
‘டிஎன்பி’ நிருவாகத்தின் பாராமுகப் போக்கினால் கடந்த பத்து நாட்களாக மின்சாரம் இல்லாமல் தவித்த ஒரு குடும்பம், வீட்டில் சமைக்கவோ, உண்ணவோ, உறங்கவோ முடியாமல் அல்லல்பட்ட அதேவேளை, பிள்ளைகளின் நிலைமை இன்னும் மோசமாக இருந்ததாக வேதனையின் உச்சத்தை வெளிப்படுத்தி உள்ளது.
பூச்சோங் வட்டாரத்தில் கடந்த 20 ஆண்டுகளாக ஒரு குடும்பம் ஒரு வாடகை வீட்டில் வசித்து வருகிறது. அந்த மலிவு விலை வீட்டை, வீட்டின் உரிமையாளர் திடீரென்று விற்றுவிட்ட நிலையில், அவர் தண்ணீர் மற்றும் மின்சார இணைப்புகளையும் திடீரென்று நிறுத்திவிட்டார்.
பள்ளிக்கு சென்ற பிள்ளைகளும் வேலைக்குச் சென்ற பெற்றோரும் மாலையில் வீட்டிற்கு திரும்பியபோது, வீட்டில் மின் இணைப்பு இல்லை; நீர் விநியோகமும் தடைப்பட்டிருந்தது.
இதனால், பரிதவிப்பிற்கு ஆளான வாடகைக் குடும்பத்தினர், தாங்கள் குடியிருக்கும் வீட்டை வாங்கிய புது உரிமையாளரிடம் புகார் செய்திருக்கின்றனர். பரபரப்பிற்கு ஆளான புதிய உரிமையாளர், அடுத்த நாளே, இண்டா வாட்டர், ஆயர் சிலாங்கூர், ‘டிஎன்பி’ தலைமையகம் ஆகிய இடங்களுக்குச் சென்று, தான் புதிதாக வாங்கிய வீட்டிற்கு தண்ணீர், மின்சார விநியோகத்திற்கான புதிய இணைப்பை வழங்கும்படி விண்ணப்பித்து இருக்கிறார்.

விண்ணப்பத்தை ஏற்றுக்கொண்ட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைவில் அளவைக் கருவியை இணைத்து விநியோகத்தை ஏற்படுத்துவதாக வாக்களித்தனர். இது நடைபெற்றது, கடந்த வாரம் செப்டம்பர் 3-ஆம் நாள்.
சிலாங்கூர் நீர் விநியோக நிருவாகத்தினர், அடுத்த நாளே(செப்டம்பர்-04, 2025) புதிய அளவைக் கருவியைப் பொருத்தி நீர் வழங்கலை ஏற்படுத்தினர். இந்த வகையில், ‘Air Selangor’ நிறுவனத்தின் மேலான நிருவாகத்தை எத்துணைப் பாராட்டினாலும் தகும்.
ஆனாலும், ‘டிஎன்பி’நிருவாகத்தினருக்கு அப்படிப்பட்ட கடமை உணர்வும் மனிதநேயத் தன்மையும் இல்லாதுபோயிற்று; தொடர்ந்து, வெள்ளி-சனி-ஞாயிறு ஆகிய 3 தினங்களுக்கு பொது விடுமுறை-வார விடுமுறை என சேர்ந்து வந்ததால், ஒரு வாரத்திற்கு மின்சாரம் இன்றி பெரும் அவதிப்பட்டிருக்கிறது சம்பந்தப்பட்ட வாடகைக் குடும்பம்.
இதற்கிடையில் விட்டின் உரிமையாளரும் வாடகைக் குடியிருப்போரும் மாற்றி மாற்றி, TNB Customer Service தொடர்பு எண் 1-300-88-5454, TNB அவசரத் தொடர்பு எண் 15454 ஆகியவற்றுடன் தொடர்பு கொண்டு விசாரித்தாலும் சரி, புகார் தெரிவித்தாலும் சரி, புலம்பினாலும் சரி, கெஞ்சினாலும்கூட, மறுமுனையில் இருந்து வந்த ஒரே பதில், ‘டிஎன்பி-யில் இருந்து புதிய மீட்டரைப் பொருத்தி, புதிதாக மின் விநியோகத்தை ஏற்படுத்த குறைந்தது 3 முதல் அதிகபட்சம் 14 வேலை நாட்கள்வரை காத்திருக்க வேண்டும்’ என்பதாகத்தான் இருக்கிறது.
இது, டிஎன்பி-யின் நடைமுறையாக இருந்தால், இருக்கட்டும்.
பூச்சோங் வட்டாரம் என்பது ஒன்றும் காட்டுப் பகுதியோ அல்லது மிகவும் உட்புற பகுதியோ அல்ல; நாட்டின் மையப் பகுதியான சிலாங்கூர் மாநிலத்தில் தொடர்ந்து வளர்ச்சி கண்டு, நகரியப் பகுதியாக உருமாற்றம் கண்டு வருகிறது.

அந்தப் பகுதியில் உள்ள ஒரு வீட்டில், கடந்த 20 ஆண்டுகளாக டிஎன்பி-யின் உற்ற வாடிக்கையாளராக இருந்துவரும் ஒரு குடும்பத்திற்கு அணுசரனை காட்டு வகையில், பழைய மீட்டரை மாற்றி, புதிய கருவியைப் பொருத்தி மின்விநியோகத்தைப் புதுப்பிப்பதில் என்னத் தடை நேர்ந்துவிடப் போகிறது; வேறொன்றுமில்லை; கொஞ்சம் பாராமுகமும் கொஞ்சம் அலட்சியமும் கலந்த ஏனோதானோ மனநிலைதான்.
இதற்கிடையில் 019-6805269 என்ற எண்ணில் இருந்து கடந்த திங்கட்கிழமை, செப்டம்பர் 08-ஆம் நாள் அழைத்த டிஎன்பி ஊழியர் ஒருவர், “எந்த இடத்தில் விண்ணப்பம் செய்து கட்டணம் செலுத்தினீர்களோ அங்கேயே சென்று விசாரித்துக் கொள்ளுங்கள்; உங்கள் கதையைக் கேட்டு எனக்கும் தலை சுற்றுகிறது” என்று கூறிவிட்டு அந்தமட்டில் இணைப்பைத் துண்டித்துக் கொண்டுள்ளார்; அதன்பின், அந்த எண்ணிக்கு பல முறை அழைத்தாலும் மறுமுனையில் இருந்து பதில் இல்லை.
கடந்த 10 நாட்களாக இரவில் தூக்கமேயின்றி பிள்ளைகளுடன் சம்பந்தப்பட்ட குடும்பத்தினர் துன்பப்பட்ட வேளையில், புதுமீட்டருக்கு விண்ணப்பித்து கட்டணம் செலுத்திய 8-ஆம் நாளான இன்று காலை 11:37 மணிக்கு 03-89661500 என்ற தொலைபேசி எண்ணில் இருந்த அழைத்த ஒரு பெண் ஊழியர், “புதிய டிஎன்பி மீட்டர் பொருத்துவதற்கான உங்கள் கோரிக்கை பரிசீலனையில் உள்ளது; இன்றோ அல்லது நாளையோ புதுமீட்டர் பொருத்தப்பட்டு, புது மின்வினியோகம் ஏற்படுத்தப்படும்” என்று சம்பந்தப்பட்ட வீட்டு உரிமையாளரிடம் தெரிவித்திருக்கிறார்.
ஏற்கெனவே, 10 நாட்கள் மின்சாரம் இல்லை; இந்த நிலையில் இன்றுகூட மின்சார விநியோக கிடைப்பது உறுதி இல்லையா என்று வீட்டு உரிமையாளர் கேட்டதற்கு சம்பந்தப்பட்ட பணியாளரிடம் பதில் இல்லை.
வீட்டு உரிமையாளர் தன் வருத்தத்தையும் அதிருப்தியையும் ஒருசேர வெளிப்படுத்திய அடுத்த ஒரு மணி நேரத்தில் மின் இணைப்பு வழங்கப்பட்டிருக்கிறது.
இன்றைய நவீன உலகில், அதுவும் 21-ஆம் நூற்றாண்டில் கால் நூற்றாண்டைக் கடக்கும் இந்தத் தருணத்தில்கூட, குறிப்பாக ‘ஏ.ஐ.’ தொழில்நுட்பத்துடன் வாழும் இன்றைய மிகப்புதுமை உலகில், மக்களின் மிக அத்யாவசிய சேவைக்குரிய ஒரு நிறுவனத்தின் நிருவாகத் தன்மை இந்த அளவிற்கு பின்தங்கியிருப்பதற்குக் காரணம் என்ன?
சமுதாயத்தின்பால் அக்கறைக் கொண்டு, டிஎன்பி நிருவாகம், தன்னை சற்று உருமாற்றம் செய்து கொண்டால், நாட்டோரும் வீட்டோரும் நலம் பெறுவர்!
கருத்தில் கொள்ளுமா டிஎன்பி?


