
மலேசிய இந்து சங்கம் வளர்ச்சி காண்பதற்காகவே சங்கத்தின் முன்னாள் தலைவர் டத்தோ மோகன்ஷானுடன் கூட்டு சேர்ந்துள்ளதாகவும்
மத்திய நிர்வாக குழுவில் போதிய ஆதரவும் ஒத்துழைப்பும் இல்லாததால் இயல்பாக செயல்பட முடியவில்லை என்றும் சங்கத்தின் தற்போதைய தலைவர் தங்க கணேசன் ஆதங்கம் தெரிவித்தார்.
இந்தநிலை மாற்றி அமைக்கப்பட வேண்டும் என்பதாலேயே புது அணி அமைத்து 2025 ஆண்டுக் கூட்டத்தில் தனி அணி அமைத்து போட்டியிடுவதாக நேற்று நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் தங்க கணேசன் கூறினார்.
மலேசிய இந்து சங்கத்தின் ஆண்டுக் கூட்டமும் தேர்தலும் ஜூலை 20ஆம் நாள் பெட்டாலிங் ஜெயா தோட்ட மாளிகையில் நடைபெறவுள்ளது.
சங்கத்தின் 27 பேர் கொண்ட நிர்வாக குழுவில் இந்த முறை 10 இடங்கள் காலியாகி உள்ளன.
இந்த 10 இடங்களுக்கும் தன் தலைமையிலான அணி போட்டியிடுகிறது.

சங்கத்தின் முன்னாள் தலைவர் டத்தோ மோகன் ஷானும் இணைந்திருப்பது தன்னுடைய அணிக்கு வலிமை சேர்ப்பதாக கணேசன் தெரிவித்துள்ளார்
மலேசிய இந்து சங்கத்தை மேலும் வலுப்படுத்த வேண்டும். குறிப்பாக சங்கத்தில் நிலவும் பிரிவினை சீர் செய்யப்பட வேண்டும் என்பதில் அக்கறை கொண்டுள்ளதாகவும் இதன் அடிப்படையில் தான் இந்த ஆண்டு தனி அணி அமைத்து போட்டியிடுவதாகவு அவர் மேலும் தெரிவித்தார்.
மலேசிய இந்து சங்கத்தின் சிறந்த எதிர்காலத்தை கருத்தில் கொண்டு இந்து சங்க உறுப்பினர்கள் தங்கள் அணிக்கு முழு ஆதரவு தர வேண்டும் என்று தங்க கணேசன் கேட்டுக்கொண்டார்.
மலேசிய இந்து சங்கத்தில் இளைஞர்கள் தலைமைத்துவத்திற்கு வரவேண்டும் என்பதால் தங்களுடைய அணியில் அதிகமான இளைஞர்களின் சேர்த்துக் கொண்டிருப்பதாகவும் ஏ. கோபி அச்சுதன், எம். ஹரிதாசன், டத்தோ ஆர் எஸ் மோகன்ஷான், கே எல் ரவி, சதீஷ், ஏ சுகு, சுஜித்ரா ஜெயசீலன், கே தினகரன் ஆகியோருடன் தானும் போட்டியிடுவதாக தங்க கணேசன் நேற்றைய செய்தியாளர் கூட்டத்தில் அறிவித்தார்.


