Sunday, September 13, 2026

அடுத்தத் திரைப்படம் அருள்மாமணி ஆறுமுகம் பிள்ளையைப் பற்றியது!

ஏஸ் திரைப்பட இயக்குனர் ஆறுமுக குமார்!!

துணை இயக்குனர் செவன் துரைசாமி, விமலா பெருமாள், டெனிஸ் குமார்,, இயக்குனர் ஆறுமுகம்,, பிரிசிலியா, கார்த்திக், பப்போய்,, கிஷோர், ஒப்பனை கலைஞர் அணு,, சத்தீஷ் ஆகியோர்

மலேசியாவில் வள்ளலாக வாழ்ந்தவரும் தமிழ் நாளேட்டின்வழி தமிழ் வளர்த்த பெருமகனாருமான அருள்மாமணி ஆறுமுகம் பிள்ளையைப் பற்றி, தான் அடுத்த திரைப்படம் எடுக்க இருப்பதாக, தற்பொழுது திரைகண்டு வரும் ‘ஏஸ்’ திரைப்பட இயக்குனர் ஆறுமுக குமார் தெரிவித்தார்

நேற்றைய முன்தினம் ஞாயிற்றுக்கிழமை கோலாலம்பூர், ஜூனியர் குப்பண்ணா உணவகத்தில் திரண்ட செய்தியாளர்களிடையே அவர் இதை அறிவித்தார் .

அண்மையில் வெளியீடு கண்டு ரசிகர்களின் பேராதரவுடன் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் ‘ஏஸ்’ திரைப்பட இயக்குனர் ஆறு எனப்படும் ஆறுமுக குமார், தற்பொழுது திரைகண்டு ரசிகர்களின் உள்ளத்தை கொள்ளைக் கொண்டுவரும் இத்திரைப்படத் தயாரிப்பு தொடர்பில் இவருடன் இணைந்து செயல்பட்ட உள்நாட்டு கலைக் குடும்பத்தை சேர்ந்த ‘வீடு புரொடக்சன்ஸ்’ நிறுவனத்தின் உரிமையாளர் தினேஷ் குமார், படத்தில் நடித்த பிரிசில்லா, கலைஞர் கார்த்திக் உட்பட திரைப்பட தயாரிப்பு தொடர்பான நடிப்புக் கலைஞர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் உட்பட 10க்கும் மேற்பட்டோர் கடந்த ஞாயிற்றுக்கிழமை கோலாலம்பூரில் தமிழர்களின் பாரம்பரிய வர்த்தக வீதியான லெபோ அம்பாங்கில் உள்ள ஓர் உணவகத்தில் செய்தியாளர்களை சந்தித்தனர்.

ஆறுமுக குமார், பிரிசிலியா

கோடம்பாக்கத்து நட்சத்திர நாயகன் விஜய் சேதுபதி, நாயகியாக உள்நாட்டைச் சேர்ந்த ருக்மணி வசந்த், நகைச் சுவை நடிகர் யோகி பாபு மற்றும் ஏராளமான உள்நாட்டு கலைஞர்கள் நடித்துள்ள இந்தத் திரைப்படம் தற்பொழுது தமிழ் ரசிகர்களின் ஆதரவுடன் வெற்றிகரமாக திரை கண்டு வருகின்ற நிலையில் இதுவரை இந்த படத்தை பார்க்காத ரசிகர்கள், உடனே இந்தத் திரைப்படத்தை பார்த்து ஆதரவளிக்கும்படி தினேஷ்குமார் கேட்டுக்கொண்டார்

தமிழ் திரைப்படங்களில் வழக்கமாக மலேசியாவை காட்டும் பொழுது இரட்டைக் கோபுரத்தையும் பத்து மலை முருகன் சிலையையும் மட்டுமே காட்டுவார்கள்.

ஆனால் இந்த திரைப்படத்தில் மலேசியாவின் கூட்டு சமுதாயத்தை பிரதிபலிக்கின்ற காட்சிகள், சந்தை பகுதி உள்ளிட்ட காட்சிகளை எல்லாம் இணைத்து இருப்பதுடன் மலாய் வசனத்தை அப்படியே மொழிமாற்றம் செய்யாமல் இணைத்துள்ளது சிறப்பான வரவேற்பு பெற்றுள்ளதாக ஆறுமுக குமார் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

தினேஷ்குமாரும் ஆறுமுக குமாரும்

பக்கிட் மெர்தாஜாம் பட்டணத்தில் உள்ள ஆறுமுகம் பிள்ளை சாலை உட்பட பேரா மாநிலத்தின் பெரும்பாலான இடங்கள் இப்படத்தில் இடம் பெற்றுள்ளன.

அடுக்ககக் குடியிருப்பில் வசிக்கின்ற நாயகன், தரை வீட்டில் வசிக்கின்ற நாயகி ஆகியோரை மையப்படுத்தி, காதல் அன்பு பாசம் குற்றம் ஆகியக் கூறுகளை உள்ளடக்கிய கதையின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த திரைப்படம் தமிழ்நாட்டின் பட்டினம்பாக்க மீனவர்களைப் போல இங்கேயும் உள்ளூரில் சீன மீனவர்கள் இந்த திரைப்படத்தில் இடம் பெற்றுள்ளனர்.

உள்ளூர் கலைஞர்கள் அதிகமாக இடம் பெற்றுள்ள இந்த திரைப்பட படப்பிடிப்பின் போது ஈப்போ மாநிலத்தைச் சேர்ந்த பொதுமக்கள் மிகவும் ஒத்துழைப்புடனும் திரைப்பட தயாரிப்பு குழுவினருக்கு இடையூறு ஏற்படாத வகையிலும் பக்குவமாக நடந்து கொண்டது பாராட்டிற்குரியது என்று ஆறுமுக குமாரும் தினேஷ்குமாரும் ஒருமுகமாகத் தெரிவித்தனர்.

இந்தத் திரைப்படத்தின் இயக்குனர், தயாரிப்பாளர், இசையமைப்பாளர் நடிகர்கள் ஆகியோர் மும்பை, ஆந்திரப் பிரதேசம், தமிழ்நாடு, மலேசியா ஆகிய பகுதிகளைச் சேர்ந்த கலைஞர்கள், தொழில்நுட்பர்கள் என பல்வேறு தரப்பினர் இணைந்து உருவாக்கிய இந்தத் திரைப்படம் தந்த ஊக்கத்தில் விரைவில் அடுத்தத் திரைப்படத்தை தயாரிக்க இருப்பதாகவும் அது, அநேகமாக வள்ளலும் அருள்மாமணி என்று அழைக்கப்பட்டவருமான ஆறுமுகம் பிள்ளையை பற்றியதாக இருக்கும் என்று இந்தச் செய்தியாளர்க் கூட்டத்தின் பொழுது, ஆறுமுக குமார் தெரிவித்தார்.

செய்தி சம்பந்தப்பட்ட உங்கள் கருத்தை பதிவு செய்ய "வாட்சாப்" பட்டனை அழுத்துங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

அதிகம் பகிரப்பட்டவை