Saturday, April 11, 2026

ரிஷிகுமார் வடிவேலு இந்து தரும மாமன்றத்தின் புதிய தலைவர்!

தவத்திரு பாலயோகி சுவாமிகள், ஆன்மிகப்பெட்டகம் என்.எஸ். இராஜேந்திரன் வாழ்த்து!!

மலேசிய இந்து தரும மாமன்றத்தின் புதிய தலைவராக ரிஷிகுமார் வடிவேலு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். மாமன்றத்தின் 43-ஆவது தேசியப் பேராளர் மாநாடு நேற்று சனிக்கிழமை, சைபர்ஜெயா பல்கலைக்கழகத்தில் உள்ள யு.ஒ.சி. கிராண்ட் மண்டபத்தில் மாமன்றத்தின் மேநாள் தேசியத் தலைவர் இராதாகிருஷ்ணன் அழகுமலை தலைமையில் நடைபெற்றது.

அதில், இந்து தரும மாமன்றத்தின் மூத்தோர் பேராயம், வ.ரிஷிக்குமாரை மாமன்றத்தின் புதிய தலைவராகத் தேர்ந்தெடுத்து அறிவித்துள்ளது. அந்த வகையில், மலேசிய இந்து தரும மாமன்றத்தின் 4-ஆவது தேசியத் தலைவராக உயர்ந்து சாதனைப் படைத்துள்ளார் ரிஷிக்குமார்.

மலேசியாவில் உள்ள இந்து சமய அமைப்புகளில் அணி என்னும் பிணி அண்டாத, தேர்தல் சச்சரவு கடுகளவும் இல்லாத, சீரான முறையில் அமைதியான ஆன்மிகப் பணியுடன் பயணிக்கும் ஒரே அமைப்பு மலேசிய இந்து தரும மாமன்றமாகும்.

இந்த மாமன்றத்தின் இரண்டாவது தலைவரும் தலைசிறந்த கல்வியாளருமான முனைவர் டத்தோ என்.எஸ். இராஜேந்திரன், ரிஷிக்குமாரை வெகுவாகப் பாராட்டினார்.

1982-இல் கர்னல் கரு.சாத்தையா தொடங்கிய இந்த மாமன்றத்தை 2001ஆம் ஆண்டுவரை அவரே வழிநடத்தினார். அவருக்குப்பின் என்.எஸ். இராஜேந்திரன் இந்த மாமன்றத்திற்கு 12 ஆண்டுகள் தலைமையேற்றிருந்தார்.

சாத்தையா காலம், இந்த மாமன்றத்திற்கு அடிப்படைக் கட்டமைப்பை உருவாக்கியது என்றால், இந்த மாமன்றத்திற்கு நவீனத் தன்மையை ஏற்படுத்தியது இராஜேந்திரனின் தலைமைத்துவம் என்று துணிந்து கூறலாம்; இராஜேந்திரனின் தலைமைத்துவத்தில் அவருக்கு அடுத்தக்கட்டத் தலைவராக விளங்கியதுடன், அவர் வகுத்த சமய மறுமலர்ச்சித் திட்டங்களை செம்மையாக முன்னிலைப்படுத்திய அ.இராதாகிருஷ்ணனின் பாங்கறிந்து, அவரிடமே தலைமைப் பொறுப்பை ஒப்படைத்தார் இராஜேந்திரன்.

இராஜேந்திரனைப் போலவே இராதாகிருஷ்ணனும் இந்து தரும மாமன்றத்தை 12 ஆண்டுகள் வழிநடத்திவந்த நிலையில், இந்த சமய அமைப்பின் நேற்றைய 43-ஆவது தேசியப் பேராளர் மாநாட்டில் புதிய தலைமை மாற்றம் அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த காலத்தைப் போலவே, இனி வருங்காலத்திலும் மலேசிய இந்து தரும மாமன்றம் ரிஷிக்குமார் தலைமையில் சீரும் சிறப்புமாக இயங்கும் என்ற நம்பிக்கையையும் ரிஷிக்குமாருக்கு பாராட்டையும் ஒருசேர தெரிவித்தார் டத்தோ என்.எஸ். இராஜேந்திரன்.

அண்மைக் காலமாக பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதைத் தவிர்த்து வந்த தவத்திரு பாலயோகி சுவாமிகள், இந்து தர்ம மாமன்றத்தின் நேற்றைய பேராளர்க் கூட்டத்தில் கலந்து கொண்டதுடன், இந்த மாமன்றத்தின் மூத்தோர் பேராயத்தின் உறுப்பினர்களில் ஒருவருமான இவர், புதிய தலைமையை அமைதியான முறையில் உருவாக்கி, அத்தலைமைக்கு பாராட்டுப் பத்திரமும் வாசித்திருக்கிறார்.

1982-இல் கோலாலம்பூர் ஸ்தாப்பாக் அருள்மிகு ஐயனார் கோயில் வளாகத்தில், கரு சாத்தையா இந்து தரும மாமன்றத்தை தொடக்கிவைத்த காட்சி இன்னமும் பசுமையாக நினைவில் இருப்பதாகத் தெரிவித்த அருள்மிகு திருமுருகன் திருவாக்கு திருபீடத்தின் அதிபருமான தவத்திரு பாலயோகி சுவாமிகள்,

60-க்கும் மேற்பட்ட சமய அமைப்புகளை சிறப்பிக்கும் வகையில் அவற்றின் பொறுப்பாளர்களை நேற்றைய பேராளர்க் கூட்டத்திற்கு அழைத்து சிறப்பு செய்தது; அதைப்போல ஆலயத் தலைவர்களை தேசிய அளவில் வரவழைத்து அவர்களுக்கும் பாராட்டு தெரிவித்தது என, இந்து சமய ஒருங்கிணைப்பை பல்வகையிலும் மேற்கொள்ளும் இந்து தரும மாமன்றத்தின் பணி பாராட்டிற்குரியது என்று கூறினார்.

இந்த மாமன்றத்திற்கு உரிய ஆலோசனை வழங்குவதிலும் தலைமை மாற்றத்தை உருவாக்குவதிலும் இந்த மாமன்றம் தனக்குத் தானே உருவாக்கிக் கொண்ட மூத்தோர் பேராயம் சிறப்பான பங்களிப்பை வழங்கி வருகிறது; அந்த வகையில், சிறிய அளவில்கூட சச்சரவோ மாச்சரியமோ தலைமைத்துவ சிக்கலோ இன்றி அமைதியான முறையில் சமய வளர்ச்சியிலும் குறிப்பாக சமயக் கல்வி மறுமலர்ச்சியிலும் முழுமுனைப்பு காட்டி வருகிறது மலேசிய இந்து தரும மாமன்றம்.

புதிதாக தலைமையேற்றுள்ள ரிஷிக்குமார், தன்மீது நம்பிக்கை வைத்து புதிய தலைமைப் பொறுப்பை வழங்கியுள்ள மூத்தோர் பேராயத்திற்கு நன்றி தெரிவித்துக்கொண்டார்.

இந்து தரும மாமன்றத்தின் தலையாயக் கொள்கையான சமயக் கல்வி வளர்ச்சியில், மூத்தோரும் முன்னோரும் வகுத்துத் தந்துள்ள பாதையில் வழுவாமல் இன்னும் முனைப்புடன் செயலாற்ற இருப்பதாக ரிஷிக்குமார் தெரிவித்தார்.

குறிப்பாக, பள்ளிப்பாடத் திட்டத்தில் சமயக் கல்வியை இணைப்பதில் தொடர்ந்து முயற்சி கொள்ளும் அதேவேளை, இதன் தொடர்பில் அரசாங்கத்துடன் தொடர்ந்து பேச்சு நடத்துவோம்; நாட்டில் உள்ள அனைத்து இந்து மக்களும் தங்களின் சமயநெறியில் இன்னும் மேம்பாடு காண அயராது பாடுபடுவோம்; சமய ஆசிரியர்களை உருவாக்குவதற்கான தொடர் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்; AI-செயற்கை நுண்ணறிவுத் தொழில் நுட்பத்திற்கு ஏற்ப சமயப் பாடத்திட்டத்தில் புதிய மறுமலர்ச்சியை ஏற்படுத்துவோம்; புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மத்திய நிருவாகக் குழுவுடன் ஒருங்கிணைந்து செயல்பட்டு மலேசியாவில் இந்து சமயத்திற்கு புதிய விடியலை ஏற்படுத்துவோம் என்றும் இதன் தொடர்பில் அனைத்துத் தரப்பினரின் ஒத்துழைப்பையும் ஒருங்கிணைப்பையும் எதிர்பார்ப்பதாக இந்து தரும மாமன்றத்தின் புதிய தலைவர் வ.ரிஷிக்குமார் தெரிவித்தார்.

செய்தி சம்பந்தப்பட்ட உங்கள் கருத்தை பதிவு செய்ய "வாட்சாப்" பட்டனை அழுத்துங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

அதிகம் பகிரப்பட்டவை