Thursday, April 16, 2026

பாவேந்தர் பாராட்டிய மலையக-தமிழக தமிழறிஞர்கள்

‘தமிழ்க்குயில்’கா கலியபெருமாள்

மலேசியாவில் தலைசிறந்த தமிழிலக்கிய படைப்பாளர்களுள் ஒருவராக விளங்கிய தமிழ்க் குயிலார் கா கலியபெருமாளுக்கு இன்று 14-ஆவது நினைவு நாள்.

கோலாலம்பூர் சௌக்கிட் வட்டாரத்தில் ஒரு சீக்கிய மண்டபத்தில் துன் சாமிவேலு தலைமையில் ஆயிரம் பக்கங்களைக் கொண்ட தமிழர் பண்பட்டுக் களஞ்சியத்தை தமிழ்க்குயிலார் வெளியிட்டது, மலேசியத் தமிழிலக்கிய வரலாற்றில் எஞ்ஞான்றும் நிலைகொண்டிருக்கும்.

சின்னஞ்சிறு வயதிலேயே தமிழ்க் குயில் பட்டத்தைப் பெற்றார் இவர்; தமிழினத்தின் ஒரே சுயமரியாதை எழுச்சிப் பாவலர் பாவேந்தரால் 1960-ஆம் ஆண்டில் ‘தமிழ்க் குயில்’ என்று பட்டம் சூட்டப்பெற்றவர் கலியபெருமாள். அந்த விருதை தம் வாழ்நாள் நிறைவுக்காலம் வரை, தம் பெயருடன் இணைத்து பயன்படுத்தினார்.

தானாற்றிய இலக்கியப் பணிதொடர்பில், அதிகமான பாராட்டையும் ஏராளமான விருதுகளைப் பெற்ற கா.கலியபெருமாள், 2011ஆம் ஆண்டு ஜூலை 08-இல் இயற்கை எய்தினார்.

பேராக் மாநிலத்தில் 1937 ஆகஸ்ட் 19இல் பிறந்த இவர், தமிழ்க் கல்விக்காக அதிகமாக உழைத்திருக்கிறார். தமிழ்ப் மாணாக்கருக்காக 80க்கும் மேற்பட்ட பயிற்சி நூல்களை எழுதிய இவர், தமிழர் சடங்கு முறை குறித்து முறையாக வடிவமைத்துக் கொடுத்துள்ளார்.

‘பக்தியும் பகுத்தறிவும்’ எனும் ஒரு கேள்வி-பதில் பகுதியை மலேசிய நண்பன் நாளிதழில் ஞாயிறுதோறும் எழுதி வந்தார். அப்பகுதி இலட்சக்கணக்கான மலேசிய ரசிகர்களை அவருக்குப் பெற்றுத் தந்தது. இருந்தபோதும், அப்போது மலேசிய இந்து சங்கத்தின் பொதுச் செயலராக இருந்த சோ.பரஞ்சோதி, ஆதிக் குமணனிடம் புகார் அளித்ததைத் தொடர்ந்து அத்தொடர் இடைநிறுத்தப்பட்டது.

மயிலை சீனி வேங்கடசாமி

தமிழகமெங்குமுள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்களுக்கும் வழிபாட்டுத் தலங்களுக்கும் சென்று ஆய்வு செய்த மயிலை. சீனி வேங்கடசாமி, தொல்லியல், கல்வெட்டியல், நாணயவியல் ஆகிய துறைகளில் அரிய களப்பணியாற்றி உள்ளார்.
தென்னிந்திய எழுத்து முறைகள் யாவற்றையும் கற்றுத் தேர்ந்த இவர், பிராமி, கிரந்தம், தமிழ் என அனைத்து எழுத்துமுறை கல்வெட்டுகளையும் படித்து ஆராயும் திறன் பெற்றார்.
கன்னடம், மலையாளம் போன்ற மொழிகளையும் கற்றறிந்திருந்தார். இந்து சமய வரலாற்றாளர்கள் அதிகம் கவனம் செலுத்தாத சமண, புத்த சமய கோயில்களையும் தொல்லியல் களங்களையும் ஆய்வு செய்தார். இரு முறை (1963-64) சென்னைத் தமிழ் எழுத்தாளர் சங்கத் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டார்.
வேங்கடசாமியின் தமிழ்ப்பணியை அறிந்து வியந்த பாரதிதாசன், பின்வருமாறு பாராட்டியுள்ளார்:
தமிழையே வணிகமாக்கித்
தன்வீடும் மக்கள் சுற்றம்
தமிழிலே பிழைப்பதற்கும்
தலைமுறை தலைமுறைக்குத்
தமிழ் முதலாக்கிக் கொண்ட
பல்கலைத் தலைவன் எல்லாம்
தமிழ்ச் சீனி வேங்கடத்தின்
கால்தூசும் பெறாதார் என்பேன்”
பிரிட்டிஷ் இந்தியாவில் சென்னை மாகாணத் தலைநகரான சென்னையில் 1990-இல் பிறந்த வேங்கடசாமி, 1980-ஆம் ஆண்டில் இதேநாளில் மறைந்தாலும், அவரின் பெயர் தமிழுலகில் என்றும் நிலைத்திருக்கும்.

செய்தி சம்பந்தப்பட்ட உங்கள் கருத்தை பதிவு செய்ய "வாட்சாப்" பட்டனை அழுத்துங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

அதிகம் பகிரப்பட்டவை