
மலேசிய இந்து சங்கத்தின் நிதியை பெருமளவு விழுங்குகின்ற ஆண்டாண்டு தேர்தல் முறை மாற்றி அமைக்கப்படும்; இந்து சங்க தேசிய பொறுப்பாளர்களுக்கான தேர்தல் 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை என வறைமுறை ஏற்படுத்தப்படும்; அதற்கு ஏற்ப கூடிய விரைவில் சட்ட திருத்தம் மேற்கொள்ளப்படும்; அனைத்து அரசியல் பொது இயக்கங்களுடனும் குறிப்பாக சமய இயக்கங்களுடன் ஒருங்கிணைந்து செயல்பட்டு மலேசிய இந்து சமுதாய மறுமலர்ச்சிக்கும் இந்து சங்க வளர்ச்சிக்கும் முற்றும் முழுதாக பாடாற்றுவது; ஒவ்வொரு இந்து குடும்பத்திற்கும் உரிய சமய வழிபாட்டு நூலை கொண்டு சேர்ப்பது; அனைத்துத் தமிழ் பள்ளிகளுக்கும் திருக்குறள் நூலை கொண்டு சேர்ப்பது உள்ளிட்ட ‘மறுமலர்ச்சி- மாறுவோம் மாற்றுவோம்’அணியின் கொள்கை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து திட்டங்களையும் 100 நாட்களுக்குள் நிறைவேற்றுவதற்கு அதிகபட்சமாக முயற்சி மேற்கொள்ளப்படும் என்று நாளை நடைபெறுகின்ற மலேசிய இந்து சங்க ரா 2025 ஆம் ஆண்டு கூட்டத்தில் தேசிய தலைவருக்கு போட்டியிடுகின்ற மறுமலர்ச்சி மாறுவோம் மாற்றுவோம் அணியின் தலைவர் கணேஷ் பாபு தெரிவித்துள்ளார்.
மலேசிய இந்து சங்க தலைமைப் பொறுப்பை ஏற்ற நூற்று ஓராவது நாள் இதே செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளிப்பதுடன் ஒவ்வொரு மூன்று மாதங்களுக்கும் ஒருமுறை ஊடக சந்திப்பு நடைபெறும் என்றும் ‘சமய போராளி- சமூக நண்பாளி’ கணேஷ் பாபு இன்றைய செய்தியாளர் கூட்டத்தில் முழங்கினார்.

மலேசிய இந்து சங்கத்தின் 2025 ஆம் ஆண்டுக் கூட்டம் நாளை தோட்ட மாளிகையில் நடைபெற இருக்கின்ற நிலையில் இவ்வாண்டுக் கூட்டம் மிகவும் பரபரப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் அதற்கு முதல் நாளான இன்று கணேஷ்பாபு தலைமையிலான மறுமலர்ச்சி அணியினர் செய்தியாளர்களை சந்தித்து தங்களின் கொள்கை- திட்டங்கள் குறித்து விளக்கம் அளித்தனர்.
கோலாலம்பூர் ஈப்போ சாலை(ஜாலான் சுல்தான் அஸ்லான் ஷா)யில் உள்ள ஓர் உணவகத்தில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் இந்து சங்க ஆயுள் கால உறுப்பினர் எல் சிவசுப்பிரமணியனும் கலந்து கொண்டு இந்த மறுமலர்ச்சிக் குழுவினருக்கு தன் ஆதரவைத் தெரிவித்தார்.


