
2022-ஆம் ஆண்டுக் கூட்டத்தில் தலைவர் பதவியை இழந்த டத்தோ ஆர்எஸ் மோகன்ஷான், சளைக்காமல் தொடர்ந்து ஆண்டுதோறும் போட்டியிட்டு வருகிறார். நாளை ஜூலை இருபதாம் நாள் நடைபெற இருக்கின்ற 2025-ஆம் ஆண்டுக் கூட்டத்திலும் போட்டியிடுகின்ற இவர் இதில் தனக்கு வெட்கமில்லை என்று தெரிவித்துள்ளார்.
மலேசிய இந்து சங்கத்தின் நிகழும் ஆண்டுக்குரிய கூட்டம் நாளை தோட்ட மாளிகையில் நடைபெற இருக்கின்ற நிலையில் தனக்கு தலைவர் பதவி மீது ஆசை இல்லை என்றும் தங்க கணேசன் தலைமையை ஏற்று சங்கத்திற்கு சேவை செய்ய விரும்புவதாகவும் அதனால் மீண்டும் போட்டியிடுவதாகவும் தங்க கணேசன் தலைமையை ஏற்பதில் தனக்கு வெட்கமே இல்லை என்றும் இந்து சங்கத்திற்கு13 ஆண்டுகள் தலைவராக இருந்த மோகன்ஷான் தெரிவித்துள்ளார்.

இதே மோகன்ஷான், இதே தங்க கணேசன் தலைமையிலான அணியினரை 2023 ஜோகூர் ஆண்டுக் கூட்டத்தின்பொழுது ‘குண்டர் கும்பல்’ என்று வர்ணித்தார்.
அதைக் கேட்டுக் கொண்டு கூட்டத்திற்கு தலைமை வகித்த தங்க கணேசன் அமைதியாக இருந்தார்.
ஆனால் கணேஷ் பாபுதான் மோகன் ஷானுக்கு பதிலடி கொடுத்தார்!.
நீதிமன்ற உத்தரவுப்படி தங்க கணேசன் இந்து சங்க அலுவலகத்திற்குள் நுழையலாம் என்று தெரிவித்து பூட்டை மாற்றியது வழக்கறிஞர் தரப்புதான் என்றும் அவர்களைப் பார்த்து ‘குண்டர் கும்பல்’ என்பது சரியா என கணேஷ் பாபு வினவியதற்கு மோகன் ஷானிடமிருந்து அந்த ஆண்டுக் கூட்டத்தில் பதில் இல்லை.

தவிர, அந்த ஆண்டுக் கூட்டத்தில் இரண்டு முறையும் பூட்டை மாற்றியது தான் இல்லை என்று சொன்ன மோகன் ஷான் இந்து சங்க தலைமையகத்தில் பூட்டை உடைத்தது யார் என்று சொல்லவில்லை.
அதை மலேசிய இந்து சங்க உறுப்பினர்களுக்கும் சமுதாயத்திற்கும் மோகன்ஷான் தெரிவிக்க வேண்டும்; இந்து சங்கத் தலைமையக பூட்டை உடைத்த தரப்பு யார் என்ற விவரத்தை எல்லாம் சொன்னால் நன்றாக இருக்கும்.
2022-ஆம் ஆண்டுக் கூட்டத்தில் தங்க கணேசன் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டபொழுது, “இனி மத்திய செயலவையிலும் உறுப்பினராக இருக்க தனக்கு விருப்பமில்லை; ஏனென்றால் தங்க கணேசன் தலைமையில் தனக்கு நியாயம் கிடைக்காது; தங்க கணேசன் தலைமையிலான மத்திய செயலவை, மத்திய செயலவையாக இருக்காது; தன்னால் போராடவும் முடியாது” என்று பெட்டாலிங் ஜெயா சுங்கை வேயில் நடைபெற்ற ஆண்டுக் கூட்டத்தில் சொல்லிவிட்டு மோகன்ஷான் வெளியேறினார்.

அப்படி வெளியேறிய மோகன்ஷான் அடுத்த இரண்டு நாட்களில் நான்தான் இன்னமும் தேசியத் தலைவர் என்று உரிமை கொண்டாடினார். அதனால் இந்து சங்கத்தின் தலைவர் யார் என்ற சிக்கல் நீதிமன்றத்திற்குச் சென்றது! ஏறக்குறைய ஆறு மாதங்கள் தங்க கணேசனை காக்க வைத்து மோகன் ஷான், நீதிமன்ற தீர்ப்புக்குப் பிறகுதான் அடங்கினார்
2022 மே மாதம் இந்து சங்கத் தலைவராக ஜனநாயக முறைப்படி இந்து சங்க உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தங்க கணேசனை, நீதிமன்ற வாசலில் நிறுத்தி அலைக்கழித்ததுடன், தேவையில்லாத செலவையும் ஏற்படுத்திய மோகன் ஷான், 2022 அக்டோபர் 31ஆம் நாள் கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் தங்க கணேசன்தான் உண்மையான தலைவர் என்று அதிரடியான தீர்ப்பளித்த பின்னர்தான் மோகன்ஷான் பின் வாங்கினார்
அந்தமட்டில் மோகன்ஷான் ஒதுங்க வில்லை;
அடுத்த ஆண்டு ஜொகூர் மாநிலத்தில் நடைபெற்ற2023 ஆண்டுக் கூட்டத்திலும் போட்டியிட்டார்; போட்டியிட்டு தோல்வியுற்றார்.

அத்துடனாவது மோகன்ஷான் நின்று விட்டாரா என்றால் அதுவும் இல்லை; 2024 ஆம் ஆண்டுக் கூட்டத்திலும் போட்டியிடுவதற்காக களம் இறங்கினார். இந்தக் கட்டத்தில் தான் மலேசிய இந்து சங்கத்தில் ஆண்டுதோறும் போட்டி நிலவி, அணி என்னும் பிணி பற்றி கொண்டுள்ளது குறித்து சமுதாய வட்டத்திலும் அரச மட்டத்திலும் அதிருப்தி நிலவுவதால் அதை தவிர்ப்பதற்காக கணேஷ் பாபு சமரசம் பேசினார்.
2024 ஆண்டுக் கூட்டத்தில் தானும் தன்னுடைய தரப்பும் போட்டியிட வேண்டாம் என்றால் தன்னுடைய ஆதரவாளர்களை மலேசிய இந்து சங்க நிர்வாக குழுவில் நியமிக்க வேண்டும் என்று மோகன்ஷான் முன்வைத்த பேரத்தின் அடிப்படையில் அவரின் ஆதரவாளர்களான விலாயா மாநிலத்தைச் சேர்ந்த பாலகிருஷ்ணன், டத்தோ வீரன், சிலாங்கூர் மாநிலத்தைச் சேர்ந்த கணமூர்த்தி உள்ளிட்ட நான்கு பேர் மலேசிய இந்து சங்க மத்திய செயலவையில் போட்டியின்றி நியமிக்கப்பட்டனர்.
மேலும் மோகன் ஷானுக்கு மலேசிய இந்து சங்கத்தின் உயரிய விருதான சங்கரத்னா விருதும் இந்து சங்க ஆலோசகர் பொறுப்பும் வழங்கப்பட்டன.
13 ஆண்டுகள் தலைவராக இருந்த பின்னும் இந்து சங்க தலைமைப் பொறுப்பின்மீது கொண்ட மோகமும் தாகமும் தீராத மோகன்ஷானுக்கு இந்த முறை வசதியாக ஒரு வாய்ப்பு அமைந்துவிட்டது.
2022 தேர்தலின் போது மூன்றாண்டுகள் கழித்து பதவியை கணேஷ் பாபுவிடம் ஒப்படைப்பதாக வாக்குறுதி அளித்த தங்க கணேசன், மூன்று ஆண்டுகள் நிறைவு பெறும் தருணத்தில் அவருக்கும் மோகன்ஷானைப் போல பதவி ஆசை ஏற்பட்டதாலும் அதேவேளை, மலேசிய இந்து சங்க நிருவாகக் குழுவில் தனக்கு போதிய ஆதரவு இல்லாததால்.. .,
கணேஷ் பாபுவை எதிர்கொள்ள முடியாத நிலையில்.. .
மூன்று ஆண்டுகளுக்கு முன்பு யாரை எதிர்த்து போட்டியிட்டு வென்றாரோ; தன்னுடைய தலைமையைப் பார்த்து குண்டர் கும்பல் என்று யார் சொன்னாரோ அவரிடமே தஞ்சமடைந்து மண்டியிட்டு விட்டார்.

அதன் அடிப்படையில்தான் நாளை நடைபெற இருக்கின்ற இந்து சங்கத் தேர்தலில் தங்க கணேசனும் மோகன்ஷானும் கரம்கோத்து போட்டியிடுகின்றனர் ஓர் அணியாக;
இவர்கள் வெற்றி பெற்றால் இந்து சங்கத்திற்கு இனிமேல் நன்மையை செய்வார்களாம்(?).
இதை மலேசிய இந்து சங்க உறுப்பினர்களும் இந்து சமுதாயமும் நம்பத் தயாராக இல்லை.
மலேசிய இந்து சங்கம் நிறுவன சட்டத்தின்படி பதிவு செய்யப்பட்டு இருந்தாலும் இந்த சமய அமைப்பு வர்த்தகம் எதிலும் ஈடுபடவில்லை ஏதாவது மானியம் தனி நன்கொடை பெற்றுத்தான் இந்து சங்கத்தின் நிர்வாகமே நடைபெறுகிறது.
இந்த நிலையில் ஆண்டுதோறும் பல்லாயிரக் கணக்கான வெள்ளியை ஆண்டுக்கூட்டதற்காக செலவழிப்பது சரியா என்பதைப் பற்றி மோகன் ஷானுக்கு கவலை இல்லை.
இந்து சங்கத்தின் நிதி விரயம் ஆவதைப் பற்றி கவலைப் படாமல் தான் எப்படியாவது மீண்டும் இந்து சங்க தலைமை பீடத்தில் அமர வேண்டும் என்ற ஒரே இலக்குடன் மோகன்ஷான் ஆண்டுக்கு ஆண்டு மல்லுக்கட்டுகிறார்.
இந்த பதவி மோக கூட்டணிதான், நாளைய தேர்தலிலும் களம் காண்கிறது.
எதிர்த் தரப்பில் கணேஷ் பாபு தலைமையிலான மறுமலர்ச்சி அணி மலேசிய இந்து சங்கத்தை புத்தாக்கக பாதையில் சீரமைத்திட இலக்கு வைத்து போட்டியிடுகிறது.
நாளை முதல் மலேசிய இந்து சங்கத்தை எந்தத் தரப்பு வழிநடத்த வேண்டும் என்பதை முடிவு செய்ய வேண்டியது மலேசிய இந்து சங்க உறுப்பினர்களின் கையில் உள்ளது.
2021ஆம் ஆண்டில் மோகன்ஷான் தலைவராக இருந்த பொழுது மலேசிய இந்து சங்கத்தில் மானிய குளறுபடி, மற்றும் நிதி முறைகேடு பற்றி பரவலாக பேசப்பட்ட சூழ்நிலையில் மோகன் ஷானிடம் அது குறித்து விளக்கம் கேட்டதற்கு 10 பேர் கூடி இருந்தால் இப்படி நடக்கத்தான் செய்யும்; அரசாங்க அதிகாரிகள் தவறு செய்யவில்லையா? ஊழல் புரியவில்லையா என்று செய்தியாளர்களைப் பார்த்து எதிர்க் கேள்வி கேட்டு மானிய மடைமாற்றத்திற்கு முட்டுக் கொடுத்தவர் மோகன்ஷான்
அப்படிப்பட்ட மோகன்ஷான் மீண்டும் வந்தால் மீண்டும் இப்படியே நடக்காது என்றும் 10 பேர் கூடி இருக்கிற இடத்தில் நிதி முறைகேடு நடப்பது இயல்புதான் என்றும் சொல்ல மாட்டார் என்பதற்கு எந்த உத்திரவாதமும் இல்லை.
கணேஷ் பாபு விற்கும் தங்க கணேசனுக்கும் விரிசல் ஏற்பட்டுள்ளதைப் புரிந்து கொண்டு பூனைகளுக்கு அப்பத்தை பங்கிட்ட குரங்கைப் போல உள்ளே நுழைந்துள்ள மோகன்ஷான், 13 ஆண்டு காலத்தில் செய்யாததை இனிமேல் தங்க கணேசனுடன் சேர்ந்து செய்வார் என்பதற்கு எந்த உத்திரவாதமும் இல்லை.
மோகன்ஷான் காலத்தில்தான் இந்துக்கதிர் என்னும் பருவ இதழ் நிறுத்தப்பட்டது; அதே மோகன்ஷான் காலத்தில்தான் இந்து வித்யாலயா என்னும் சமயபாலர் பள்ளிகள் மூடப்பட்டன.
இவைப்பற்றி இந்த இருவருமே எந்த விவரமோ விளக்கமோ தெளிவோ அறிவிப்போ இதுவரை செய்ததில்லை.
இன்னும் சொல்வதற்கு ஏராளம் உண்டு.
இருந்தபொழுதும் அன்பிற்குரிய இந்து சங்க உறுப்பினர்கள் எல்லா விவரமும் அறிந்தவர்கள்; புரிந்தவர்கள் என்பதால் இந்த மட்டில் நிறுத்திக் கொண்டு நாளைய தேர்தலில் யார் சிறந்தவர்கள் என்பதை சிந்தித்து சிறந்த முறையில் வாக்களிக்க வேண்டிய கடமை மலேசிய இந்து சங்கத்தின் மாண்பிற்குரிய உறுப்பினர்களுக்கு இருக்கிறது என்பதை மட்டும் குமரி சொல்லிக் கொள்கிறாள்.
வெல்க இந்து சங்கம்!
மீள்க இந்து சமுதாயம்!!


