
-நக்கீரன்
கோலாலம்பூர், டிச.02:
நிகழும் 21-ஆம் நூற்றாண்டில் அழியக்கூடிய மொழிப் பட்டியலில் தமிழ் மொழியும் இருப்பதாக, ஐநா மன்றத்தின் யுனெஸ்கோ அமைப்பு தெரிவித்துள்ளது பலித்துவிடுமோ என்று ஐயமாக இருக்கிறது.
தமிழைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள், தங்களை அறியாமலேயே அணுதினமும் தமிழ்க்கொலை புரிந்து வருகின்றனர். இத்தகைய மொழிக்கொலை, தாய்க் கொலைக்கு சமம். எந்த நாட்டிலும் வாழ்கின்ற தமிழர்கள், இன்னொரு தமிழரிடம் கலப்பில்லாத தமிழில் பேசுவதில்லை.
தமிழ் நாட்டுத் தமிழர்கள், இலக்கத்தை ஒன்று, இரண்டு என தமிழில் சொல்லும் காலம் மலையேறிவிட்டது. உலகத் தமிழர் மாமன்றத்தின் தலைவராக இருந்த இரா. ஜனார்த்தனன், சிறந்த மொழிப்பற்றாளர். ஈழத் தமிழர்களுக்காக பரந்த அளவில் குரல் கொடுத்தவர். மாசற்ற இனப் பற்றாளர். தமிழ் நாட்டு சட்டமன்ற மேலவை உறுப்பினராக இருந்தவர். (ஆங்கிலேய ஆட்சியாளர்கள் உருவாக்கிய அந்த வரலாற்றுப்படியான அவையை, அரசியல் காழ்ப்பு காரணமாக, பிரதமர் இந்திரா காந்தியின் துணையுடன் கலைத்தவர் எம்ஜிஆர்.)
அவர், ஏறக்குறைய 20 ஆண்டுகளுக்குமுன், மலேசிய நண்பன் நாளேட்டு அலுவலகத்திற்கு வந்திருந்தார். செய்தியாளர் என்னும் முறையில், அவரை செவ்விகண்டு முடிந்தபின், பனை ஓலையில் தயாரிக்கப்பட்ட பெயரட்டையைக் கொடுத்தார். நான் வியப்பு மேலிட அதைப் பார்த்துக் கொண்டிருந்தபொழுது, அதில் உள்ள தொலைபேசி எண் பயனீட்டில் இல்லை என்றார். அப்படி யென்றால் மாற்று எண்ணைச் சொல்லுங்கள் என்றதும் அவர் ஆங்கிலத்தில் சொல்ல ஆரம்பித்தார்.
இடைமறித்த நான், தமிழாய்ந்த தமிழரான நீங்களே, இலக்கங்களை தமிழில் சொல்லாவிட்டால் எப்படி என்றதும், உடனே தன் இரு கரங்களாலும் என் வலக்கரத்தைப் பற்றிகொண்டு, இரண்டு-மூன்று முறை மன்னிப்பு கேட்ட அவர், இதைப்பற்றி யாரிடமும் சொல்லாதீர்கள் என்று திரும்பத் திரும்பக் கேட்டுக் கொண்டார்; அவர் இப்போது ‘நினைவில் வாழ்கிறார்’ என்பதால் குறிப்பிடுகிறேன்.
தமிழகத்து தமிழர்கள் ஒன்று, இரண்டு என்னும் இலக்கங்களை தமிழில் சொல்வதில்லை என்பதற்கு இதுவே சராசரி சான்றாகும்.
இதைப்போலத்தான், எந்த நாட்டிலும் வாழ்கின்ற தமிழர்கள் தமிழ்க் கொலையை மனங்கூசாமல் செய்து வருகின்றனர்; அதைப்போல, ஆன்மிக எல்லையிலும் தமிழ் அற்றுவிட்டது. அதுகுறித்து, தமிழர்கள் எண்ணிப் பார்ப்பதும் இல்லை.
இந்த நிலையில், தமிழ்ச் சமுதாயத்தில் மிகப்பெரும் ஆளுமையாக இருப்பவர்களும் தங்களுக்குப் பின் தத்தம் வழித்தோன்றலின்வழி, தம் ஆளுமையை, தமிழியப் பாங்கை தொடரச் செய்வதில்லை என்றால் எப்படி?
அந்த வரிசையில் கடைசியாக இணைந்திருப்பவர் வர்த்தகமேதாவி டான்ஸ்ரீ ஆனந்த கிருஷ்ணன். இவர் வாழ்ந்த காலத்தில், மலேசிய இந்திய சமுதாயத்தில், குறிப்பாக தமிழர் மத்தியில் ஒட்டும் உறவுமின்றி திரை மறைவிலேயே இருந்தார்.
இவர், ஏராளமாக கொடையளித்திருக்கிறார் என்பது உண்மைதான். ஆனால், அவற்றை தேர்ந்தெடுத்து திரைக்குப் பின்னால் இருந்து செய்ததாகத் தெரிகிறது. புத்தாயிரத்தாம் ஆண்டு தொடங்கிய காலத்தில் மலேசிய இந்து சங்கத்திற்கு இலட்சக் கணக்கில் நிதியுதவி செய்திருக்கிறார். அப்போது, இந்து சங்கத்தை வழிநடத்தியவர் யாழ்ப்பாணத் தமிழர்.
அதன்பிறகு இந்து சங்கத்திற்கு ஆனந்த கிருஷ்ணன் எந்த நிதியுதவியும் செய்யவில்லை. மலேசிய இந்து சங்கத்தின் இன்றைய தலைமை நிதிச் சிக்கலால் மிகவும் தள்ளாடி வருகிறது. இலாப நோக்கின்றி பரந்த அளவில் சமயப் பணி ஆற்றிவரும் இந்து சங்கத்திற்கு உதவ, இப்போது ஆனந்த கிருஷ்ணன் முன்வரவில்லை.
பொதுவாக, யாழ்ப்பாணத் தமிழர்கள் தங்களை தனித்து அடையாளப் படுத்திக் கொள்பவர்கள். குறிப்பாக, திருமண உறவு என்ற வகையில் எந்த வகையிலும் மற்றத் தமிழர்களுடன் கலந்துவிடாதபடி பார்த்துக்கொள்வார்கள். ஆனந்த கிருஷ்ணனும் யாழ்ப்பானத் தமிழர் என்பதால், அவரின்போக்கு குறித்து ஒன்றும் சொல்வதற்கில்லை.
ஆயினும், பொதுவெளியில் சாதாரண மக்கள் எவரும் அவரை எங்கனும் கண்டதில்லை. ஆலய நிகழ்ச்சியிலோ, சமுதாய ஒன்றுகூடலிலோ, அரசியல் கூட்டங்களிலோ அவர் தென்பட்டதில்லை;

தன் பாரிய தொழில் காரணமாக, பெரும்பாலும் அவர் வெளிநாடுகளில் இருக்க நேர்ந்தது உண்மைதான்; வெளிநாடுகளில் வீடு வாசலைக் கொண்டிருந்ததும் சரிதான். ஆனாலும், அவர்தம் 86 ஆண்டு கால வாழ்வில் ஒருமுறையேனும் சொந்த சமுதாயத்தில் கலந்துறவாடியதைக் கண்டவர் யாரேனும் இருந்தால் அது விந்தைதான்.
அவர் நடத்திய அஸ்ட்ரோ தொலைக்காட்சி நிறுவனத்தில், இலட்சக் கணக்கான இந்தியர்கள், குறிப்பாக தமிழர்கள் வாடிக்கையாளராக உள்ளனர். அவ்வாறான அஸ்ட்ரோ வாடிக்கையாளர்களில் ஒருவர்கூட மனநிறைவு கொண்டதில்லை. நலிந்த குடும்பங்க்களைச் சேர்ந்த இலட்சக் கணக்கான வாடிக்கையாளர்கள் கசக்கிப் பிழியப்படுகின்றனர்.
இப்படியெல்லாம் கோடிக் கணக்கில் சம்பாதித்த ஆனந்த கிருஷ்ணனின் மூன்று மக்களில் இருவர் பெண்கள். அவர்களைப் பற்றி வெளி உலகிற்கு எதுவுமேத் தெரியாது; இதற்கு பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்கள் இருக்கக்கூடும்.

ஆனாலும் அரசியல், ஆன்மிகம், வர்த்தகம் உள்ளிட்ட எண்ணற்ற துறைசார்ந்த தலைவர்கள், நிபுணர்கள், பெரிய மனிதர்கள் உலகம் முழுவதும் உள்ளனர். தகவல் ஊடகத்திலும் பொதுவெளியிலும் அத்தகைய பெருமக்களைப் பற்றிய தகவல் தெரியாமல் இல்லை.
இன்னொருவரான ஆண்மகன், தாய்லாந்து வம்சாவளியாக உருமாறி, சின்னஞ்சிறு வயதிலேயே புத்தத் துறவியாக இருக்கிறார். புத்த மதம் ஒன்றுதான்’ ஆனால், பௌத்த துறவியர் நாட்டுக்கு நாடு, இனத்திற்கு இனம் மாறுபட்டவர்களாக இருப்பர், குறிப்பாக, இலங்கை பௌத்த துறவியர் முழு அரசியல்வாதிகளாகத் திரிவர்.
மொத்தத்தில், உலக நாடுகளில் அகலக் கால் வைத்து பெரும் வர்த்தக சாம்ராஜியத்தைக் கட்டமைத்த டான்ஸ்ரீ ஆனந்தகிருஷ்ணனின் தமிழிய மரபு அவருடன் நிறைவுபெறுகிறது.
அவர் மட்டுமல்ல; எண்ணற்ற தலைவர்களின்-பெருமக்களின் நிலையும் அதுவாகத்தான் உள்ளது. இது தமிழினத்திற்கு பேரிழாப்பாகும்.
மலேசிய இந்திய சமுதாயத்தை ஒரு தலைமுறைக் காலத்திற்கு வழிநடத்தியதுடன், மலேசிய இந்தியர்களை 30 ஆண்டுகளாக மத்தியக் கூட்டரசில் பிரதிநிதித்தவர் துன் சாமிவேலனார். அந்த சாதனைத் தலைவரின் மகனுக்கு தமிழ் படிக்கத் தெரியாது; அவருக்காக ஒரு நினைவிடத்தைக்கூட எழுப்ப அவரின் வழித்தோன்றலினருக்கு ஆகவில்லை.
அப்படிப்பட்ட சாமிவேலுவின் அரசியல் பாதையில் உற்ற தளபதியாக இருந்து, பின் நேர் அரசியல் எதிரியாக மாறிய டான்ஸ்ரீ எம்.ஜி. பண்டிதன் தன்னை மலையக புரட்சித் தலைவராக பிரகடனப்படுத்தியவர். தமிழக எம்ஜிஆரின் கட்சி சின்னமான இரட்டை இலையைப் போல, இவர் மூவிலையை கட்சி சின்னமாகக் கொண்டிருந்தார். அவரின் வழித் தோன்றலும் தமிழ்ப் பாங்கின்றிதான் வாழ்கிறார்.

மலேசியத் தமிழ்ப் பத்திரிகை உலகில் தனிக்காட்டு ராசாவாக வலம் வந்தவர் ஆதி. குமணன்; முன்பு இளைய தமிழவேள் என்றும் இப்பொழுது தமிழவேள் என்றும் அழைக்கப்படுகின்ற ஆதி குமணனின் வழித் தோன்றலும் தமிழ்ச் சமுதாயத்திற்கு அந்நியப்பட்டி நிற்கிறார்.
மலேசியாவிலும் சிங்கப்பூரிலும் தமிழவேள் என்று முதன்முதலில் ஒருசேர அழைக்கப்பட்ட கோ.சாரங்கபாணியின் தமிழ் மரபை கட்டிக்காக்க என்றில்லாவிட்டாலும் சுட்டிக்காட்டவாவது அவரின் வழித்தோன்றலுக்கு வகையில்லை.
சாமிவேலுவுக்கு இணையாக அரசியல் புரிந்த மக்கள் தலைவர் டான்ஸ்ரீ சுப்ராவின் வழித்தோன்றலுக்கும் தமிழ்ப் படிக்கத் தெரியாது என்பதை என்னவென்று எடுத்துரைப்பது?
மக்கள் நீதிக் கட்சி சார்பில் இன்று மக்கள் பிரதிநிதிகளாக இருக்கும் ஏனையோருக்கு தமிழ்ப் படிக்கத் தெரியாதென்று நினைக்கிறேன். இப்படி சமுதாய வீதியில் தலைவராகவும் மக்கள் பிரதிநிதியராகவும் இருப்பவர்கள் ஏதோவொரு வகையில் சொந்த தாய்மொழியை அடியோடு தொலைத்தால், சாதாரண மக்களுக்கு தமிழ்ப் பற்றும் ஈடுபாடும் எங்கிருந்து வரும்.

தாய்மொழிமீதான பற்று குறித்தும் இனப்பற்று குறித்தும் தெளிவுபெற இஸ்ரேலியர்களின் வாழ்க்கை முறைபற்றி தமிழர்கள் சிறிதளவேனும் தெரிந்துகொள்வது நலம் பயக்கும்.
மாற்றார் நிலத்தில் குடிபுகுந்த அவர்கள், அதை சொந்த நிலமாக மாற்றியதும், பாறை நிலத்தையும் பொன்விளையும் வேளாண் விளைநிலமாக உருமாற்றும் வித்தையைப் பெற்றிருப்பதும் எப்படி?
இஸ்ரேலிய மண்ணில் வாழ்பவர்கள் பெரும்பாலும் கலப்பு மணம் புரிவதில்லை; அப்படியே நடந்தாலும் ஆண்-பெண் யாராயினும் தம் தாய்மொழியை தம் வழித்தோன்றலுக்கு சிந்தாமல் சிதறாமல் கடத்தத் தவறுவதேயில்லை.
தாய்மைப்பேறு அடைந்திருக்கும் ஒவ்வொரு இஸ்ரேலித் தாயும், தன் கருவறைக்குள்ளேயே பத்து மாத பயிற்சியை மொத்தமாக அளித்துவிடுவார். வீரம், விவேகம், பொது அறிவு, இசை அறிவு, இனப்பற்று, மொழிப்பித்து, இனத்திற்காகவும் மொழிக்காகவும் எத்தகைய ஈகத்தையும் புரிய அணியமாக இருக்கும் துணிவு யாவும் உள்ளடக்கிய குழந்தையாக தாய்மடியில் தவழும் முதற்பொழுதிலேயே திகழும் ஒவ்வொரு இஸ்ரேலியக் குழந்தையும்.
குழந்தையை சுமந்திருக்கும் ஒவ்வொரு இஸ்ரேலியத் தாயும் எப்பொழுதும் தன் அடிவயிற்றை இரு கரங்களும் தாங்கியபடி, தழுவியபடி உள்ளிருக்கும் குழந்தையுடன் வெளியிருந்த வண்ணமே பேசுவார். கணிதப் பாடம் சொல்லிக் கொடுப்பார்கள். உலகில் வாழ வந்ததும் தம் இன எதிரி ஒருவரையாவது வீழ்த்த வேண்டும். அதுதான், தம் தாய் மண்ணுக்கு செலுத்தும் வீர வணக்கம் என்று கருவறைப் பாடம் நடத்துவார்கள்.
ஐயோ, வாழ்க்கை சிரமமாக இருக்கிறதே; நிறைவாக உறங்கக்கூட முடியவில்லையேயென அலுப்பும் சலிப்புமுற்று, காத்திருந்து, காத்திருந்து ஏதோ சிற்சில தாயர் ஒரு தசைப் பிண்டத்தை வெளியேத் தள்ளுவதைப் போல ஒரேயொரு இஸ்ரேலியத் தாய்கூட செய்ய மாட்டாள்.

தமிழர்கள் பொதுவாக இன உணர்விலும் மொழிப்பற்றிலும் மந்தமானவர்கள். அரசியல், ஆன்மிகத்திலும்கூட திடமான சிந்தை கொண்டிராதவகள்.
மொழிப் பற்றில் சோடையானவர்கள் என்பதற்கு மலையாள, தெலுங்கு, கன்னட மொழியினரே தக்க சான்று. இவர்கள் அனைவரும் முன்னாள் தமிழர்கள். இதை இந்நாள் தமிழர்களும் உணர்வதில்லை; அந்நாளைத் தமிழரும் எண்ணிப் பார்ப்பதில்லை.


