
மலேசிய நீதித்துறை வட்டாரத்தில் இப்பொழுது பரபரப்பாக அலசப்படும் ஓர் அம்சம், முன்னாள் துணை அமைச்சரும் தற்போதைய மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதியுமான வான் அகமட் ஃபாரிட் வான் சாலே, நாட்டின் அடுத்த தலைமை நீதிபதியாக நியமிக்கப்படும் வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது என்பதுதான்.
கூட்டரசு நீதிமன்றத்திற்கு அடுத்து நாட்டின் உச்ச நீதிமன்றமான மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் தற்பொழுது நீதிபதியாக இருக்கும் 62 வயது வான் அகமட் ஃபாரிட், நாட்டின் அடுத்த தலைமை நீதிபதியாக நியமிக்கப்படக் கூடியவர் பட்டியலில் முதல் நிலையில் இருக்கிறார் எனத் தெரிகிறது.
நீதிமன்ற நியமனங்கள் குறித்து அண்மைக்காலமாக சர்ச்சைகளும் கருத்தாடல்களும் எழுந்துள்ள நிலையில் ஆளும் தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களை பிரதமர் அன்வார் இப்ராகிம் அண்மையில் சந்தித்து கருத்தறிந்தார்.
நீதிமன்ற நியமனத்தில் வெளிப்படைத் தன்மை வேண்டும் என்பதை வலியுறுத்தி நாடாளுமன்ற உறுப்பினர்கள், மலேசிய வழக்கறிஞர் மன்றம் மற்றும் ஆளும் கூட்டணியில் தலைமை வகிக்கின்ற மக்கள் நீதி கட்சி – பிகேஆர் நாடாளுமன்ற உறுப்பினர்கள்கூட இதன் தொடர்பில் கருத்து தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.
1962 நவம்பர் திங்கள் 13 ஆம் நாள் பிறந்த இவர், உள்துறை அமைச்சகத்தில் துணை அமைச்சராக பதவி வகித்தவர் என்பதும் இரண்டு முறை செனட்டராக பொறுப்பு வகித்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அரசியலில் இருந்து விலகி நீதித்துறையில் இணைந்தபின் உயர்நீதிமன்றத்தில் 5 ஆண்டுகள் நீதிபதியாக பதவி வகித்தார் என்பதும் சிறப்பான அம்சம்.


