
பெரும்பாலும் சீனர்கள் ஆதிக்கம் செலுத்துகின்ற கார் – லோரி பழுதுபார்ப்புத் துறையிலும் வட்டகை-Tyre வணிகத்திலும் ஒரு தமிழர் சிறந்து விளங்குவது மிகவும் பாராட்டிற்குரியது.
கோல சிலாங்கூர்- காப்பார் வட்டாரத்தில் ஆர் ஆர் கே ஆட்டோ எண்டர்பிரைஸ் என்ற நிறுவனத்தை மிகவும் அரும்பாடுபட்டு திறந்திருக்கிறார் ராஜேந்திரன். இந்த நிறுவனத்தை திறந்து வைத்து பாட்டாளி ராஜேந்திரனை நம்பிக்கை அமைப்பின் தலைவர் டத்தோ கலைவாணர் வெகுவாக பாராட்டினார்.

சிறிய வயதில் மனைவியின் மருத்துவ செலவு பிள்ளையின் சாப்பாட்டு செலவுக்கெல்லாம் மிகவும் சிரமப்பட்டு கலங்கி நின்ற இவர் எதிர்காலத்தை எதிர்கால இலக்கை நம்பிக்கையுடன் மனதில் பதிய வைத்து இரவும் பகலும் பாராது கார் பட்டறைத் தொழிலில் ஈடுபட்டு இப்பொழுது ஒரு சொந்த நிறுவனத்தை சீன சமுதாயத்திற்கு போட்டியாக திறந்து வைத்துள்ளதை எல்லோரும் பாராட்ட வேண்டும் என்று கடந்த உழைப்பாளர் தினமான மே ஒன்றாம் நாள் இந்த பட்டறையைத் திறந்து வைத்து பேசியபோது கலைவாணர் மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
வட்டார காவல்துறை அதிகாரிகள் சீன சிறு முதலாளிகள் உட்பட ஏராளமான தமிழர்களும் திரண்டு ஒரு குடும்ப விழாவை போல ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த இந்த திறப்பு விழாவில் கலந்து கொண்டதுடன் அனைவரும் ராஜேந்திரன் இணையரை பாராட்டினர்.

அவரின் உழைப்புக்கும் முன்னேற்றத்திற்கும் அனைவரும் வாழ்த்து தெரிவித்தனர்.
தளராத உழைப்பும் தாழாத முனைப்பும் கொண்டிருந்தால் எந்த மனிதரும் வாழ்க்கையில் சிறந்து விளங்கலாம் என்பதற்கு காப்பார் வட்டாரத்து ஆர்.ஆர்.கே ஆட்டோ என்டர்பிரைஸ் உரிமையாளர் ராஜேந்திரன் மிகச் சிறந்த எடுத்துக்காட்டாகத் திகழ்கிறார்.
தொடக்கத்தில்வாடிக்கையாளர்களைக் கவர்வதற்காக அவர்களுக்கு சலுகை விலையில் சேவை செய்ய வேண்டும் என்ற அடிப்படையில் பொருள்களின் நியாயமான விலையுடன் தன்னுடைய உழைப்பிற்கான ஊதியத்தை குறைத்துக் கொண்டு பெரும்பாலான வாடிக்கையாளர்களை இனம் மொழி கடந்து கவர்ந்து வந்த ராஜேந்திரன், இன்று ஒரு மிகப்பெரிய தொழில் அதிபராக உயர்ந்திருப்பது மலேசிய இந்திய சமுதாயத்திற்கு மிகவும் பெருமை தரக்கூடியதும் பாராட்டுக்குரியதும் ஆகும்.

ஆர்ஆர்கே ஆட்டோ எண்டர்பிரைஸ் உரிமையாளர் ராஜேந்திரன் அடுத்த ஆண்டு இதே மே தினத்தில் இன்னொரு கிளையை திறக்க குமரி வாழ்த்துகிறாள்!


