Wednesday, April 15, 2026

இன்று மாலை தலைநகரில் நடைபெறுகிறது!’மாறுவோம் மாற்றுவோம்!ஆசிரியம் போற்றுவோம்!!-நூல் வெளியீட்டு விழா!

மலேசியத் தமிழ் இலக்கியப் பூங்காவில் இதோ இன்னொரு மலர் மலரவிருக்கிறது.

இன்று மேத் திங்கள் நிறைவு நாள் சனிக்கிழமை, 31-5-2025,
மாலை 4:00 மணி அளவில் கோலாலம்பூர் துன்சம்பந்தன் மாளிகையின் டான்ஸ்ரீ கே ஆர் சோமா அரங்கில் மலரவிருக்கும் இந்த மலரின் சிந்தனை மணத்தை நுகர நூலாசிரியர் முனைவர் ராஜகோபால் அனைவரையும் அழைக்கிறார்.

தமிழ்ப்பள்ளி ஆசிரியர்,
இடைநிலைப் பள்ளி ஆசிரியர்,
ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி விரிவுரையாளர் என்றெல்லாம் வாழ்வை தொடர்ந்தவர், தற்பொழுது பணி ஓய்விற்குப்பின் நூலாசிரியராக புதிய பரிமாணம் கொண்டுள்ளார்

முனைவர் ராஜகோபால் புதிதாக இயற்றியுள்ள ‘மாறுவோம் மாற்றுவோம்: ஆசிரியம் போற்றுவோம் என்னும் இந்த நூலில், எதற்காக ஆசிரியர்கள்? ,பெற்றோர்கள் மற்றும் கல்விமான்கள் ஏன் மாறவேண்டும்; என்பதைப் பற்றி எல்லாம் மிகத் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நூலில் மொத்தம் 82 தலைப்புகளில் ஆசிரியரின் பல அரிய கருத்துகள் இடம்பெற்றிருக்கின்றன.

ஆசிரியர்கள் வகுப்பில் கற்றல்- கற்பித்தலில் ஈடுபடுவதோடு அதிகமாக 100 வகையான பணிகளை மேற்கொள்வதாகவும் இதனால் ஆசிரியர்கள் மனச்சிக்கலுக்கு ஆளாகி அவதிப்படுவதாகவும் இதன் தொடர்பில் கடந்த ஆண்டுகளில் ஏறக்குறைய 10,000 ஆசிரியர்கள்வரை கட்டம் கட்டமாக பணி விலகி இருப்பதையும் இத்தகைய சூழலை அரசு சமாளிக்க இயலாமல் அவதிப்படுவதாகவும் நூலாசிரியர் கருத்துரைக்கிறார்.

மாறாக, தற்பொழுது பள்ளி ஆசிரியர்கள் இளநிலை,முதுநிலை மற்றும் முனைவர் கல்வியை கற்று இருந்தாலும் மாணவர் அடைவுநிலை மிகவும் கவலை அளிப்பதாகக் கூறியுருக்கிறார்.

மாணவர்கள் அடிப்படை வாசிப்பிலும் எண்ணுதலிலும் ஆற்றல் குறைந்தவர்களாக இருக்கின்றனர் என்று கல்வித் துறை துணை அமைச்சர் 2023-இல் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையை தொடர்வது அவ்வளவு நல்லதல்ல என்றும் இந்த நிலையில் மாற்றம் ஏற்பட வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்து இருந்தார்.

இந்த நிலையில், கடந்த ஆண்டில் ஆசிரியர்கள் மிகவும் சிறப்பாக பணியாற்றுகினறனர் என்று கல்வி அமைச்சர் பாராட்டு தெரிவித்து இருந்தார்.

நம்பிக்கை வரிசையில் ஆசிரியர்கள் முதல் இடத்திலும் மருத்துவர்கள் இரண்டாவது இடத்திலும் இருப்பதாக அமைச்சர் வெகுவாக பாராட்டி இருந்தார்.

அதேவேளை சபா மாநிலத்தில் லாகாட் டத்து மாவட்டத்திலுள்ள இடைநிலைப் பள்ளியில் ஆசிரியர் ஒருவர் 7 மாதம்வரை வகுப்பிற்குச் செல்லாமல் இருந்த நிலையில் மாணவர்கள் எஸ்.பி.எம். கல்வியினை முடித்ததும் வழக்கறிஞர்கள் வழி நீதிமன்றத்தில் அந்த ஆங்கில மொழி ஆசிரியருக்கு எதிராக வெள்ளி ஒரு லட்சத்து 50 ஆயிரம் தண்டம் விதித்த வழக்கு பற்றியும் ஆசிரியர்களின் கவனத்திற்காக ஆதாரத்துடன் எழுதி இருக்கிறார்.

அதோடு தலைமையாசிரியர், ஆசிரியர்கள் மற்றும் பள்ளி பற்றிய தவறான கருத்துகளையும் சாடி இருக்கிறார்.

ஆசியர்கள் எதற்காக மாறவேண்டும் , எதற்காக
மாற்றங்காண வேண்டும் என்பது பற்றியும் இந்த நூலில் தெளிவாக எழுதி இருக்கிறார்.

தமிழ்ப்பள்ளி மாணவர் எண்ணிக்கையில் தொடரும் வீழ்ச்சி பற்றியும் ஆசிரியர்களின் பொறுப்பு,கடமை மற்றும் ஈடுபாடு பற்றியும் விவரித்திருக்கிறார்.
ஓய்வுபெற்ற ஆசிரியர்களும்,
தலைமையாசிரியர் களும்,கல்வியாளர்கள் தமிழ்ப்பள்ளிகளின் பாதுகாவலர்களாக விளங்க வேண்டிய அவசியத்தை முன்வைத்து எழுதியிருக்கிறார்.

2008இல் மொத்த தமிழ்ப்பள்ளி மாணவர் எண்ணிக்கை 1,05,000ஆக இருந்த வேளை, அது 2025இல் 72,456ஆக குறைந்துள்ளதை அனைத்துத்
தரப்பினரும் கவனத்தில் கொள்ள வேண்டுமென கூறி இருக்கிறார்.

ஆசிரியர்பணி சுமையா அல்லது சுகமா என்ற தலைப்பில் தன் கருத்துகளை மிக ஆழமாகவும் உருக்கமாகவும் எழுதியிருக்கிறார்.
அதோடு நில்லாமல், ஆசிரியர்களே மாற்றத்தின் வித்தகர்கள்; எனவே சமுதாயத்தில் முன்னோடியகவும்,வழிகாட்டியாகவும் விளங்கிட ஆசிரியர்கள் முதலில் தங்களை மாற்றிக்கொள்ள வேண்டுமென அறிவுருத்தி இருக்கிறார்.

மாற்றம் முதலில் ஆசிரியர்களிடமிருந்தே தொடங்க வேண்டுமென கருத்துரைக்கிறார்.

மேலும் ஆசிரியர்கள் தன்முனைப்போடு விளங்கிட அவரின் 37 வருட ஆசிரியர் பணியின் வெற்றி தோல்விகளைப் பற்றி இந்நூலில் விவரித்திருப்பது மற்ற ஆசிரியர்களுக்கு ஆக்கத்தையும் ஊக்கத்தையும் அளிக்கக்கூடும்.
.
நூலாசிரியர் ஒரு தோட்ட தமிழ்ப்பள்ளியில் கல்வி கற்று பல்கலைக்கழகத்தில் இளநிலை, முதுநிலை மற்றும் முனைவர் பட்டத்தை அரசாங்க உதவியுடன் கல்வி கற்று ஆசிரியர் பயிற்சி கல்லூரியில் ஒரு விரிவுரையாளராக பணியாற்றி 300க்கும் மேற்பட்ட கல்வி பயிலரங்குகளை மாணவர், ஆசிரியர், பெற்றோர் மற்றும் இளைஞர் அமைப்புகளுக்கும் நடத்தி இருப்பதோடு வங்காளதேசம் மற்றும் ஆப்கானிஸ்தான் கல்வியாளர்களுக்கும் பயிலரங்குகள் நடத்தியதையும் எழுதி இருக்கிறார்.

ஒரு தமிழ்ப்பள்ளியில் கல்விகற்று, இரண்டுமுறை மூன்றாம் தேர்வெழுதி,5 முறை எஸ்.டி.பி.எம். தேர்வெழுதி பல்கலைக்கழகம் சென்று முனைவர் பட்டம் வரை சென்று ஆசிரியர் பணியில் மாற்றங்களை செய்திருக்கும் பொழுது அனைத்து ஆசிரியர்களும் நிச்சயம் ஆசிரியர் பணியில் பல சாதனைகள் செய்ய இயலும் என்று எழுதி இருக்கிறார்.

மேலும் இந்த மாறுவோம் மாற்றுவோம்:ஆசிரியம் போற்றுவோம் என்ற நூலினை எழுதியதின் காரணத்தையும் இவர் விவரித்திருந்தார்.

மாணவர்கள் ஆசிரியர்கள் பெற்றோர் சமூக ஆர்வலர்கள் கல்வியாளர்கள் என சமூகத்தின் அனைத்து தரப்பினருக்குமான கருத்தை பதிவு செய்துள்ள இந்நூல் வெளியிட்டு விழாவில் அனைவரும் கலந்து சிறப்பிக்கும்படி நிகழ்ச்சி ஏற்பாட்டுக் குழுவினர் அழைக்கின்றனர்.

செய்தி சம்பந்தப்பட்ட உங்கள் கருத்தை பதிவு செய்ய "வாட்சாப்" பட்டனை அழுத்துங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

அதிகம் பகிரப்பட்டவை