
மெந்தகாப், ஜூன் 23 –
பகாங்கில் உள்ள தமிழ்ப்பள்ளிகளில் மாணவர் பற்றாக்குறை குறித்த பிரச்சினைகளை விவாதிக்க, மலேசிய இந்தியர் உருமாற்ற- முன்னேற்ற இயக்கம் (MIDTO) அமைப்பால் ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு முக்கிய சந்திப்பு நேற்று மெந்தகாப்பில் நடைபெற்றது.
பெற்றோர் ஆசிரியர் சங்கம் (PIBG) மற்றும் பள்ளி வாரியக் குழு (LPS) ஆகியவற்றுடன் நடைபெற்ற இச்சந்திப்பு, நாட்டின் கல்வி அமைப்பில் தமிழ்ப்பள்ளிகளின் நிலையை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி முன்னாள் விரிவுரையாளர் ராஜகோபால், தமிழ்ப்பள்ளி ஆசிரியர்கள் உட்பட இதில் கலந்து கொண்ட அனைவரும் அனைத்துப் பெற்றோரும் தங்கள் பிள்ளைகளை தமிழ்ப்பள்ளிகளுக்கு அனுப்புமாறு வலியுறுத்தினார்.
மேலும், இந்தப் பள்ளிகளின் தொடர்ச்சியைப் பாதுகாக்குமாறு கூட்டத்தில் கலந்துகொண்டவர்களுக்கு அவர் ஊக்கமும் ஆதரவும் வழங்கினார்.

ஆசிரியர்கள் அவரவரின் பணிகளை அறப் பணியாகக் கருதி இறைப்பணியாக அர்ப்பணிக்க வேண்டும் என்றார்.
பல பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர்களும் கலந்து கொண்டு, தமிழ்ப்பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கான ஆக்கபூர்வமான கருத்துக்களை முன்வைத்தனர்.
தமிழ்ப்பள்ளிகளின் பிம்பத்தை உயர்த்துவதற்கும் நாட்டின் கல்வி அமைப்பில் தமிழ்ப்பள்ளிகளின் இருப்பை நிலைநாட்டுவதற்கும் பல விசயங்கள் விவாதிக்கப்பட்டன.
இச்சந்திப்பை ஏற்பாடு செய்த MIDTO அமைப்பின் தலைவர், ஆர். ரவிச்சந்தர், விரைவில் அடுத்த கட்டமாக ஆசிரியர்கள் மற்றும் தலைமையாசிரியர்களுடன் மற்றொரு சந்திப்பை நடத்த திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்தார். இந்தச் சந்திப்பு, தேவையான அனைத்தையும் விவாதிப்பதற்கும் ஏற்பாடுகளை செய்வதற்கும் மேலும் மாவட்ட கல்வி அலுவலகம் (PPD), மாநில கல்வித் துறை (JPN) மற்றும் கல்வி அமைச்சு (KPM) ஆகியவற்றுடன் இணைந்து செயல்படுவதற்கும் திட்டமிட்டுள்ளது.

MIDTO அமைப்பின் துணைத் தலைவரும் வழக்கறிஞருமான பாலமுரளி, இச்சந்திப்பின் நெறியாளராக சிறப்பாகப் பணியாற்றினார்.
இத்திட்டத்தை நிர்வகிக்க உதவிய தெமர்லோ மாவட்ட இந்திய அமைப்புகளின் கூட்டமைப்பின் தலைவர் புருஷோத்தமனுக்கு ஏற்பாட்டாளர்கள் நன்றியைத் தெரிவித்தனர். பகாங் மாநிலத் தலைமையாசிரியர் சங்கத்தின் (MGB) துணைத் தலைவர் பாலமுருகன் சங்கத்தின் சார்பில் கலந்துகொண்டார்.
பகாங் மாநிலம் முழுவதும் உள்ள தமிழ்ப்பள்ளிகளின் பள்ளி வாரியக் குழு மற்றும் பெற்றோர் ஆசிரியர் சங்கங்களின் சுமார் 20 முக்கிய தலைவர்கள் இதில் கலந்து கொண்டனர். இவர்களில் டத்தோ முருகையா, சரவணன், சூசைநாதன், பாலமுருகன், மற்றும் சின்னையா உட்பட பலரும் இந்நிகழ்ச்சியில் பங்குக் கொண்டனர்.


