Monday, April 20, 2026

செருப்பால் அடிக்கும் வழக்கம்: கற்காலத்தில் உழலும் தமிழ்ச் சமூகம் தற்காலத்திற்கு வருவது எப்போது?

பணி இடை நீக்கம் செய்யப்பட்ட அதிகாரி மாரிமுத்து

ஓரு தமிழனுக்கோ அல்லது தமிழச்சிக்கோ ஆத்திரம் எல்லை மீறினால், “செருப்பால் அடிப்பேன்” என்பது வழக்கு; அதையும் கடந்து நிலைமை இன்னமும் முறுக்கேறினால், உடனே தான் அணிந்திருக்கும் காலணி-யால் எதிராலியை அடிப்பதை வழக்க-மாகக் கொண்டிருக்கும் கேடுகெட்டத் தனம் இன்னமும் தமிழ்ச் சமூகத்தில் புரையோடிப் போயிருக்கிறது.

அவ்வாறு சண்டையிடும் இருவரில் ஒருவர், மற்றவரைவிட பதவி அல்லது அந்தஸ்தினால் உயர்ந்தவர் என்றால், செருப்பால் அடிக்கும் செருக்கு இயல்-பாகவே இருக்கும்; ஒருவேளை, ஒருவரைவிட இன்னொருவர் உயர்ச் சாதியைச் சேர்ந்தவர் என்னும் நிலை இருந்தால், செருப்பால் அடிக்கும் இழிகுணம் இன்னும் சற்று தூக்கலாக இருக்கும்.

எந்தச் சாதிக்காரணாக இருந்தாலும், எல்லாப் பயல்களும் நீர்க்குடித்து நீர்த்தாரைவழியே நீர்க் கழிப்பவன்தான். அதற்கும் மேலாக, ஒருநாள் தீக்கிரை-யாக வேண்டியிருக்கும்; அல்லது இலட்சக் கணக்கான புழுக்களுக்கு ஒரு வாரமோ அல்லது பத்து நாட்களுக்கோ அடைக்கலம் கொடுக்கும் உடலமாக உருமாற வேண்டியிருக்கும். அதற்குள், அழுகிய தசையும் தீர்ந்துவிடும்; தாங்கவொண்ணா நாற்றமடிக்கும் நிணநீரும் வற்றிவிடும்.

இதுதான் ஒரு சராசரி மனிதனின் முடிவு!

ஒரு மனிதனுக்கு ஆத்திரம் வந்தால், அதற்கு ஆயிரம் காரணம் இருக்கும். கோபம் கூடாது; உடலுக்கும் மனதுக்கும் கேடு பயக்கும்; இரத்தக் கொதிப்பு அதிகரிக்கும்; அதனால், கோபத்தைக் குறைக்க வேண்டும் அல்லது தவிர்க்க வேண்டும் என்பது முழுமூடத் தனம்.

அப்படி கோபம் எழும்போது, இடிபோல முழங்கலாமேத் தவிர, மின்னலைப் போல தீய்க்கவும் அழிக்கவும் முற்படக்-கூடாது; அதனால், இரு தரப்புக்குமே பாதகம் விளையலாம்.

அதேவேளை, ஒரு மனிதனுக்கு கோபம் ஏற்படும்படி சொல்லாலும் செயலாலும் நாணயத்தாலும் நடந்துகொள்ளக் கூடாது என்று நன்னெறி சார்ந்து, இதுவரை எங்கனும் எவரும் சொல்லி, அறிந்ததில்லை.

காது வலிக்கு சிகிச்சைப் பெற்றுவரும் ஓட்டுநர் கணேசன்

தவிர்க்க முடியாமல், எவரோ இருவருக்கிடையில் சச்சரவு முற்றி சண்டை ஏற்பட்டால், ‘முடிந்தவன் அடித்தான்; முடியாதாவன் கடித்தான்’ என்பதைப் போல ஒற்றைக்கு ஒற்றை கைகளால் பதம் பார்த்துக் கொள்ளலாம்; அல்லது கம்பால்-கட்டையால் அடித்துக் கொள்ளலாம்; அதன் விளைவு கடுமையாகவும் இருக்கலாம்.

இதை விடுத்து, செருப்பால் அடிப்பதால் என்ன பயன்? தொப்பென்று சத்தம் கேட்குமேயன்றி காயமேதும் ஏற்படாது; இலேசாக வலி ஏற்படலாம் அவ்வளவுதான்!

ஆனாலும், செருப்பால் அடிக்கும் புத்தி எதனால் எழுகிறது என்றால், அது மட்டமான பொருள்; எந்நேரமும் காலில் இருக்கும் என்பதால், அத்தகைய செருப்பால் ஒருவரை அடிப்பதால், அவரை இழிவுபடுத்தி விட்டதாக, மனிதனின் இறுமாப்பு குணம் கர்வம் கொள்கிறது.

இதன் அடிப்படையில்தானோ என்னவோ, மதுரையைச் சேர்ந்த ஒருவர், அதே மதுரையைச் சேர்ந்த இன்னொருவரை செருப்பால் அடித்துவிட்டு, இப்பொழுது உலக அளவில் அம்பலப்பட்டு நிற்கிறார்.

கணேசனுக்கு ஆதரவு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட சக ஊழியர்கள்

அடிவாங்கியவர் தாராபுரம் பணிமனையைச் சேர்ந்த ஓட்டுநர் கணேசன்; அடித்தவர், வட்டார அளவில் போக்குவரத்துத் துறை உதவி மேலாளராக இருந்த மாரிமுத்து; தற்பொழுது அவர், தமிழ் நாட்டரசின் போக்குவரத்துத் துறை, மதுரை மண்டல நிருவாக இயக்குநர் இளங்கோவனால் பணி இடைநீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்.

இந்த நிலையில், தன்னுடைய செயலுக்காக வருத்தம் தெரிவித்தும் தமிழ் நாட்டு அரசுக்கும் போக்குவரத்துத் துறைக்கும் ஏற்பட்ட பங்கத்திற்காக மன்னிப்பு கேட்டும் காணொளி வெளியிட்டிருக்கிறார் மாரிமுத்து.

ஒன்றுமட்டும் உறுதி; எங்கு நியாயமும் நீதியும் இல்லையோ, அங்கு வன்முறை வெடிக்கும்.

செய்தி சம்பந்தப்பட்ட உங்கள் கருத்தை பதிவு செய்ய "வாட்சாப்" பட்டனை அழுத்துங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

அதிகம் பகிரப்பட்டவை