Thursday, April 2, 2026

6-ஆம் படிவ(எஸ்டிபிஎம்) தமிழ் மாணவர்கள் தமிழ்ப் பாடத்தையும் கற்பது சிறப்பு: மலேசியத் தமிழாய்வு நிறுவனம் வலியுறுத்தல்!மின்னல் பண்பலை வானொலிக்கு பாராட்டு!!

2025 கல்வி ஆண்டிற்கான 6-ஆம் படிவ வகுப்பு ஜூன் 10-ஆம் நாள் தொடங்க இருக்கின்ற நிலையில், இதுகுறித்த விழிப்புணர்வையும் தமிழ் மாணவர்கள், எஸ்டிபிஎம் எனப்படும் இந்த 6-ஆம் படிவக் கல்வியில், 5-ஆவது பாடமாக தமிழ்ப் பாடத்தையும் படித்தால், அதன்வழி விளையும் நன்மை, 20 பொது பல்கலைக்கழக நுழைவுக்கான மடை திறந்த வெள்ளம் போன்ற வாய்ப்பு உள்ளிட்டவற்றை காலமறிந்து எடுத்துரைத்த மலேசியத் தமிழாய்வு நிறுவனத் தலைவர் பேராசிரியர் முனைவர் சு.குமரன் பாராட்டிற்குரியவர்.

விடியலை அறிந்து கூவும் கோழியைப் போல, முனைவர் குமரனை அங்காசாபுரிக்கு வரவழைத்து, அவர்தம் செம்மாந்த கருத்தை-நம் மாணவ சமுதாயம் சார்ந்த விழிப்புணர்வை மின்னல் பண்பலை வானொலிவழி நேயர்களுக்குத் தெரிவித்த இன்றைய காலைக் கதிர் அறிவிப்பாளர்களான மோகன், தா.தெய்வீகன் இருவரும் சமுதாயத்தின் பாராட்டிற்கு உரியவர்கள். இதற்கு அனுமதி அளித்த மின்னல் பண்பலை வானொலி நிருவாகத்திற்கும் நன்றி.

தமிழ்ப் பள்ளியில் பயின்று, 5-ஆம் படிவ-எஸ்.பி.எம். தேர்விலும் தமிழ்-தமிழ் இலக்கியப் பாடங்களைக் கற்ற மாணவர்கள், 6-ஆம் படிவத்திலும் தமிழைக் கற்றால், அந்த மாணவர்கள் உயர்க்கல்வி நிலையங்களுக்கு தமிழைக் கொண்டு செல்லும் மொழித் தூதர்களாக கருதப் படுகிறார்கள்.

தவிர, தாய்மொழிக் கல்வியைத் தொடர்ந்து கற்பதால், அவர்கள் பலவிதமாக பயனுறுவதுடன், எதிர்கால சமுதாயத்திடம் நம் தொல்மொழியான தமிழைக் கொண்டு சேர்க்கும் பணியை-தொண்டை, தங்களை அறியாமலேயே அவர்கள் மேற்கொள்கின்றனர் என்று குமரன் குறிப்பிட்டார்.

6-ஆம் படிவக் கல்வியின்போது நான்கு முக்கியப் பாடங்களைப் படிக்க வேண்டும்; Pengajian Am என்னும் கட்டாயப் பாடத்துடன் மேலும் 3 பாடங்களை மாணவர்கள் கற்க வேண்டும்; இந்த பொதுப் பாடத்திட்டத்துடன் ஐந்தாவது பாடமாக தமிழையும் படிக்கும் மாணவர்களுக்கு, அதிக மதிப்பெண் கிடைப்பதால், அடுத்து உயர்க்கல்வி மேற்கொள்ளும்பொழுது, பல்கலைக்கழக நுழைவுச் சீட்டைப் போன்று அது அமையும் என்று மலாயாப் பல்கலைக்கழக தமிழாய்வ்வுப் பிரிவின் மேநாள் தலைவருமான அவர் தெரிவித்தார்.

ஆசிரியர் உள்ளிட்ட கல்வித் துறைசார் பணி வாய்ப்பு, நீதித் துறைப் பணிகள், முனைவர் பட்டக் கல்வி போன்றவற்றுக்கு 6-ஆம் படிவக் கல்வியின்போது தமிழைக் கற்பது துணை புரியும்;

இவற்றை யெல்லாம் எண்ணிப் பாராத சிலர், மலாயாப் பல்கலைக்கழக தமிழாய்வியல்பிரிவு, அங்குள்ள மொழியியல் புலம் மற்றும் தஞ்சோங் மாலிம் உப்சி கல்வியியல் பல்கலைக்கழகம் ஆகிய மூன்று இடங்களில்தான் தமிழைப் பயன்படுத்த முடியும் என்று தவறாக கறுதிக் கொண்டுள்ளனர் என்று முனைவர் குமரன் விளக்கம் அளித்தார்.

பன்னாட்டு அங்கீகாரம் பெற்ற எஸ்டிபிஎம் கல்வியின்போது, தமிழ்ப் பாடத்தையும் படிக்கும் மாணவர்களும் அவர்களின் பெற்றோரும் சந்திக்கும் சிக்கல், எதிர்கொள்ளும் தடைக்கற்கள் அதிகம் என்பதை மலேசியத் தமிழ் ஆய்வு நிறுவனம் உணர்ந்துள்லது.

சம்பந்தப்பட்ட பள்ளிகளில் தமிழைப் பயிற்றுவிக்கும் ஆசிரியர் பற்றாக்குறையால், அதிகமான பாணவர்கள் தனியாக மிகநேர வகுப்பை நாட வேண்டியுள்ளது; இதனால், நேர விரயம், போக்குவரத்து சிக்கல், அதிக செலவு போன்றவற்றால் மாணவர்களும் பெற்றோரும் பாதிப்பை எதிர்கொள்ள நேரிடுகிறது.

இதுபோன்ற சிக்கல் நீடிக்கும் பள்ளிகளில் மாணவர்களையும் பெற்றோரையும் ஒருங்கிணைத்து, தேர்வு வாரிய அதிகாரிகளை சந்திக்க வைத்து, சம்பந்தப்பட்ட பள்ளிகளில் தமிழாசிரியரை நியமிக்கும் முயற்சியில் மலேசியத் தமிழ் ஆய்வு நிறுவனம் முனைப்பு காட்டிவருகிறது.

“எனவே, மாணவர்களும் பெற்றோரும் எஸ்டிபிஎம் கல்வியின்போது, தமிழையும் கற்க அக்கறையும் முனைப்பும் காட்ட வேண்டும்”.

தேசிய அளவில் 6-ஆம் படிவக் கல்வியின்போது, தமிழ்ப் பாடத்தையும் சேர்த்து கற்கும் மாணவர் எண்ணிக்கையில் ஆண்டுக்காண்டு ஏற்றத்தாழ்வு நிலவுகிறது; நிகழும் கல்வி ஆண்டில் ஏறக்குறைய எண்ணூறு மாணவர்கள் தமிழைக் கற்பார்கள் என்று எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்த முனைவர் சு. குமரன் இதன் தொடர்பில் மேல் விவரம் பெற விழைவோர் தன்னுடனும்(012-3123753) மற்றொரு பொறுப்பாளர்-பொருளாளர், தமிழாசிரியருமான ஆ.பீட்டருடனும்(012-6823439) தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவித்தார்.

இதன் தொடர்பில், மலேசிய தமிழ் ஆய்வு நிறுவனத்தைத் தவிர, மலேசிய உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தின் பங்களிப்பும் குறிப்பிடத்தக்கது.

இந்நிறுவனத்தினர் பாட நூல்களைத் தயாரித்து, அச்சிட்டு, அவற்றை மலிவான விலையில் 6-ஆம் படிவ மாணவர்களுக்கு வழங்குகின்றனர். இந்த நூல்கள் வெளியிலோ அல்லது புத்தகக் கடைகளிலோ பெரும்பாலும் கிடைப்பதில்லை. மூன்று தவணைகளுக்குரிய பாட நூல்கள் மாணவர்களுக்கு தடையின்றி கிடைப்பதில் சிறப்பாக பங்காற்றும் இவர்களுக்கும் சமுதாயம் நன்றி பாராட்ட வேண்டும்.

அதேவேளை, மலேசியத் தமிழ் ஆய்வு நிறுவனத்த்தின் சார்பில் தேர்வு வழிகாட்டி நூலைத் தயாரித்து மாணவர்களுக்கு வழங்குவதுடன் மாணவர்களுக்கான கருத்தரங்கம், ஆசிரியர்களுக்கான பயிலரங்கு ஆகியவற்றையும் அவ்வப்பொழுது நடத்தி வருவதாகக் கூறிய குமரன், இந்த ஆண்டு அனைத்துப் பாடங்களுக்கும் பாட நூல்கள் மாறியுள்ள நிலையில் அதற்கேற்ப அந்த நிலையிலும் தயாராக இருக்கிறோம் என்றார்.

இந்த ஆண்டு, மாணவர்களுக்கு கட்டண்மின்றி தமிழ்ப்பாட நூலை வழங்க எண்ணி, அதற்கேற்ப செயல்படுவதாகவும் தமிழாசிரியர் சிக்கலைக் களையவும் முனைப்புகாட்டி வருகிறோம் என்றும் அவர் தெரிவித்தார்.

எஸ்டிபிஎம் கல்வியின்போது, பத்து மாணவர்கள் தமிழ்ப் பாடத்தையும் படிக்க விரும்பினால், பள்ளி நிருவாகமே ஒரு தமிழாசிரியரை நியமிக்க வேண்டும்; அதில் தடை இருந்தால், மாணவர்கள்-பெற்றோர் ஒத்துழைப்புடன் தேர்வு வாரியத்தை அணுகி தமிழாசிரியரை நியமிக்க தமிழ் ஆய்வு நிருவனம் முயற்சி மேற்கொள்ளும். இதில், மாணவர்களின் முனைப்பும் பெற்றோரின் ஒத்துழைப்பும்தான் மிகமுக்கியம் என்று முனைவர் சு. குமரன் தெரிவித்தார்.

தெய்வீகனும் மோகனும் பொருத்தமான வினாக்களைத் தொடுத்து, தேவையான தகவலை அவரிடம் இருந்து பெற்று, வானவீதியில் தவழவிட்ட பாங்கு, இவ்விருவருக்கும் உள்ள சமூக அக்கறையை வெளிப்படுத்தியது.

செய்தி சம்பந்தப்பட்ட உங்கள் கருத்தை பதிவு செய்ய "வாட்சாப்" பட்டனை அழுத்துங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

அதிகம் பகிரப்பட்டவை