
கோலாலம்பூர், நவ.20
தலைநகரம், ஜாலான் சுல்தான் சுலைமான் பப்ளிக் வங்கி கட்டடத்தில் இருந்து அதன் ஊழியர்கள், உயர் அதிகாரிகள், பாதுகாவல் பணியாளர்கள், வாடிக்கையாளர்கள் என பல நூற்றுபேர் தலைதெறிக்க வெளியே ஓடோடி வந்தனர்.
நேற்று பிற்பகல் இரண்டே முக்கால் மணி அளவில் அந்தக் கட்டடத்தின் இடப்புறத்தில் தீயணைப்பு(BOMBA) வாகனம் அணைந்து அணைந்து எரியும் மஞ்சள் விளக்குடன் நின்றுகொண்டிருக்க, பக்கத்தில் இளநீல விளக்குடன் போலீஸ் வாகனமும் நின்று கொண்டிருந்தது.
வங்கிக் கட்டத்தில் இருந்து வெளியேறியவர்கள் அருகில் உள்ள தக்காபுல் காப்புறுதி நிறுனத்திற்குமுன் குழுமியதைக் கண்டு, அந்தச் சாலைவழியே சென்ற வாகன ஓட்டியர் பரபரப்புசூழ மெதுவாக தத்தம் வாகனத்தைச் செலுத்தியதால் வாகன நெரிசல் ஏற்பட்டது. பொதுமக்களும் அச்சம் தொற்றியபடி கடந்து சென்றனர்.
என்ன ஏதுவென விசாரித்ததில், இது ஆண்டுதோறும் நடைபெறும் வழக்கமான நிகழ்ச்சியென தெரிவிக்கப்பட்டது.
வணிக வளாகத்திலும் உயரமான கட்டடங்களிலும் தீ விபத்து ஏற்பட்டால், பொதுமக்களும் மற்றவர்களும் எப்படி பாதுகாப்பாகவும் விரைவாகவும் வெளியேறி தங்களைத் த்ற்காத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக மேற்கொள்ளப்பட்ட ஒத்திகை நிகழ்ச்சியென சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தெரிவித்தனர்.
சம்பந்தப்பட்ட ‘பொம்பா’ வாகனம், அருகில் உள்ள ‘ஹங் துவா’ தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்திலிருந்து ஒத்திகைக்காக வந்த விவரம் தெரியவந்தது.


