் கண்டுவரும் எய்ம்ஸ்ட் பல்கலைக்கழகத்தில் கடந்த ஆண்டு மேத் திங்களில், 15 ஆவது பட்டமளிப்பு விழா நடைபெற்ற பொழுது மஇகா-வின் தேசிய துணைத் தலைவர் சொல்வேந்தர் டத்தோஸ்ரீ மு. சரவணன், இந்தப் பல்கலைக்கழகத்தின் இணை வேந்தராக மகுடம் சூட்டப்பட்டார்.
இந்த ஆண்டு பட்டமளிப்பு விழா குறித்து ஒன்றும் தகவல் வெளிவரவில்லையே என்ற எண்ணத்தில் இவரிடம் தகவல் கேட்டபொழுது, ஜூன் மாதம் இருபத்து ஒன்றாம் நாள், 16 வது பட்டமளிப்பு விழா நடைபெற இருப்பதாகத் தெரிவித்தார்.

இருபத்து ஒன்றாம் நூற்றாண்டு தொடங்கிய நேரத்தில் தொடங்கப்பட்ட இந்தப் பல்கலைக்கழகத்தில் இந்திய மாணவர்களை அதிகமாக சேர்க்கும் பொருட்டு மஇகா சார்பில் இந்த ஆண்டு தொடக்கத்திலிருந்து மாநிலந்தோறும் பரப்புரை- விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. தற்பொழுது இந்திய சமுதாய மாணவரிடையே எய்ம்ஸ்ட் பல்கலைக்கழகம் குறித்த விழிப்புணர்வும் மாணவர் சேர்க்கையும் அதிகரித்துள்ளது.
இத்தகைய நடவடிக்கையால் ஒருவேளை தாமதப்படுத்திருக்கலாம் என்று தெரிகிறது.

ஜூன் 21, பல சிறப்புகளுக்கு உரிய நாள்.
பன்னாட்டு மனிதநேய நாள்; பன்னாட்டு யோகாசன(சுவாசப் பயிற்சி) நாள்; உலக இசை நாள்; பன்னாட்டு நீராய்வியல் நாள் என்பதை எல்லாம் தெரிந்துதான் இந்த நாளைத் தேர்ந்தெடுத்தார்களோ என்னவோ தெரியவில்லை.
எது எவ்வாறாக இருந்தாலும் ம.இ.கா.-வின் கல்விக்கரமான எம்.ஐ.இ.டி. வழி நடத்தும் எய்ம்ஸ்ட் பல்கலைக்கழகத்தின் 16-ஆவது பட்டமளிப்பு விழா இனிதே நிறைவேறிட குமரி நல்லாள் வாழ்த்துகிறாள்!!


