Sunday, April 19, 2026

தமிழ் நாட்டில் பாஜக அபார வளர்ச்சி: 2026-இல் தமிழக முதல்வர் அண்ணாமலையாம்! கராத்தே தியாகராஜன் அதிரடி!

-நக்கீரன்

கோலாலம்பூர், 18:
தமிழ் நாட்டின் சட்டப் பேரவைக்கு 2026-இல் நடைபெற இருக்கும் பொதுத் தேர்தல், இளந்தலைவர் அண்ணாமலையை தமிழகத்தின் அடுத்த முதல்வராக உறுதிப்படுத்தும் என்று தமிழ் நாட்டு பாஜக செயலாளர் கராத்தே தியாகராஜன் அதிரடியாகத் தெரிவித்துள்ளார்.

தமிழ் இனத்தின் தலைநிலமாம் தமிழ் நாட்டை அடுத்து, தமிழர்தம் தொல்பெருமையையும் தமிழின் மேன்மையையும் இன்றைய அளவில் உலகத்திற்கு எடுத்தியம்பும் நாடு, இம்மலைத்திருநாதான்;

அத்தகைய மலேசியாவின் பாரம்பரியத் தலைநகர் கோலாலம்பூரில் நடைபெற்ற பதினோராவது உலகத் தமிழர் பொருளாதார மாநாட்டில் கலந்துகொள்வதற்காக, அதன் நிறைவுக் கட்டத்தில் கலந்துகொண்ட கராத்தே தியாகராஜன், அதன் தகதகப்பு தணிவதற்குள், குறிப்பிட்ட சில செய்தியாளர்களை மட்டும் தலைநகரில் (நவம்பர்-19), சந்தித்தபோது மேற்கண்ட அதிரடியான கருத்தை வெளிப்படுத்தினார்.

அப்போது பேசிய தியாகராஜன், உலகத் தமிழர் 11-ஆவது பொருளாதார மாநாடு மிகச்சிறப்பாக நடைபெற்றிட எல்லா வகையாலும் உதவிசெய்த, மோடி தலைமையிலான மத்திய நடுவண் அரசுக்கும் கோலாலம்பூர் இந்தியத் தூதருக்கும் மிகவும் நன்றிதெரிவித்தார்.
தமிழ் நாட்டில் பாஜக தற்பொழுது அபார வளர்ச்சி கண்டுள்ளது; அண்மையில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலின்போது, பாஜக பெற்ற வாக்கு சதவீதமே அதற்கான முழு சான்றாகும்.

இதற்கெல்லாம் முக்கிய காரணம், பாஜக தமிழ் மாநிலத் தலைவராக செயல்பட்ட அண்ணாமலை மேற்கொண்ட அடித்தாடும் அரசியல்தான் காரணம்.

இதற்கிடையில், நடிகர் விஜய்யும் தமிழக அரசியல் களத்தில் குதித்துள்ளார்.

தமிழ் நாட்டின் வருங்கால அரசியலும் 2026 பொதுத் தேர்தலும் மூன்று இளந்தலைவர்களை மட்டும் மையம் கொண்டிருக்கும். மேலை நாட்டில் இருந்து விரைவில் திரும்ப இருக்கும் அண்ணாமலை, நடிகர் விஜய், தமிழகத்தின் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆகிய மூவரைச் சுற்றியே தமிழ் நாட்டின் அடுத்தத் தேர்தல் களம் அமையும்.

எது எவ்வாறாயினும் தமிழ் நாட்டின் அடுத்த முதல்வர் அண்ணாமலைதான் என்பதை அடுத்தப் பொதுத் தேர்தல் உறுதிப்படுத்தும் என்றார் கராத்தே தியாகராஜன்.

தொடர்ந்து பேசிய அவர், கோலாலம்பூரில் சில நாட்கள் தங்கி இருக்கப்போவதாகவும் மலேசிய இந்திய அரசியல்-சமூகத் தலைவர்களை சந்திக்க இருப்பதாகவும் தெரிவித்தார்.

செய்தி சம்பந்தப்பட்ட உங்கள் கருத்தை பதிவு செய்ய "வாட்சாப்" பட்டனை அழுத்துங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

அதிகம் பகிரப்பட்டவை