உள்ளத்தை பறிகொடுக்க விரும்புவோர் திரண்டு வாரீர் நேதாஜி அரங்கத்திற்கு இன்று மாலை!!

கலையில், இசையில் குறிப்பாக திரை இசையில் நாட்டம் கொண்டு அதில் உள்ளத்தைப் பறி கொடுத்து மயங்க நினைக்கும் இசை ஆர்வலர்கள், தமிழ் அன்பர்களுடன் இஸ்லாமிய தோழர்களும் இன்று செப்டம்பர்த் திங்கள் 24 ஆம் நாள், புதன்கிழமை முன்னிரவு 7:00 மணி அளவில் மலேசிய இந்தியர்களின் அரசியல் தானையகம் ம.இ.கா.வின் தலைமையகத்து நேதாஜி அரங்கத்தில் திரளும்படி நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் வாஞ்சையுடன் கேட்டு கொள்கின்றனர்.
புதுமையான பாடகர்களைக் கொண்டு புதுமையான இசை நிகழ்ச்சி அரங்கேற்றப்பட இருக்கிறது.
இசை முரசு இ எம் ஹனிஃபாவின் நூற்றாண்டு விழா கடந்த ஞாயிற்றுக்கிழமை சௌஜானா புத்ரா மாசா பல்கலைக்கழக வளாகத்தில் அதன் தாளாளர் டான்ஸ்ரீ முகம்மது ஹனிஃபா முன்னிலையிலும் மலேசிய இந்திய சமுதாயத்தின் நாளைய தானைத் தலைவர் டத்தோஸ்ரீ மு சரவணன் தலைமையிலும் சிறப்பாக நடைபெற்றது
அரசியல் ஆளுமை, சமய இலக்கிய ஆளுமை போன்றோரின் செம்மாந்த உரைகள் காலையில் இடம்பெற்று மதியத்தில் கறி விருந்துடன் ஓய்வு அளிக்கப்பட்டு பிற்பகலில் இரண்டு முதல் மாலை நான்கு மணிவரை இரண்டாவது அங்கமாக இசை நிகழ்ச்சி நடை பெற்றது.
இந்த சிறப்பு நிகழ்ச்சியிலும் கலந்துகொண்ட கண்ணதாசன் அறவாரியத் தலைவருமான டத்தோஸ்ரீ சரவணன், பாடகி எழிலரசி ஃபரிதா, நெல்லை அபூபக்கர், ராஜபார்ட் ராஜா முகம்மது ஆகியோர் நினைவில் வாழும் நாகூர் இ எம் அனிஃபாவின் பாடல்களோடு பிற பாடல்களையும் பாடிய விதத்தில் தன்னை மறந்து, தான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்பதற்கு ஏற்ப, அதே முன்று இசைக் கலைஞர்களைக் கொண்டு ‘மயக்கும் மாலைப் பொழுதினிலே’ என்ற பெயரில் ஏற்பாடு செய்துள்ள நிகழ்ச்சி இன்று மாலை நடைபெற இருக்கிறது
ஹனிஃபாவின் நூற்றாண்டு விழாவில் கலந்து கொள்ள இயலாதவர்களுக்கு மறுவாய்ப்பு ஏற்படுத்தித் தரும் வகையில் இந்த நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது.

சேக் சாகுல் அமீது என்னும் இயற்பெயரை கொண்ட இசைக் கலைஞருக்கு ராஜபார்ட் ராஜா முஹம்மது என்று பெயர் சூட்டியவர் கிருபானந்த வாரியார்; அதைப்போல எம்ஜிஆர் ‘மயிலேறும் ராவுத்தர்’ என்றும் முத்தமிழ் அறிஞர் கலைஞரால் இளைய இசை முரசு என்றும் பாராட்டப்பட்டவர்.
குன்றக்குடி அடிகளார்கூட இந்த அற்புத பாடல் கலைஞர் ராஜா முகம்மதுவிற்கு முருக ஞான பூபதி என்று பட்டம் சூட்டி இருக்கிறார்; ஒரு கிறிஸ்தவ திருச்சபைகூட ஜீவ கிரீடம் என்னும் பட்டத்தை வழங்கி சிறப்பித்து இருக்கிறது.
திராவிட இயக்கத்தின்பால் ஈடுபாடு கொண்ட இந்தக் கலைஞர் தொடக்கத்தில் திராவிடர் கழக மேடைகளிலும் அடுத்து திமுக மேடையிலும் பாடி வந்தவர் தற்பொழுது இஸ்லாமிய நெறி சார்ந்த மறைப் பாடல்களை அதிகமாக பாடி வருகிறார்.
இறைவனிடம் கையேந்துங்கள் என்ற பாடலை இவர் பாடும்பொழுது இ.எம். ஹனிபாவே நேரில் வந்து படுவதைப் போன்று இருக்கும்.
ராஜபார்ட் ராஜா முஹம்மதுவுடன் இன்னொரு சிறந்த கலைஞரான நெல்லை அபு பாக்கரும் இன்றைய இசை நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவிருக்கிறார்.

1980-ஆம் ஆண்டுகளில் இசை முரசு இ எம் நாகூர் அனிபாவின் பாடல்களை கேட்க ஆரம்பித்தது முதல் இவரின் இசைப் பயணமும் தொடங்க ஆரம்பித்திருக்கிறது.
திராவிட முன்னேற்ற கழகத்தின் பிரச்சார பாடல் தொகுப்பு, வைகோ திமுகவில் இணைந்திருந்த காலத்தில் கலைஞரின் தலைமையில் வெளியிடப்பட்டிருக்கிறது. தமிழ்நாடு முழுக்க ஏறக்குறைய 4 ஆயிரம் மேடைகளில் இசை நிகழ்ச்சி படைத்துள்ள அபூபக்கர், தமிழ்நாட்டின் சன் தொலைக்காட்சியிலும் கலைஞர் டிவி உள்ளிட்ட புகழ்மிக்க தொலைக்காட்சிகளிலும் இசை நிகழ்ச்சி படைத்திருக்கிறார். இன்று ராஜபார்ட் ராஜா முஹம்மது மற்றும் எழிலரசி ஃபரிதா ஆகியோருடன் இணைந்து பாட இருக்கும் ‘மயக்கும் மாலைப் பொழுதினிலே’ நிகழ்ச்சியில் கோலாலம்பூர் இசை ஆர்வலர்கள் திளைக்க இருக்கின்றனர்.

எம் பிரேமலதா என்னும் இயற்பெயரைக் கொண்ட எழிலரசி ஃபரிதா, புதுச்சேரியை சேர்ந்தவர்.
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் இசைத் துறையில் டிப்ளமோ பட்டம் பெற்ற எழிலரசி பரிதா, இஸ்லாம் நெறி சார்ந்த ஆன்மீக பாடல்கள், பிற திரை இசை பாடல்களையும் இனிமையாக பாடக்கூடியவர்
அற்புத கலைஞர் ராஜா மகம்மது, பாடல் வல்லார் ஜி எஸ் அபு பாக்கர், பாட்டு ராணி புதுவை எழிலரசி ஃபரிதா ஆகிய மூன்று தலைசிறந்த பாடல் கலைஞர்களைக் கொண்டு இன்று மாலை நடைபெற இருக்கும் மயக்கும் மாலை இசை நிகழ்ச்சியை ‘புதிய மேம்பாட்டு செயல்முறை இயக்கம்’ஏற்பாடு செய்துள்ளது.
ம இ கா தேசியத் தலைவர் தான்ஸ்ரீ ச. விக்னேஸ்வரன், மாசா பல்கலைக்கழகத்தின் தான்ஸ்ரீ முகமது ஹனிபா ஆகியோர் முன்னிலை வகிக்க இருக்கும் இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாட்டில் இருந்து வருகை தந்துள்ள பேராசிரியர் அப்துல் சமது, சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார்.

சமய நல்லிணக்க கருத்தோடும் நகைச்சுவை உணர்வோடும் பேசுவதில் வல்லவர் பேராசிரியர் அப்துல் சமது.


