
பிரதமர், நீதித்துறையின் உச்சப் பொறுப்பில் அமர்த்துவதற்காக தான் கங்கணம் கொண்டுள்ள சம்பந்தப்பட்ட கூட்டரசு நீதிமன்ற நீதிபதியின் நடத்தையை விசாரிக்க கூட்டாட்சி அரசியலமைப்பின் பிரிவு 125(3)இன்படி, தன் அதிகாரத்தைப் பயன்படுத்தி, ஒரு தீர்ப்பாயத்தை நிறுவுமாறு மாட்சிமைக்குரிய மாமன்னரிடம் பரிந்துரை செய்வாரா என்று மலேசிய முன்னேற்றக் கட்சி-எம்ஏபி தேசியத் தலைவர் பொன்.வேதமூர்த்தி, பெஜுவாங் கட்சி சட்ட ஆலோசகர் ரஃபிக் ரஷிட் இருவரும் கூட்டாக வெளியிட்ட அறிக்கையில் வினவியுள்ளனர்..
கூட்டரசு நீதிமன்ற நீதிபதி ஒருவர்மீது சுமத்தப்பட்டுள்ள கடுமையான குற்றச்சாட்டுகள் குறித்து பொதுமக்கள் ஆதங்கம் வெளிப்படுத்தி வருகின்றனர்; சம்பந்தப்பட்ட கூட்டரசு நீதிபதியின் அறிவுறுத்தலின்படி செய்யப்பட்ட போலீஸ் புகார் மூலம் இந்த விவகாரம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அந்தப் புகாரில், அந்நீதிபதி அட்டர்னி ஜெனரலாகப் பணியாற்றியபோது, நீதித்துறை சுதந்திரம் மற்றும் அரசியலமைப்பு சாசனத்தின் மேன்மைக்கு சிறுமை ஏற்படுவதை மறைமுகமாக ஆதரிப்பதைப்போல தெரிகிறது; அதாவது,
நீதித்துறையிடமிருந்து எதிர்பார்க்கப்படும் நேர்மை மற்றும் பாரபட்சமற்ற தன்மையை நிலைநிறுத்தத் தவறுதல்;
ஒரு குறிப்பிட்ட தரப்பினருக்கு சாதகமான தீர்ப்பை வழங்க முன்னாள் தலைமை நீதிபதியை (துன் தலைமை நீதிபதி) வசப்படுத்த மேற்கொண்ட முயற்சி;
ஒரு வழக்கை, தன் விருப்பத்திற்க ஏற்ப முன்னெடுக்காத உயர் நீதிமன்ற நீதிபதி ஒருவரை இடமாற்றம் செய்ய முன்னாள் தலைமை நீதிபதிமீது (துன் தலைமை நீதிபதி) ஆதிக்கம் அல்லது செல்வாக்கு செலுத்த மேற்கொண்ட முயற்சி ஆகியன அந்தப் போலீஸ் புகாரில் சம்பந்தப்பட்டுள்ளன.

இந்தக் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால், அவை நீதித்துறைமீது மேற்கொள்ளப்பட்ட கடுமையான-தவறான நடத்தையை பிரதிபலிக்கும்; மேலும், தண்டனைச் சட்டத்தின்படி, கடும்குற்றமாக வகைப்படுத்தப் படலாம். ஏனெனில், அவை நீதியின் நோக்கத்தைத் திசைதிருப்பவும் நீதித்துறையின் சுதந்திரத்தில் தலையிடவும் முயற்சிப்பதைக் குறிக்கின்றன. இத்தகைய குற்றச்சாட்டுகளின் மோசமான தன்மையைக் கடந்துபோக முடியாது என்று வழக்கறிஞர்களான இந்த இருவரும் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.
நீதித் துறை தொடர்பாக வெளிப்பட்டுள்ள இந்தக் கடும்போக்கின் அடுத்தக் கட்டத்தை அறிய பொதுமக்கள் பெரிதும் விரும்புகின்றனர்:
பிரதமர் அன்வார் இப்ராகிம் தன்னை ஒரு சீர்திருத்தவாதியாகவும் சட்டத்தின் ஆட்சிக்கான தீவிர ஆதரவாளராகவும் தொடர்ந்து நிலைநிறுத்திக் கொண்டுள்ளார். அப்படிப்பட்டவர், தான் வலுவாக ஆதரிக்கும் கொள்கை-யின்படி செயல்படுவாரா அல்லது கூட்டரசு நீதிமன்றத்திற்கு தான் பரிந்துரைக்க எண்ணியிருப்பவரைப் பாதுகாக்க இந்த விசயத்தை கண்டுகொள்ளாமல் புறந்தள்ளுவாரா என்னும் கேள்வி எழுவதாக பொன்.வேதமூர்த்தியும் ரஃபிக்கும் மேலும் கேள்வி எழுப்பியுள்ளனர்.
தவிர, கூட்டரசு நீதிமன்றம் மற்றும் மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் முக்கிய காலியிடங்களை நிரப்ப பிரதமர் தாமதப்படுத்துவது அல்லது மறுப்பது பொதுமக்களின் சந்தேகத்தை மேலும் அதிகரிக்கிறது; கடுமையான நீதித்துறை தேவை இருந்தபோதிலும் இந்த குறிப்பிடத்தக்க தாமதம், அரசியல் நோக்கத்திற்காக நிறுத்தி வைக்கப்படுகின்றனவா அல்லது பிரதமருக்கு அரசியல் ரீதியாக மிகவும் இணக்கமான நபர்களை நியமிக்க பொருத்தமான தருணம் எதிர்பார்க்கப்படுகிறதோ என்னும் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.
நிருவாக நிறுவன ஒருமைப்பாடு மற்றும் ஜனநாயக முதிர்ச்சியை நோக்கிய ஒரு நாட்டில், மக்கள் தெளிவான, விரைவான நடவடிக்கையைக் எதிர்பார்க்கின்றனர்; அதற்கு ஏதுவாக, பிரதமர் நீண்ட காலமாக முன்வைக்கும் சீர்திருத்தம் மற்றும் வெளிப்படைத்தன்மையை முன்னிலைப்படுத்தப் போகிறாரா அல்லது அதிலிருந்து தவறுகிறாரா என்பதை நாடு விரைவில் திர்மானிக்கும்படி பிரதமரின் முடிவு இருக்கப்போகிறது என்பதை பொன்.வேதமூர்த்தியும் ரஃபிக் ரஷீட்டும் முத்தாய்ப்பாகத் தெரிவித்துள்ளனர்.


