கடந்த வாரம் தலைநகரத்து டான்ஸ்ரீ கே ஆர் சோமா அரங்கத்தில் நடைபெற்ற நூல் வெளியீட்டு விழாவில் நூல் ஆய்வுரை வழங்கியவர் காவல்துறை அதிகாரியாக இருந்து ஓய்வு பெற்றபின் இலக்கியவாணராக உருமாற்றம் பெற்றுள்ள டத்தோஸ்ரீ ஆ. தெய்வீகன். தமிழர் புலப்பெயர்வு என்ற நூலின் ஆய்வுரை குறித்த அவருடைய எழுத்தோவியம் அவரின் கைவண்ணத்திலேயே இதோ தொடர்கிறது, ஒரு வாரம் கழித்து அதே சனிக்கிழமை!

அண்மையில் நான் வாசித்த நூல்களில், மிகச் சிறந்த நூலாக இதைக் கருதுகின்றேன்.
கூரிய கண்கொண்டு, அகன்ற பார்வையில், ஆழமாக ஆய்வுசெய்யப்பட்ட அற்புதமான நூல் இது.
374 பக்கங்களைக் கொண்ட இந்நூல், 301 நூல்கள் & ஆவணங்கள்; 29 இணையவழி தரவுகளை யெல்லாம் ஆதாரமாகக் கொண்டு ஆய்வு செய்யப்பட்ட நூல் இது;
பல நாடுகளில், பல்லாயிரம் மைல்கள் பயணம் செய்தும் தொல்லியல் காப்பகங்கள், நூலகங்கள் என்று ஒரு பரந்து விரிந்த ஆய்வின் அடிப்படையிலும் படைக்கப்பட்ட இந் நூல், ஒரு வரலாற்று ஆவணம் என்றால், அது மிகையாகாது.
வினைத்திட்பம் என்பது ஒருவன் மனத்திட்பம்;
மற்றை யெல்லம் பிற(661)
என்ற குறளுக்கு ஏற்ப, மனத்திட்பம் நிறைந்தவர் முனைவர் க. சுபாஷினி.
இவரின் இந்த நூலுக்கான ஆய்வுக்கும் உழைப்புக்குமே, மேலும் ஒரு முனைவர் பட்டம்கூட கொடுக்கலாம்.
புலம் பெயர்தல் பற்றிய சிந்தனை எழுந்தவுடன் என் மனதில் உதித்தது, புராணங்களில் படித்த அகத்திய முனிவர்தான்.
சிவபெருமானின் கட்டளைக்கு இணங்க, வடபுலத்திருந்து தென்புலத்திற்கு புலம்பெயர்ந்து, உலகை சமநிலை அடையவைத்து, உயர்வு தாழ்விலா நிலையைத் தந்தவர். அவர்தான்.
புலம்பெயர்ந்த முதல் தமிழர் என்று எண்ணலாகுமோ?
இரண்டாவது, முருகப் பெருமான் மயிலேறி உலகை வலம் வந்த செய்தியையும் பின்னர் மாம்பழத் தகராற்றினால், பழநிக்கு புலம் பெயர்ந்ததும் புராணக்கதைகளில் காணக்கிடக்கின்றன.

உண்மையோ இல்லையோ தெரியாது; ஆனால் அந்தப் புலம்பெயர் சிந்தனையும், உலகை வலம் வரும் சிந்தனையும் வித்தாகிறது.
2,500 ஆண்டுகளாக, சங்க காலம், அதற்கு முன்புமிருந்தே தமிழரின் புலம்பெயர் நடவடிக்கைகள் நடந்து கொண்டிருந்தாலும் பொது ஆண்டுக்குப் பின் (கி.பி.)1,500ல்தான் சற்று தெளிவான தரவுகள் கிடைக்கின்றன.
பல்லவர்கள், ஸ்ரீவிஜய சாம்ராஜ்யம், பின்னர் இராஜ ராஜ சோழன், இராசேந்திரன் காலங்களில், ரோமாபுரியில் இருந்து, பிலிப்பைன்ஸ், இந்தோனேசியா, ஜப்பான், சீனா, கம்போடியா, கொரியா என்றும் வாணிகத்தோடு இயைந்த புலப்பெயர்வு இடம்பெற்றிருக்கின்றதாக இந்நூலின்வழி அறிய முடிகிறது.
மத்திய தரைக்கடல் நாடுகள், மெக்சிக்கொ வரையிலும்கூட தமிழர் தொடர்பு இருந்திருக்கின்றதாக அறியப் படுகிறது.
ஆங்கிலேய, போர்த்துகீசிய, டச்சு, பிரெஞ்சு நாடுகள் இந்தியாவை ஆக்கிரமிப்பதற்கு முன்பாக, பாரத தேசம் ஒரு சொர்க்க பூமியாக, பொன்விளையும் நாடாகத்தான் உலக மக்களின் செவிகளில் விழுந்திருக்கின்றது.

17-ம் நூற்றாண்டில், உலகின் மொத்த வருமானம், உற்பத்தியில் 25% பாரத தேசத்தில்தான் இருந்ததாக அறியப் படுகிறது. உதாரணமாக, ஒரு இந்திய நாட்டின் பணம் 11 இங்லிஷ் பணத்திற்கு ஈடானது என்றும் அறியப்படுகிறது.
ஆனால், 200 ஆண்டுகளாக, தொடர்ந்து கொள்ளையடிக்கப் பட்டதால், 1,800கள் தொடங்கி, பஞ்சமும் பசியும் உறுபிணியும் இந்திய, தமிழக மக்களை கொன்று குவித்தது.
1,800-ம் ஆண்டு வாக்கில், இந்தியாவின் மொத்த மக்கள் தொகை 300 மில்லியனாகவும் அவர்களை அடக்கி ஆண்ட வெள்ளையர்களின் எண்ணிக்கை வெறும் 50,000 தான் என்றும் ‘கூகுள்’வழி அறியக்கிடைக்கின்றது.
30,000 பேரைக் கொண்ட பிரிட்டீஷ் இந்திய இராணுவத்தில் 80% இந்தியர்கள்.
இரண்டாம் உலகப் போரின் போது, 1 மில்லியன் பிரிட்டிஷ் இராணுவத்தினர், இந்தியர்கள். (இந்தியர்களை வைத்தே, இந்தியர்களை அடக்கி ஆண்டார்களா? என்று எண்ணத்
தோன்றுகிறது).
மற்றொரு விஷயம், கூலி இல்லாத,, உணவு மட்டும் வழங்கப்பட்ட அடிமைகள், பின்னர் கூலிகளாகவும், அதன் பின்னர் ஒப்பந்தக் கூலிகள் என்ற முகமூடி போட்ட மோசடிகள் (அணிந்துரை வழங்கிய ஐயா பாலகிருஷ்ணனின் வார்த்தைகள்) நிறையவே அமலில் இருந்தன. அடிமைத் தொழில், குறிப்பாக தமிழகத்திலும் ஒட்டுமொத்த இந்தியாவிலும் இருந்ததாக இப்புத்தகத்தின்வழி அறியக் கிடைக்கின்றது.
ஆக, மனித அடிமைகளை வாங்கி விற்கும் வியாபாரத்தை, இந்தியாவை ஆக்கிரமித்த மேற்கத்தியர்கள், இங்கு வந்துதான் கற்றுக்கொண்டார்களா என்பது, மேலும் ஆய்வு செய்யப்பட வேண்டிய விஷயம்.
ஆனால், இதை அறிந்த காலனித்துவவாதிகள், தமிழகத்தில், தமிழர்களைத் தரகர்களாகக் கொண்டே, தங்களுக்கு வேண்டிய அடிமைகளை, கப்பல் கப்பல்களாக ஏற்றி தங்கள் ஆளுமையின்கீழ் இருந்த நாடுகளுக்கும், ஏனைய, தங்கள் வசமிருந்த நாடுகளுக்கும், கேள்வி கேட்பாரின்றி, மந்தைகளைப்போல் ஏற்றிச்சென்றிருக்கின்றனர்.
போய்ச்சேரும் முன்பே 30% மேல், பசியாலும், நோயினாலும் மாண்டுபோனார்கள். கடல் மீன்களுக்கு உணவாகினர். அந்தக்கோரங்கள், அவலநிலை, துன்பங்கள் கொதித்து குமுறிய உள்ளங்கள் …..எடுத்துச் சொன்னால் எண்ணிக்கையில் அடங்காது.
இப்பொழுது, தமிழகத்திலிருந்து புலம்பெயர்ந்து 100 ஆண்டுகளுக்கும் மேலாகிறது. எந்தப் பசி, பஞ்சம், உறுபிணி, தொல்லை துன்பங்கள் விட்டொழிப்பதாய் நினைத்து, புதிய நிலங்களுக்குப் புலம் பெயர்ந்தோமோ; அங்கெல்லாம் பாலும் தேனும், பாய்ந்தோடுகிறது. பசும்பொன் பழுத்துக் கொட்டுகிறது என்ற ஆசை வார்த்தைகள் நிரம்பிய, அந்தக்காலத்துப் பெரிய வதந்திகளை நம்பிதான் பல்லாயிரம் பேர் சென்றிருக்கின்றார்கள். பயணங்களின் முன்பும், பயணத்தின் போதும் உயிர் மிஞ்சியவர்கள், சென்ற இடங்களில் தரை இறங்கிய பின்பும், பட்ட துன்பங்கள், எப்படிப்பட்டவை? எத்தகையவை? என்பவையெல்லாம் ஆவணப்படுத்தப்படவில்லை என்றே தெரிகிறது.
உற்றாரை இழந்து, பெற்றோரை இழந்து,
அன்பு மனைவி, மக்களை இழந்து, மோசடிக்கப்பட்டு, கைது செய்யப்பட்டு, சிறைச்சாலைகளில் மாண்டு மக்கிப்போன கதைகள் எத்தனை எத்தனை?
உடன்வரும்போது கொண்டுவந்த நமது மொழி, கலாச்சரம், உணவுமுறை.; நம்முடன் பிரியாது உடன்வந்த நமது தெய்வங்கள்; அந்த ஏழ்மைத்துன்பங்களின்போதும் நமக்குத் தளராத நம்பிக்கைத் தந்த தெய்வங்கள்…..விந்தையான உண்மைதான். Dr.சுபாஷினியின் நூல், இதையெல்லாம் சித்திக்கத் தூண்டுகிறது.
புலம் பெயர்ந்த நாடுகளில் அதிபர்களாகவும், மந்திரிகளாகவும், தொழில் அதிபர்களாகவும், அரசாங்க தனியார் துறைகளில் பெரிய அதிகாரிகளாகவும், இராணுவ போலீஸ் துறைகளில் கமிஷனர்களாகவும் உயர்ந்தாலும்; பொதுவாக எதை எதையெல்லாம் எதிர்பார்த்துப் புலம் பெயர்ந்தோமோ, அவைகளை அடைந்துவிட்டோமா?
நம் முன்னோரின் கனவுகள் நிறைவேறியதா? 10% நிறைவேறி இருக்கலாம். இதற்கிடையே நம்மிடையே எத்தனையோ குழப்பங்கள், குளறுபடிகள், குறைந்தபாடில்லை.
இன்னும் அரசியல் பேதங்கள், சாதி, சமய சம்பிரதாய வேறுபாடுகள் தலைவிரித்தாடுகின்றன. இன்னும் நாம் ஏழ்மை, குற்றச்செயல்கள், போன்ற சமூக சீர்கேடுகளில் இருந்து திருப்தி அடையும் வகையில் விடுபடவில்லை. புலம் பெயர்ந்த எந்த நாடுமே, நமக்கு ஆலாத்தி எடுத்து, குங்குமம் பூசி வரவேற்பதில்லை. ஏதோ ஒருவகையில், அவர்களிடம் உள்ளதை பங்குப்போட்டு பறிக்கவந்தவர்கள்தான் நாம் என்ற வெறுப்பு எங்கும் இருக்கும். எந்த நாட்டிலும் இருக்கும். அதனால்தான் நாம் இன்னும் நமக்கான அடையாளத்தைத் தேடிக்கொண்டிருக்கின்றோம். நமக்கான மரியாதையை தேடிக்கொண்டிருக்கின்றோம். சமமான வாய்ப்பைத் தேடுகின்றோம். நீதியையும் நியாயத்தையும் தேடி போராடிக்கொண்டிருக்கின்றோம். உடல் பலத்தினால் இதையெல்லாம் போராடி வெற்றியடைய முடியாது. மன பலம் வேண்டும். கல்வியும், சமயோசித புத்தியும், அயராத உழைப்பும், ஒற்றுமையும் வேண்டும்.
நாடோடு ஒத்துவாழ் என்ற ஒளவையின் வாக்கு பொன்வாக்கு.
ஒன்றுபட்டால்தான் உண்டு வாழ்வு நூறாண்டுகளுக்கு முன்பு இந்த மண்ணிலே காலடி எடுத்து வைக்கும்போது, எதை நம்பி வந்தோம்? நம் சொந்த கைகளை நம்பித்தானே? உழைக்கும் கரங்கள், ஓயாது உழைக்கத் தயங்காத கரங்கள். ஒற்றுமைக்குக் கரம் கோர்க்கும் கரங்கள். தன்மானம் குலையாத, மனந்தளராத அந்தக் கரங்கள் இருந்தால் போதும், புலம்பெயர்ந்தாலும், நலம் உயர்ந்து,
பலம் உயர்ந்து;
சீலம் நிறைந்து,
குலம் மலர்ந்து
குதூகலமாய் வாழலாம். நம்மால் நம் தமிழுக்கும், நாம் போற்றும் கலாச்சாரத்திற்கும், நாம் வணங்கும் தெய்வத்திற்கும் பெருமை வரவேண்டும். இத்தனைச் சிந்தனைகளையும் தூண்டும் இந்த அரிய நூலை வாங்கி வாசியுங்கள். Dr.சுபாஷினிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். தொடரட்டும் உங்கள் சீரிய பணி.
நன்றி
டத்தோஸ்ரீ ஆ.தெய்வீகன்


