Monday, April 20, 2026

தந்தையர் நாள் தொடர்பில் நாளை பத்துமலையில் செடி-மரக் கன்றுகள் அன்பளிப்பு

இவ்வாண்டு தந்தையர் நாள் தொடர்பில் நாளை ஜூன் 15 ஞாயிற்றுக்கிழமை காலை 8:00இலிருந்து 10:00 மணி வரை மரக்கன்றுகளையும் செடிக் கன்றுகளையும் கட்டணம் இன்றி வழங்குவதற்கு ஒரு புலன குழுவினர் ஏற்பாடு செய்து வருகின்றனர்.

Father’s Day என்னும் புலனக் குழுவினர் இயற்கை விவசாயம், கூட்டுறவு, நட்புணர்வு ஆகிய சிந்தனையின் அடிப்படையில் அண்மைக்காலமாக சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர்.

ஏறக்குறைய 50 பேர் இடம்பெற்றுள்ள

இந்தக் குழுவினர் அன்றாடம் சமையலுக்கு பயன்படுத்துகின்ற அரிசி கழுவிய நீர், முட்டை தோல், காய்கறிக் கழிவுகள் ஆகியவற்றை எப்படி எல்லாம் இயற்கை உரமாக பயன்படுத்துவது என்பதை எல்லாம் ஒருவருக்கொருவர் பகிர்ந்து ஒவ்வொருவர் வீட்டிலும் கட்டாயம் செடி கொடிகள் உள்ளிட்ட தாவரப் பயிர்களை வளர்க்க வேண்டும் என்ற சிந்தனையை ஊக்குவித்து வருகின்றனர்.

அப்படியே தாங்கள் விளைவிக்கின்ற கறி காய்களையும் ஒருவருக்கு ஒருவர் அளித்து வருகின்றனர்.

இந்தக் குழுவினர் தந்தையர் நாள் அன்று செடி, மரக் கன்றுகளை பொதுமக்களுக்கு கட்டணமின்றி வழங்குவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளனர்.

பத்து மலை, திருமுருகன் ஆலய வாகன நிறுத்துமிட வளாகத்தில் மூன்றாவது ஆண்டாக இத்தகைய தொண்டை அவர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

தாங்கள் அமைத்துள்ள பந்தலுக்கு வருகின்றவர்களுக்கு சிற்றுண்டியையும் அளித்து பொதுமக்கள் விரும்புகின்ற மரக்கன்றுகளையும் கட்டணம் இன்றி விநியோகித்து வருகின்றனர்.

சிறிய அளவிலான தொண்டாக இருந்தாலும் இது தேசிய நலன் சார்ந்தது; அரசாங்கம் முன்னெடுக்கின்ற பசுமைத் திட்டத்திற்கு உறுதுணையாக இருக்கும் வகையில் இந்தப் புலன குழுமத்தில் இடம்பெற்றிருக்கின்ற அன்பர்கள் தாங்களே பணத்தை செலவிட்டு இன்னும் சிலர் நன்கொடையாக பெற்று விருப்பமானவர்களுக்கு விருப்பமான செடி மற்றும் மரக் கன்றுகளை அன்பளிப்பாக வழங்குகின்றனர்.

கடந்த இரு ஆண்டுகளாக இந்த பணியை வெற்றிகரமாக செய்த இந்த குழுவினர், நாளையும் அதே வண்ணம் செயல்பட இருக்கின்றனர்.

சுற்று வட்டத்தில் இருக்கின்ற பொதுமக்களும் நண்பர்களும் இந்த நிகழ்வில் கலந்து அவர்களை பாராட்டி அவர்களிடமிருந்து தேவையான செடி- மரக்கன்றுகளை பெற்று பயனடையும்படி கேட்டுக்கொள்ளப் படுகின்றனர்.

செய்தி சம்பந்தப்பட்ட உங்கள் கருத்தை பதிவு செய்ய "வாட்சாப்" பட்டனை அழுத்துங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

அதிகம் பகிரப்பட்டவை