Monday, May 25, 2026

வாகனங்களை இழுப்பதில் – கடனை வசூலிப்பதில் வங்கிகள் முரட்டுத்தனம்! பயனீட்டாளர் நலம் அடியோடு புறக்கணிப்பு!

கோப்பு படம்

நாட்டின் பொருளாதாரச் சூழல், மக்களின் வாழ்க்கை நிலை, ஊதியத் தரம் குறித்தெல்லாம் வங்கிகள் பொதுவாக அக்கறைப்படுவதில்லை; அணுதினமும் மில்லியன் கணக்கான வெள்ளியில் புரளும் வங்கிகளின் மரத்துபோன மனதிற்கு, ஏழை-எளிய மக்கள் படும் துயரம் உறைக்கவில்லை.

வாடிக்கையாளர்கள், வாகன வசதிக்காக தாங்கள் பெற்ற கடனுக்கான மாதாந்திர தவணைப் பணத்தை முறையாக செலுத்தாத வேளையில், சம்பந்தப்பட்டவரின் வாகனத்தை இழுத்துச் செல்வதற்காக வங்கிகள் அனுப்பிவைக்கும் ஆட்கள், முரட்டுத்தனத்தை வெளிப்படுத்துகின்றனர்.

வேலையின்மை, பணியிடை நீக்கம், சம்பள பற்றாக்குறை, விபத்து போன்ற காரணங்களினால் வாழ்க்கையில் ஏற்படும் திடீர் முடக்கம், வாழ்க்கை செலவு அதிகரிப்பு போன்ற காரணங்களால் வாகன கடன் வசதி பெறுவோர் அதற்கான மாதாந்திர தவணை பணத்தை செலுத்துவதில் தேக்க நிலையை எதிர்கொள்கின்றனர்.

இப்படிப்பட்டோர் தங்களின் வாகன கடனுக்கான மாதாந்திர தவணையை செலுத்துவதில் தேக்க நிலையை எதிர்கொள்கின்றபொழுது வங்கிகளால் முகவர்கள் கமுக்கமாக அனுப்பி வைக்கப்படுகின்றனர்.

வங்கிகளால் அனுப்பி வைக்கப்படும் முகவர்கள், ஏதோ கொள்ளையரை வளைத்து-மடக்கிப் பிடிப்பதைப்போல, தவனைப்பணம் செலுத்தாதவரின் வாகனத்தை மடக்கி இழுத்துச் செல்கின்றனர். முன்னும் பின்னும் தங்கள் ஓட்டிவரும் வாகனங்களை நிறுத்தி, பிரச்சினைக்குரிய வாகனம் நகரமுடியாதபடி செய்து, அப்படியே இழுவை வாகனத்தில் ஏற்றிச் செல்வதில் அத்துணை முனைப்பும் கண்ணும் கருத்துமாக இருக்கின்றனர்.

இத்தகைய நடவடிக்கைக்குமுன் வங்கியில் இருந்து, கடிதமோ மின்னஞ்சலோ அல்லது கைபேசி வழியே குறுஞ்செய்தியோ என எந்த தகவலும் அனுப்பி எச்சரிக்கை செய்யவோ நினைவுறுத்தவோ மாட்டார்கள்.

பதட்டத்திற்கு ஆளான நிலையில் , வங்கி அனுப்பி வைத்த முகவர்களை நெருங்கினால் வாகன உரிமையாளர்களை தரக்குறைவாக நடத்துவது, முரட்டுத்தனமாக நெஞ்சில் கைவைத்து தள்ளுவது என்றெல்லாம் ஏறக்குறைய அடியாளைப் போல, வாடிக்கையாளரிடம் நடந்துகொள்கின்றனர்.

இதற்கிடையில், சம்பந்தப்பட்ட வாடிக்கையாளர் மின்னல் வேகத்தில் அங்கும் இங்கும் ஓடி, பணத்தைத் திரட்டி வங்கியில் செலுத்தலாம் என்றால், அதுவும் முடியாது; காரணம் ஏற்கெனவே வங்கிக் கணக்கை முடக்கப்பட்டிருக்கும்

.மொத்தத்தில் வங்கியின் நோக்கம், எப்படியாவது வாகனத்தை அபகரித்து, இழுத்துச் சென்று, வங்கியின் சார்பில் நிறுவப்பட்டிருக்கும் கிடங்கில் சேர்த்துவிடுவதுதான்; சம்பந்தப்பட்ட ஆட்களை, இதற்காகவே பயிற்சிகொடுத்து வங்கிகள் ஊக்குவித்து வைத்திருக்கும்போலத் தெரிகிறது.

ஏழெட்டுபேர் வந்து தவணைப்பணம் கட்டாத ஒருவரின் வாகனத்தை இழுத்துச் செல்வதில் தோல்வி அடைந்தால், சம்பந்தப்பட்டவர்கள் அந்தத் தொழிலுக்கு பொருத்தமில்லாதவர்கள் என்று, வங்கி நிருவாகத்தால் தகுதிநீக்கம் செய்யப்படுவர் என்றும் கருத இடமுண்டு.

அந்த நெருக்கடியிலும் பணத்தைப் புரட்டி, திரட்டி வாகன வங்கிக்கடன் கணக்கின்மூலம் செலுத்த முயன்றால், அதுவும்முடியாதபடி கணக்கை முடக்கிவைத்து, வாகனத்தை இழுத்துச் செல்வோருக்கு இசைவாக நடந்துகொள்ளும் வங்கிகளின் போக்கு, தகிடுதத்தமானது மட்டுமல்ல; வாடிக்கையாளரின் நலனை அடியோடு புறக்கணிப்பதுமாகும்.

இப்படி வாகனத்தை இழுத்துச் செல்லும்பொழுது, சம்பந்தப்பட்டவர் குடியிருக்கும் அண்டை-அயலாரின் ஏளனப் பார்வைக்கு ஆளாக நேரிடும்; அவரும் அன்று வேலைக்குச் செல்லமுடியாத நிலை ஏற்படலாம்; பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்புவது உள்ளிட்ட மற்ற பணிகளும் நிலைகுத்தி நிற்கும். எல்லாவற்றுக்கும் மேலாக, அந்தப் பயனிட்டாளரின் மனம், அன்றைய தினம் குமைந்துபோகும்.

தவணைப் பணம் கட்டுவதைக்கூட ஏற்காமல், வாகனத்தை இழுத்துச் செல்வதில்மட்டும் குறியாக இருக்கும் வங்கிகளும் அவை ஏவிவிடும் முரட்டு ஆசாமிகளும் இதற்காகவே பழக்கப்பட்டிருக்கக்கூடும் எனத் தெரிகிறது.

ஆனாலும், ஏதோ ஒருசிலர் மட்டும் இரக்க குணத்துடனும் அணுசரனைத் தன்மையுடனும் நடந்துகொள்வதைக் காணலாம். அதேவேளை, அவர்கள் வெளிப்படையாக நடந்துகொள்ளாமல், கமுக்கமாக பேசுவார்கள்.

அதுவும் உண்மையோ அல்லது நடிப்போ என்றும் தெரியாது; நாலு பேர் முரட்டுத்தனமாக வாகனத்தை இழுக்கும்பொழுது, ஒருவர் இப்படி இரக்க குணம் கொண்டவரைப் போல நடிக்க பயிற்சி கொடுக்கப்படுமோ என்பதும் விளங்கவில்லை.

இதற்கிடையில், சம்பந்தப்பட்ட வங்கிக்குச் சென்று, தன்னுடைய வாகனக் கடன் கணக்கு எண்ணை எப்படி தன்னிச்சையாக முடக்கமுடியும் என்று வினவினால், அதற்கு சம்பந்தப்பட்ட வாடிக்கையாளரே தன்னையும் அறியாமல் ஒப்புதல் அளித்துள்ள விவரம் அப்போது தெரியவரும்.

வங்கிகளில், வாகனக்கடன் வசதி தொடர்பில், வாடிக்கையாளர்களை காக்கவைத்து, திடீரென்று கடன்பத்திரத் தொகுப்புடன் வந்து, 20-30 இடங்களில் கையெழுத்தை வாங்குவார்கள்; நாமும் படிக்க அவகாசம் இன்றி, வங்கி அதிகாரி சுட்டும் அத்தனை இடங்களிலும் கைச்சாத்திடுவோம்.

அதில், வாடிக்கையாளரின் கடன் சம்பந்தமான வங்கிக் கணக்கை ஒருதலைப் பட்சமாக மூடவும், எந்த நேரத்திலும் வாகனத்தை இழுத்துச் செல்லவும் சம்மதிக்கிறேன் என்ற இடத்திலும் வாடிக்கையாளர்கள் கையொப்பம் இட்டிருப்பார்கள்.

கடன் வழங்கும்பொழுது, வாடிக்கையாளரின் கவனத்திற்குத் தெரிவிக்காமல், இப்படி தந்திரமாக கையெழுத்தைப் பெறுவது, பயனீட்டாளர்களின் நலனுக்கு எதிரானது; இதை அரசும் பயனீட்டாளர் நலத் துறையும் ஏன் கவனத்தில் கொள்ளவில்லை எனத் தெரியவில்லை.

இந்த விவரம் குறித்தெல்லாம், கையெழுத்து வாங்கும்பொழுதே வங்கி அதிகாரிகள், தங்களின் பயனீட்டாளர்களுக்குத் தெரியப்படுத்தலாம்; அல்லது மொத்தக் கடன் பத்திரத்தின் நகலையாவது பயனீட்டாளர்களுக்குக் கொடுத்தால் அவர்களும் விழிப்புடன் இருப்பார்கள். இதில் எதுவும் நடப்பதில்லை.

ஏதாவது வங்கியோ அல்லது அதிகாரியோ இவ்வண்ணம் பயனீட்டாளர்களுக்கு அணுகூலமாக நடந்துகொண்டிருந்தால், அது பாராட்டிற்குரியது.

மொத்தத்தில், பயனீட்டாளர்கள் இல்லை யென்றால் வங்கிகள் மஞ்சள் குளிக்க முடியாது; வங்கிகளே இயங்காது என்பதை வங்கித் துறையும் அரசும் கருத்தில் கொண்டால் மக்களுக்கு-வாடிக்கையாளர்களுக்கு நன்மை விளையும் என்பது குமரியின் எண்ணம்!

செய்தி சம்பந்தப்பட்ட உங்கள் கருத்தை பதிவு செய்ய "வாட்சாப்" பட்டனை அழுத்துங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

அதிகம் பகிரப்பட்டவை