
நாட்டின் தனியார் முன்னிலைப் பல்கலைக்கழகங்களில் ஒன்றான எய்ம்ஸ்ட் பல்கலைக்கழகத்தில் 2024-2025 கல்வி ஆண்டில், ஏழு புலங்கள் சார்ந்து பல்வேறு பிரிவுகளில் தங்களின் உயர்க்கல்வியை முடித்த 829 மாணவர்கள் இன்று, பல்கலைக்கழக வேந்தர் டான்ஸ்ரீ ச.விக்னேஸ்வரன், இணை வேந்தர் டத்தோஸ்ரீ மு.சரவணன் ஆகியோர் முன்னிலையில் பட்டம் பெற்றனர்.
வாழ்க்கையின் அடுத்தக்கட்டத்தை எட்டயிருக்கும் இவர்கள் அனைவரையும் குமரி நல்லாள் வாழ்த்துகிறாள் முதற்கண்!

பல்கலைக்கழக வாரிய உறுப்பினர்கள், பேராசிரியர்கள்-விரிவுரையாளர்கள் உள்ளிட்ட அலுவலர்கள், பட்டம்பெற்ற மாணவர்கள்-பெற்றோர்கள்-நட்புவட்டத்தினர், நாளைய பட்டதாரிகள், அழைக்கப்பட்ட சிறப்பு பிரமுகர்கள், செய்தியாளர்கள், மஇகா தலைவர்கள் என ஆயிரக் கணக்கானோர் திரண்டதால், பல்கலைக்கழக வளாகம் இன்று திக்குமுக்காடும் நிலையை எய்தியது.

பட்டம்பெற்ற 829 பேரில், மருத்துவ புலம் சார்ந்து 167 மாணவர்கள், பல் மருத்துவத் துறையைச் சேர்ந்த 76 மாணவர்கள், பயன்பாட்டு அறிவியல்- Applied Sciences சார்பில் 50 பேர், சுகாதாரத் தொழில் சார்ந்த அடிப்படை தீவிர சிகிச்சை தாதிமைக் கல்வி மற்றும் அடிப்படை சிறுநீரக நர்சிங் படிப்பு தொடர்பில் 247 பேர், பொறியியல்-கணினி தொழில்நுட்பப் பிரிவில் 20 மாணவர்கள், வர்த்தகம்- வர்த்தக நிருவாகம் சார்ந்து 161 பேருடன் முதுகலைப்பட்டம் தொடர்பில் 22 பேர், முனைவர் பட்டம் பெற்ற 10 பேரும் இன்றைய பட்டமளிப்பு விழாவில் பங்குகொண்டனர்.

இந்தியா, பாகிஸ்தான், சூடான், நைஜீரிய நாடுகளைச் சேர்ந்த மாணவர்களும் தங்களின் உயர்க்கல்விப் பட்டத்தைப் பெற்றது, எய்ம்ஸ்ட் பல்கலைக்கழகம் பன்னாட்டுத் தரத்தைப் பெற்றுள்ளதற்கு தக்க சான்றாகும்.
குறிப்பாக, இன்றைய பட்டமளிப்பு விழாவில், யூ தான் பெங் தங்கப் பதக்கம் வென்று எய்ம்ஸ்ட் பல்கலைக்கழகத்திற்கும் குடும்பத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார்.

அறிவியல் துறை இளங்கலை பட்டப்படிப்பு BSc(Hons) in Biotechnology programme மாணவியான இவர், பினாங்கு ஜார்ஜ் டௌனைச் சேர்ந்தவர்.
(இன்னும் வரும்)


