Sunday, May 31, 2026

தமிழருக்குக் கிடைத்த பெரும் சொத்து, கம்ப இராமாயானம்; டில்லி கம்பன் திருவிழாவில் இலக்கியவானர் சரவணன்!

-நக்கீரன்

கோலாலம்பூர், டிச.01:
தொல்தமிழர்தம் ஆன்மிகப் பயணம் கொற்றவை வணக்க முறையில் தொடங்கியது. அந்த உமையவளுக்கு பூசனை செய்த குடியில் தோன்றிய கம்பன், தமிழன்னைக்கும் தான் யாத்த பாவோலைகளைப் படையலிட்டான்.

மாசற்ற பொன்போன்ற மறுவற்ற சொற்களைக் கொண்டு பாபுனைந்து தமிழன்னைக்கு பெருமைசேர்த்த பாக்கோன், கம்பன்; அக்கவிச்சக்கரவர்த்தி-யின் புகழை டில்லி கம்பன் கழகத்தார் இரண்டு தினங்களாகப் பாடித் தீர்க்கின்றனர்.

கம்ப இராமாயணத்தின் கதைக்கரு, தமிழியத்திற்கும் தமிழினத்திற்கும் புறம்பானதுதான்; எங்கெங்கோ விரிந்திருந்த தமிழராட்சியை எங்கெனுமே இல்லாமல் செய்துவிட்ட ஆரியத்திற்கு இலக்கியக் கட்டியம் கூறும் புனைகாவியமான இராமன் பெருங்கதையை, தன் கவிப்பேராற்றலால் தமிழியக் காவியமாகவே உருமாற்றிய பாவல்லான், கம்பன்.

ஆதலால், இப்புவிமீதில் தமிழர் உள்ளவரை, தமிழிலக்கியம் தொடரும்வரை கம்பனும் வாழ்வான்; தமிழிலக்கியப் பூங்காவில் கம்ப இராமாயணமும் தமிழ் மணம் பரப்பும்.

இதை எதிரொலிக்கும் விதமாகத்தான், ‘கம்பவாசர்’ கே.வி.கே. பெருமாள் தலைமையிலான டில்லி கம்பன் கழகத்தினர், இப்பொழுது புது டில்லி பெருநகரில் கம்பன் புகழ் பாடி மகிழ்கின்றனர்.

எண்ணற்ற சாம்ராஜ்யங்களைக் கண்ட புது டில்லிப் பட்டணத்தில் கம்பன் இலக்கியக் கோட்டையைக் கட்டியெழுப்பும் முனைப்பில் டில்லி கம்பன் கழத்தினர் கடந்த ஈராண்டுகளாக முனைந்துள்ளனர். கடந்த ஆண்டு தொடங்கப்பட்ட இந்தக் கம்பன் கழத்தின் ‘2024 கம்பன் திருவிழா’ நேற்று சனிக்கிழமை பிற்பகலில் டில்லி தமிழ்ச் சங்கத்தின் திருவள்ளுவர் கலையரங்கில் தொடங்கியது.

மலேசிய நாடாளுமன்ற உறுப்பினரும் மலேசிய கண்ணதாசன் அறவாரியத் தலைவரும் கடார மண்டலத்து ‘எய்ம்ஸ்ட்’ பல்கலைக்கழக இணைவேந்தருமான ‘சொல்வேந்தர்’ டத்தோஸ்ரீ மு. சரவணன் இந்தக் கம்பன் திருவிழாவை நேற்று தொடங்கிவைத்தார்.

டில்லி கம்பன் கழகத் தலைவர் கே.வி.கே. பெருமாள்

தொடர்ந்து உரை நிகழ்த்திய சரவணன், “தமிழினத்திற்கு கிடைத்தற்கரிய பெரும் இலக்கிய சொத்து கம்பராமாயணம்” என்றார். கொழும்பு நகரில் நடைபெற்ற ஒரு கம்பன் நிகழ்ச்சியில் எதிர்பாராமல் கலந்துகொண்டதன் விளைவாக, தனக்கும் கம்பனின் தாக்கம் ஏற்பட்டது. “இதன் விலைவாகத்தான் இப்பொழுது கம்பன் மேடையில் பேசுகிறேன். தலைநகர விதியில் கம்பனின் புகழ்பாடும் டில்லி கம்பன் கழகத்தினருக்கு தமிழன்னை நிச்சயம் துணை நிற்பாள். இவர்களுக்கான பெருமையை தமிழ்த்தாய் கொண்டுவந்து சேர்ப்பாள்” என்று அவர் குறிப்பிட்டார்.

கம்ப இராமாயணத்தில் அரசியல், கல்வி, சமுகவியல் என எல்லாமும் பொதிந்துள்ளன. கவித் திறத்தாலும் தமிழியப்பாங்காலும் உயர்ந்து விளங்கிய கம்பனால், தமிழ் நிலத்திற்கு பெருமை; எத்துணை முறை படித்தாலும், ஒவ்வொரு முறையும் புதுப்புது செய்தியை கம்பனின் வரிகள் தருகின்றன.

அடுத்தத் தலைமுறைக்கும் எட்டும் வகையில், இந்தத் தலைமுறையிடம் பாரிய அளவில் கம்பனை எடுத்துச் செல்ல வேண்டும். அதன் ஒரு கூறுதான், டில்லி கம்பன் கழகத்தாரின் இத்தகைய-இன்றைய நிகழ்ச்சி என்று சரவணன் பேசினார்.

கம்பனின் இலக்கியப் பாட்டைக்கு தான் புதியவர் என்பதைப் போல காட்டிக் கொள்ளும் சரவணனின் தன்மை, ததும்பாத நிறைகுடத்தைப் போன்றது. பதவியும் பொறுப்பும் சேரச்சேர, முற்றிய நெற்கதிரைப் போன்று பணிகிறார்; சான்றோர் அவையில் நாணுகிறார்.

புத்தாயிரத்தாம் ஆண்டு தொடங்கிய நேரத்தில், ஆறு நாட்களுக்கு பல்லாயிரம் பேரைத் திரட்டி, நான்கு வேளை விருந்தோம்பலுடன் பல இலட்ச வெள்ளி செலவில் கோலாலம்பூரில் கம்பன் விழா நடத்திய இலக்கியகோமான் இதே, சரவணன்.

மலேசியாவின் முதல் பல்கலைக்கழமும் முதன்னிலை உயர்க்கல்வி நிறுவனமுமான மலாயாப் பல்கலைக்கழகத்தில் மூன்று நாட்களும் அடுத்த சில ஆண்டுகளில் மலேசியத் தமிழர்களின் தாய்க்கோயிலான கோலாலம்பூர் அருள்மிகு மாரியம்மன் ஆலய வளாகத்தையொட்டியுள்ள மாரியம்மன் மாளிகையில் மூன்று நாட்களுக்கும் கம்பன் விழாவை நடத்திய சரவணன், ஒன்றும் அறியாதவரைப் போல டில்லி மாநகரில் பேசி இருப்பது வியப்புதான்.

முன்னதாக, கம்பன் திருவுருவப் படத்தை டில்லி தமிழ்ச் சங்கத்தின் துணைத் தலைவர் பெ.ராகவன் நாயுடு திறந்துவைக்க, அடுத்து ‘கம்பன் அடிப்பொடி’ சா. கணேசனின் திருவுருவப் படத்தை சேது வள்ளியம்மாள் கல்வி அறக்-கட்டளையைச் சேர்ந்த முனைவர் சேது குமணனும் திறந்துவைத்து மலர் தூவி வணங்கினர்.

தொடர்ந்து டில்லி கம்பன் கழகத் தலைவர் கே.வி.கே. பெருமாள் ஆற்றிய தலைமையுரை, சிறப்பு விருந்தினரை அடையாளப்படுத்திய அறிமுகவுரை-யாகவும் அமைந்தது. கவிதா ஐஆர்எஸ் தகைமையுரை ஆற்றியபொழுது, கம்பனின் புகழ்பாடும் கம்பன் திருவிழாவை குறையின்றி நிறைவேற்றிட அரும்பாடாற்றிய டில்லி கம்பன் கழத்தினரைப் பெரிதும் பாராட்டினார்.

தொடர்ந்து விருதரங்கம் இடம்பெற்றது:
இந்த நிகழ்வில் முத்தாய்ப்பு அங்கமாக, இலக்கியப் படைப்பாளி பாவலர் மரபின் மைந்தன் முத்தையாவிற்கு ‘கம்பன் கவிமாமணி’ விருதும் மஸ்கட் சுரேஜமிக்கு ‘கம்பன் பணிச் செம்மல்’ விருதும் ‘கம்பன் நாவுக்கரசி’ விருது முனைவர் பர்வின் சுல்தானாவிற்கும் ‘கம்பன் இசைத் தாரகை’ விருது இளம்பாடகி செல்வி அனகா மணிகண்டனுக்கும் வழங்கப்பட்டன. கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ், கோடம்பாக்கத்து மார்கண்டேயன் சிவக்குமார், கவிதா ஐ.ஆர்.எஸ்., முனைவர் சேது குமணன் ஆகியோர் விருதுகளை விழாக் குழுவினர் சார்பில் வழங்கினர்.

தொடர்ந்து ‘கம்பன் நாவுக்கரசி’ முனைவர் சுல்தானா, இலங்கை ஜெயராஜ் ஆகியோர் பேசினர். கம்பனின் ஒவ்வொரு வரியும் ஒவ்வொரு பா அளவிற்கு பொருள் கொண்டவை என்றும் கம்பனுக்கு நடத்தும் விழா, தமிழர்கள் தங்களுக்குத் தாங்களே எடுத்துக்கொள்ளும் விழா எனவும் கம்பவாரிதி பேசினார்.

சிறப்பரங்கத்தில் உரைநிகழ்த்திய ‘கம்பன் கவிமாமணி’ மரபின் மைந்தன் முத்தையா, கம்பரும் வள்ளுவரும் என்ற தலைப்பில் பேசினார்.

உலக இலக்கிய மேடையில் தமிழுக்கு இருக்கை ஏற்படுத்திக் கொடுத்த திருக்குறள் ஈராயிர ஆண்டுகளுக்கு முற்பட்டது என்றாலும், 1812-ஆம் ஆண்டில்தான் திருக்குற்ள் குறித்து தமிழருக்குத் தெரியவந்ததாக நடிகர் சிவக்குமார் உரையாற்றியபோது குறிப்பிட்டார். இதற்கு முன்னம் திருக்குறள் குறித்து அவர் ஆற்றிய உரையின் காணொளியும் இந்த நிகழ்வில் ஒளிபரப்பப்பட்டது.

தில்லிக் கம்பன் கழகத்தின் நிறுவனரும் தலைவருமான கே.வி.கே. பெருமாள், செயலாளர் எஸ்.பி.முத்துவேல், டில்லித் தமிழ்ச் சங்கத் தலைவர் சக்தி பெருமாள், துணைத் தலைவர் ராகவன் நாயுடு, செயலாளர் இரா முகுந்தன் ஆகியோருடன் கம்பன் கழக நிர்வாகியரும் டில்லி கம்பன் கழக கம்பன் திருவிழா முதல் நாள் நிகவில் கலந்து கொண்டனர்.

செய்தி சம்பந்தப்பட்ட உங்கள் கருத்தை பதிவு செய்ய "வாட்சாப்" பட்டனை அழுத்துங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

அதிகம் பகிரப்பட்டவை